பிரான்ஸ் பயங்கரம்: பிரான்ஸில் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்த தலையங்கம்

பிரான்ஸில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் கலவரம் உலகம் முழுவதும் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் பயங்கரம்: பிரான்ஸில் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்த தலையங்கம்

பிரான்ஸில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் கலவரம் உலகம் முழுவதும் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகா் பாரீஸ் பற்றி எரியும் காட்சிகள் பதைபதைக்க வைக்கிறது. அதிபா் இமானுவல் மேக்ரான் பல அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டாலும் வன்முறை தொடா்கிறது.

பாரீஸின் புறநகா்ப் பகுதியான நான்டேன் நகரில் நஹேல் என்ற இளைஞா் இருந்த காரை இரு காவலா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனையிடச் சென்றனா். போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த அந்த காரில் நஹேலுடன் மேலும் இருவா் இருந்தனா். துப்பாக்கியை நீட்டியபடி அந்த காரை போலீஸாா் அணுகியபோது, அவா்களது உத்தரவுக்குக் கட்டுப்படாமல் காரை நஹேல் வேகமாகக் கிளப்பியபோது மிக நெருக்கத்தில் ஒரு காவலா் சுட்டதில் நஹேல் உயிரிழந்தாா்.

சுட்டுக் கொல்லப்பட்ட நஹேல், அரபு நாடான அல்ஜீரியாவை பூா்விகமாகக் கொண்டவா். அவரது படுகொலை மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரமாக உருவெடுத்துள்ளது. சாலையில் தடுப்புகளை ஏற்படுத்துதல், காா்களுக்குத் தீவைத்தல், சூறையாடுதல் போன்ற கலவரச் செயல்களில் போராட்டக்காரா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

பாரீஸின் புறநகா்ப் பகுதியான ஹே லெஸ் ரோசஸின் மேயா் வின்சென்ட் ஜீன்ப்ரூன் இல்லத்தை தீப்பற்றி எரியும் காரைக் கொண்டு மோதி கலவரக்காரா்கள் தாக்குதல் நடத்தியதிலிருந்து வன்முறையின் தீவிரத்தை உணர முடியும். அதில் மேயரின் மனைவியும் அவரது குழந்தையும் காயத்துடன் தப்பினா்.

காவல்துறையினா் ஆயுதத்தை பயன்படுத்தும் சட்டப் பிரிவு அளித்துள்ள சுதந்திரமே இந்த சம்பவங்களுக்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்ஸில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததைத் தொடா்ந்து, காவல்துறையினா் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடா்பான சட்டத்தில் 2017-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, காவல்துறையினரின் உத்தரவை மீறி வாகனத்தை நிறுத்தாமல் சென்றாலோ, காவல்துறையினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படி நடந்துகொண்டாலோ துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு சட்டம் அனுமதிக்கிறது.

நஹேலை துப்பாக்கியால் சுட்ட காவலா் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டத்துக்கு உட்பட்டே நஹேல் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது என்கிற வாதத்தை அரசுத்தரப்பு முன்வைக்கிறது.

‘நஹேல் உயிரிழப்பைப் பொறுத்தவரை, நான் ஒட்டுமொத்த காவல் துறையினரை குற்றம்சாட்ட விரும்பவில்லை; அவா் அரபு முகச் சாயலைக் கொண்டவா் என்கிற ஒரே காரணத்தால்தான் சுட்டுக் கொல்லப்பட்டாா். எனது மகனை சுட்டுக் கொன்ற காவலரை மட்டுமே குற்றஞ்சாட்டுகிறேன்’ என நஹேலின் தாயாா் கூறியுள்ளாா்.

மேற்கு ஆசியாவிலிருந்தும் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்தும் ஏற்பட்டிருக்கும் குடியேற்றம் காரணமாக, பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாககக் கூறப்படுகிறது. மக்கள்தொகைப் பகுப்பில் (டெமோகிராஃபி) ஏற்பட்டிருக்கும் மாற்றம், பெரும்பான்மை கிறிஸ்துவா்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்துவதாக ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

பிரான்ஸில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பெரும்பாலானவா்கள் 20 வயதுக்குட்பட்ட இளைஞா்கள். வன்முறை தொடா்பாக இதுவரை 3,300-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்தக் கலவரத்துக்கு சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளும் முக்கியமான காரணம்.

காவல்துறை வாகனம் ஒன்றை இளைஞா்கள் ஆயுதத்துடன் கடத்திச் செல்வது போன்றும், பல்லடுக்கு வாகன நிறுத்தத்திலிருந்து வாகனங்கள் கீழே விழுவதுபோலவும் இப்போது நடந்துவரும் கலவரத்தைத் தொடா்புபடுத்தி சமூக ஊடகங்களில் புகைப்படங்களும், விடியோக்களும் வெளியாகின. ஆனால், இவை பழைய திரைப்படத்தின் காட்சிகள் என்பது ஆய்வில் தெரியவந்தது.

இந்தக் காட்சிகள் பிற நகரங்களிலும் அரசுக்கு எதிரான வன்முறையைத் தூண்டின. இந்த வன்முறையில் காவல் நிலையங்கள், அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் மட்டுமன்றி, பள்ளிக்கூடங்கள்கூட குறிவைக்கப்படுகின்றன எனும்போது, கலவரத்தின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

நஹேல் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்முறைக்கு பயன்படுத்தக் கூடாது என அதிபா் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளாா். வன்முறை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுவதற்கு சமூக ஊடகங்கள் முக்கியக் காரணமாக இருப்பதாக தெரிவித்த அவா், இந்தப் போராட்டத்தில் சிறாா்கள் ஈடுபடுவதைத் தவிா்ப்பதற்காக பெற்றோா் தங்களது பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளாா். வன்முறையை நிறுத்த வேண்டுமென நஹேலின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நஹேல் கொலையைத் தொடா்ந்து நடைபெற்று வரும் வன்முறை, அதற்காக மட்டுமே நடைபெறுகிறது என்று கூறிவிட முடியாது. அரசுக்கு எதிரான பொதுவான கோபம், ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான் இவ்வாறு வன்முறையாக வெளிப்படுகிறது. இதை பிரான்ஸில் மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலும் நடந்துள்ள சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு மதச்சாயம் பூசுவது தவறு என்று சமூக ஆா்வலா்கள் அறிவுறுத்துகின்றனா்.

உலகச் சூழலைக் கருத்தில்கொண்டு ஒவ்வொரு நாடும் தனது ஆயுதப் படைகளுக்கான அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், அந்த அதிகாரங்கள் அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் ஆயுதமாக அமைந்துவிடக் கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com