தலைநகர் குழப்பம்! | ஆந்திர தலைநகரம் குறித்த தலையங்கம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
 ஆந்திரத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக ஹைதராபாத் அடுத்த பத்து ஆண்டுகள் தொடரும் என்று தீர்மானிக்கப்பட்டது. பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணம் நெருங்கிவிட்ட நிலையில், இன்னும்கூட ஆந்திரத்தின் தலைநகரம் எது என்பது முடிவாகாமல் இருக்கிறது.
 மொழிவாரி அடிப்படையில் தெலுங்கு பேசும் மக்களின் தாயகமாக ஆந்திரம் உருவானதும், அதன் தலைநகராக ஹைதராபாத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வரலாற்று நிகழ்வுகள். ஆந்திரம் பிரிக்கப்பட்டபோது ஹைதராபாத் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தெலங்கானாவுக்கு மட்டுமான தலைநகரமாக மாறும் என்பது தெளிவாகவே அறிவிக்கப்பட்டது.
 2014-இல் அன்றைய முதல்வராக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஹைதராபாதுக்கு பதிலாக புதியதொரு தலைநகரை நிர்மாணிக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். ஹைதராபாதை மேம்படுத்தியதைப் போல புதியதொரு தலைநகரை உருவாக்கி ஆந்திரத்துக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்கிற முனைப்பில் அவர் முன்மொழிந்த திட்டம்தான் தலைநகர் அமராவதி.
 அமராவதியை உருவாக்குவதற்காக இந்தியாவின் வளமையான விவசாய நிலங்கள் கொண்ட பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் நாயுடுவால் முன்மொழியப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு வழங்கிய நிலத்துக்கான ஆண்டு வாடகையும், அதற்குப் பிறகு தலைநகர் அமராவதியில் ஏக்கர் ஒன்றுக்கு 3,000 சதுர அடி மனையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
 கிருஷ்ணா, குண்டூர் பகுதிகளிலுள்ள விவசாயிகள் அன்றைய முதல்வர் நாயுடுவின் வாக்குறுதியால் கவரப்பட்டு, தங்களது நிலங்களை மனமுவந்து வழங்கினர். மனைவணிக மதிப்பு பல மடங்கு அதிகரித்து, முதலீடுகள் அமராவதியில் குவிந்தன. புதிய தலைநகரமான அமராவதியை கட்டமைக்கும் பணி அதிவேகமாக நடந்தது. சந்திரபாபு நாயுடுவின் கனவு மட்டுமல்ல, மனமுவந்து தங்களது நிலங்களை வழங்கிய ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கனவும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவால் தகர்ந்தது.
 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானபோது, ஆந்திரத்துக்கு ஒரு தலைநகருக்கு பதிலாக மூன்று தலைநகரங்கள் என்று அறிவித்தார். வடக்கு ஆந்திரம், தெற்கு ஆந்திரம், ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகளிலும் தலைநகரங்கள் அமைப்பதுதான் அவரது திட்டம். ஆந்திரத்தின் தலைமைச் செயலகத்தை விசாகப்பட்டினத்திலும், சட்டப்பேரவையை அமராவதியிலும், உயர்நீதிமன்றத்தை கர்னூலிலும் அமைக்கப்போவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தபோது, அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் கொதித்தெழுந்தனர். அவர்கள் போராட்டத்துடன் நின்றுவிடாமல் நீதிமன்றத்தையும் நாடினார்கள்.
 2021-இல் மூன்று தலைநகரத் திட்டத்தை கைவிட்டார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திர உயர்நீதிமன்றம், ஆந்திர அரசு தனது அமராவதி திட்டத்தை தொடர வேண்டுமென்றும், கைவிடலாகாது என்றும் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது ஜெகன்மோகன் ரெட்டி அரசு.
 மன்னராட்சி காலத்தில் அரசர் இருக்கும் இடம்தான், அது சிற்றூராக இருந்தாலும்கூட, அந்த நாட்டின் தலைநகரமாகக் கருதப்பட்டது. இப்போதும்கூட அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களின் தலைநகரங்கள் முக்கியத்துவம் பெற்றவை அல்ல. இன்றைய சூழலில் தலைநகரம் என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடி சட்டம் இயற்றும், அமைச்சர்களின் தலைமையில் பல்வேறு துறைகளின் நிர்வாக மையமாகச் செயல்படும் இடம்தான். அதற்கு மேல் முக்கியத்துவம் கிடையாது.
 ஆந்திரத்தைப் பொறுத்தவரை தெலங்கானாவும் பிரிந்து, தகவல் தொழில்நுட்ப நகரமான ஹைதராபாதையும் இழந்த பிறகு விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகள்தான் எஞ்சின. ஹைதராபாதை தொழில்நுட்ப நகரமாக மாற்றி, அந்நிய முதலீடுகளை ஈர்த்ததுபோல, ஆந்திரத்தையும் உருவாக்க நவீன கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்று கருதினார் சந்திரபாபு நாயுடு. அதன் மூலம்தான் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பதால் அமராவதியை நிர்வாகத் தலைநகராக மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழும் ஒருங்கிணைந்த நவீன நகரமாகவும் உருவாக்க அவர் திட்டமிட்டார்.
 அந்தத் திட்டம் இப்போது அரைகுறையாக நிற்கிறது.
 மாநில நிர்வாகம் இனிமேல் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்திலிருந்து செயல்படும் என்று தில்லியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. அமராவதியில் தொழிற்சாலைகளையும், கல்வி நிறுவனங்களையும், வணிக வளாகங்களையும் நிறுவ முதலீடு செய்தவர்கள் திகைப்பில் திணறுகிறார்கள். தங்களது நிலங்களை வழங்கிய விவசாயிகள் நீதிமன்றத்தின் முடிவு தங்களுக்கு சாதகமாக வரும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது வருங்காலம் குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
 ஆந்திரத்தின் தலைநகரம் எது என்கிற குழப்பத்துக்கு உச்சநீதிமன்றம்தான் நல்ல தீர்ப்பை வழங்கி முடிவு கட்ட வேண்டும். இப்படியே இந்தக் குழப்பம் தொடருவது ஆந்திரத்துக்கும், அதன் வருங்காலத்துக்கும் நல்லதல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com