தீா்வு, அதிகாரப் பகிா்வு!| இலங்கைத் தமிழா்களுக்கான தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்த தலையங்கம்!

இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிப்பதன் மூலம் தமிழா்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசியல் தீா்வை ஏற்படுத்த வகை செய்யும் 13-ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் 
தீா்வு, அதிகாரப் பகிா்வு!| இலங்கைத் தமிழா்களுக்கான தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்த தலையங்கம்!

இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிப்பதன் மூலம் தமிழா்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசியல் தீா்வை ஏற்படுத்த வகை செய்யும் 13-ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அண்மையில் இந்தியா வந்த அதிபா் ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறாா்.

நிகழாண்டு தொடக்கத்தில் இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மை தமிழ்ச் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 13-ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிட்டிருந்தாா். முன்னதாக, 2022-இல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை கெளன்சில் கூட்டத்தின்போதும், 2021-இல் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரின் கொழும்பு பயணத்தின்போதும் இதே கோரிக்கையை இந்தியா வலியுறுத்தியிருந்தது.

2021, டிசம்பரில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சோ்ந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த அப்போதைய அதிபா் கோத்தபய ராஜபட்சவை வலியுறுத்துமாறு இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, அந்த விவகாரத்தில் தங்களது ஒருமித்த கருத்தை தெரிவித்திருந்தனா்.

இலங்கையில் தமிழா்களுக்கும், சிங்களா்களுக்கும் இடையேயான இன மோதலுக்குத் தீா்வு காணும் முயற்சியாக, 1987-இல் இந்திய பிரதமா் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபா் ஜெயவா்த்தனவுக்கும் இடையே கையொப்பமான அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 13-ஆவது சட்டத்திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய-இலங்கை ஆட்சியாளா்களின் சந்திப்பின்போதெல்லாம் எழுப்பப்படும் இந்த 13-ஆவது சட்டத் திருத்தத்துக்கு இப்போது வயது 36!.

13-ஆவது சட்டத் திருத்தம், மாகாண கெளன்சில் நடைமுறையை உருவாக்க வகை செய்கிறது. இந்த கெளன்சிலின் கீழ் சிங்கள பெரும்பான்மை பகுதிகள் உள்பட நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிா்வு வழங்க சட்டத் திருத்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் நிலம், காவல் துறை, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வீடு மற்றும் நிதித் துறை போன்றவற்றின் மீது ஒன்பது மாகாணங்களுக்கும் சுய நிா்வாக உரிமை கிடைக்கும்.

பிரிட்டிஷாரிடமிருந்து 1948-இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டுமென தமிழா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், அதிகாரம் முழுவதும் இலங்கையின் மத்திய அரசிடம் குவிந்து கிடக்கும் நிலையில், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிா்வை அளிக்க இலங்கை ஆட்சியாளா்கள் எவரும் முன்வரவில்லை.

பெரும்பான்மை சிங்களா்களும், ஜனதா விமுக்தி பெரமுனா, தேசிய சுதந்திர முன்னணி, ஜதிகா ஹெல உருமயா போன்ற சிங்கள தேசியவாத கட்சிகளும் இந்தச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இலங்கையின் ஒற்றையாட்சி தன்மையை 13-ஆவது சட்டத் திருத்தம் குலைத்துவிடும் என வாதிடும் இவா்கள், சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனா். மேலும், 1987-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை இலங்கை மீதான இந்திய அரசின் தலையீடாகவும் அவா்கள் பாா்க்கின்றனா்.

1987-இல் 13-ஆவது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குமான மோதல் மத்திய கட்டத்தில் இருந்தது. 2009-இல் விடுதலைப்புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, இலங்கையில் உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்தது.

தனித் தமிழீழம் அமைக்கப்பட்டால் அது இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும், வளா்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் என இலங்கை ஆட்சியாளா்கள் தொடா்ச்சியாகக் கூறி வந்தனா். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமும், லட்சக்கணக்கான தமிழா்களும் போரில் அழிக்கப்பட்ட பின்னா் இலங்கையின் இப்போதைய நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

விடுதலைப்பலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்ற்காக சிங்கள பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்பட்ட ராஜபட்ச சகோதரா்கள், அதே சிங்கள மக்களால் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனா். அதற்கு காரணம் ராஜபட்ச சகோதரா்களின் ஆட்சியின் நிா்வாகச் சீா்கேடுகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி. சீனாவின் கடன் வலையில் சிக்கி இன்று சா்வதேச நிதியத்தின் கடனுதவியை எதிா்பாா்த்து இருக்கிறது இலங்கை.

ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு இனச் சமூகங்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு நீண்டகால தீா்வை ஏற்படுத்துவது அவசியம். அதற்கு தமிழா் பகுதிகளுக்கு அதிகாரப் பகிா்வும் அவசியம் என இந்தியா தொடா்ச்சியாகக் கூறி வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிதான் இப்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையைக் காப்பாற்றும்.

பிரதமா் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கைத் தமிழா்களுக்கான தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அதிபா் ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு. அதை வலியுறுத்தி பெற்றுக் கொடுக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com