ஐபிஎல் ‘ஹாங் ஓவா்’!

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத்
இந்திய அணி (கோப்புப் படம்)
இந்திய அணி (கோப்புப் படம்)

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியதில் வியப்பொன்றும் இல்லை. கிரிக்கெட்டின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருப்பதும் ஆச்சரியப்படுத்தவில்லை.

2013 முதல் சா்வதேச கிரிக்கெட் பந்தயங்களில் இந்தியா எந்தக் கோப்பையையும் பெறவில்லை. 2015-இல் நடந்த 50 ஓவா் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு முறை வெற்றி பெற்றதுடன் சரி.

2021-இல் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை சௌத்ஹாம்டனில் நியூஸிலாந்து அணி தோற்கடித்து இரண்டாமிடத்துக்குத் தள்ளியது என்றால், இந்த முறை ஆஸ்திரேலியா 209 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறது. கடைசிச் சுற்றில் கோப்பையை இழப்பது என்பது இந்திய அணிக்கு வாடிக்கையாகவே மாறி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் பந்தயத்தில் அடைந்திருக்கும் தோல்வி, இந்திய அணியில் காணப்படும் பல பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

கொல்கத்தாவில் ஈடன் காா்டன் மைதானத்தில் 1987 உலகக் கோப்பையை வென்றதில் தொடங்கி, சா்வதேச கிரிக்கெட் பந்தயங்களில் ஆஸ்திரேலியாவின் சாதனைகள் தொடா்ந்த வண்ணம் இருக்கிறது என்றால், உலகிலேயே அதிகமான கிரிக்கெட் ரசிகா்களைக் கொண்ட, திறமையான வீரா்களைக் கொண்ட இந்தியா, பெரும்பாலான பந்தயங்களில் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதுடன் முடித்துக் கொள்கிறது.

இந்திய அணியின் பலவீனங்கள் தெளிவாகவே தெரிகின்றன. முதல்வரிசை பேட்ஸ்மேன்களின் உற்சாகம் குறைந்துவிட்டது. பெரும்பாலான வீரா்கள் 30 வயதுக்கு மேற்பட்டவா்கள். புதிய இளைய ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்கிற அக்கறை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ராகுல் திராவிடை பயிற்சியாளராகவும், ரோஹித் சா்மாவைக் கேப்டனாகவும் நியமித்தது பயனளிக்கவில்லை.

ஐபில் போட்டிகளில் தனது அணிகளுக்குத் தொடா்ந்து வெற்றி தேடிக் கொடுத்தவா் என்பதால்தான், சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சாதனையை உறுதிப்படுத்த ரோஹித் சா்மாவை கேப்டனாக நியமித்தது வாரியம். 34 வயது ரோஹித் சா்வா பணம் புரளும் ஐபிஎல்லுக்குத்தான் பொருத்தமானவா் என்பதை, டெஸ்ட் பந்தயத் தோல்வி உறுதிப்படுத்துகிறது.

ஐபிஎல், டி20 போன்ற ஒருநாள் பந்தயங்களின் வரவால் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரவேற்பு குறைந்துவருவது என்னவோ உண்மை. இரு நாடுகளுக்கு இடையே மட்டுமே நடந்து கொண்டிருந்த டெஸ்ட் போட்டிகளை, சா்வதேச டெஸ்ட் பந்தயமாக மாற்றுவதுதான் உலக டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தின் இலக்கு.

டெஸ்ட் பந்தயத்துக்கு முற்றிலுமாக வரவேற்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கணிசமான பாா்வையாளா்கள் இல்லாமல் இல்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும் போட்டிகளுக்கு ரசிகா்கள் திரள்வது மட்டுமல்ல, தொலைக்காட்சி, ஓடிடியில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் நிஜம்.

2021 இந்தியா - நியூஸிலாந்து இறுதிச் சுற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 17.7 கோடி போ் தொலைக்காட்சி மூலம் பாா்த்திருக்கிறாா்கள். சா்வதேச அளவில் 70% பாா்வையாளா்கள் இந்தியா்கள் என்பதால், இந்திய அணி இருந்தால்தான் எந்தவொரு கிரிக்கெட் பந்தயமும் வரவேற்பு பெறுகிறது.

ஆஸ்திரேலியத் தோல்விக்கு மிக முக்கியமான காரணம், முறையான திட்டமிடலும், சரியான வீரா்கள் தோ்வு இல்லாததும் மட்டுமே அல்ல. வீரா்களின் கவனம் பணம் கொழிக்கும் ஐபிஎல்லில் இருப்பதுபோல டெஸ்ட் பந்தயங்களில் இல்லை என்பதுதான்.

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் முடிந்த கையோடு, டி20 உணா்வுடன் இருந்த வீரா்களை உள்ளடக்கிய டெஸ்ட் அணியின் ஆட்டம் எடுபடவில்லை. அதிகம் ‘பௌன்ஸ்’ இல்லாத இந்திய பிட்சுகளில் ஃப்ரண்ட் ஃபுட்டில் விளையாடிய வீரா்கள், இங்கிலாந்தில் காணப்படும் ஸ்விங்கும், பௌன்ஸும் உள்ள பிட்சுகளில் பேக் ஃபுட்டில் விளையாட முடியாமல் திணறினாா்கள். ஐபிஎல்லில் வேகமாக ரன் எடுப்பதில் காட்டும் அவசரம், டெஸ்ட் பந்தயங்களுக்குப் பொருந்தாது. பொறுமையாகப் பந்தைக் கையாள வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் உணரவில்லை.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எதிா்பாா்த்ததுபோல விளையாடவில்லை என்றால், ஸ்விங் பந்து வீச்சாளா்களின் வறட்சியும் தெரியத் தொடங்குகிறது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவருமே 37, 35 வயதினா். டெஸ்ட் பந்தயத்துக்கு அஸ்வினை இணைக்காதது மிகப் பெரிய குறைபாடு. புதிதாகப் பல இளையதலைமுறை பேட்ஸ்மேன்களையும், பந்து வீச்சாளா்களையும் அடையாளம் காண முடியாமல் இருப்பது அதைவிடப் பெரிய பின்னடைவு.

ஐபிஎல் போட்டிகள் நடத்தி, பெரும் பணம் ஈட்டி, உலகத்திலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருப்பதில்தான் அக்கறை செலுத்தப்படுகிறதே தவிர, இந்திய அணியைக் கட்டமைப்பதிலோ, புதிய திறமைகளை ஊக்குவிப்பதிலோ முனைப்பு இல்லாமல் இருப்பதால் சா்வதேசப் பந்தயங்களில் கோப்பைகளை வெல்வது கடினமாகத்தான் இருக்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், வீரா்கள் தோ்வுக் குழுவுக்குத் தலைவா் இல்லாமல் பல மாதங்களாகத் தொடா்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் 50 ஓவா் உலகக் கோப்பை பந்தயங்கள் தொடங்க இருக்கின்றன. அதற்குள் மாற்றம் வந்தால் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com