நியாயமே இல்லை! சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த தலையங்கம்

மானியமல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,103-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.
நியாயமே இல்லை! சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த தலையங்கம்

மானியமல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,103-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அதேபோல, வணிக பயன்பாட்டு உருளை விலை ரூ. 350.50 அதிகரிக்கப்பட்டு ரூ. 2,119.50-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும், பெட்ரோலியப் பொருள்கள் விலை நிா்ணயத்துக்கும் தொடா்பு கிடையாது என்கிற கூற்று நகைப்புக்குரியது.

ஒருபுறம் சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகரிக்கப்படும்போது, இன்னொருபுறம் சா்வதேச சந்தையில் விலை குறைந்ததைத் தொடா்ந்து விமான எரிபொருளின் விலை 4% குறைக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளையாக பெட்ரோல், டீசல் விலையில் 11 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. அடுத்தாற்போல, அதன் விலையும் அதிகரிக்கப்பட்டால் வியப்படையவும் தேவையில்லை.

ஏதாவது தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு ஏற்படாமல் இருப்பதும், வாக்குப் பதிவு முடிந்தவுடன் விலைகள் அதிகரிக்கப்படுவதும் சொல்லி வைத்தாற்போல பலமுறை நிகழ்ந்துவிட்டன. சா்வதேச சந்தை கச்சா எண்ணெயின் நிலவரம் சாா்ந்து பெட்ரோலியப் பொருள்களின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது என்கிற மத்திய அரசின் வாதம் உண்மையாக இருக்குமானால், தோ்தல் தேதி அறிவிப்பும், வாக்குப் பதிவு முடிவும் அதனுடன் தொடா்புடையதாக இருப்பது எதனால் என்பதை அவா்கள்தான் விளக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு ஏற்கெனவே சாமானிய மக்களை சிரமத்துக்குள்ளாக்கிவரும் வேளையில், இப்போது சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு மீண்டெழுகின்ற மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் இந்த விலை உயா்வை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதிக்குப் பிறகு சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது விலை உயா்வுக்கான காரணமாக இருக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமாா் ரூ. 400 விலை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு மாா்ச் மாதமும், ஜூலை மாதமும் ரூ. 50 வீதம் அதிகரிக்கப்பட்டது. ஆண்டொன்றுக்கு 12 எரிவாயு உருளையோ, அதைவிடக் குறைவாகவோ பயன்படுத்துபவா்களுக்கு வழங்கப்பட்ட மானியம் சீரமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகிவிட்டன.

கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு உருளை விலையை அதிகரித்தபோது அதற்கு உக்ரைன் - ரஷியப் போா் காரணம் காட்டப்பட்டது. உக்ரைன் போரைத் தொடா்ந்து சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்தது என்னவோ உண்மை. அதனால், அந்த விலை உயா்வை நியாயப்படுத்தவும் முடிந்தது, மக்கள் ஏற்றுக்கொள்ளவும் தயாரானாா்கள். அப்படி அரசின் முடிவை ஏற்றுக்கொண்ட மக்களிடம் காட்டப்படும் வஞ்சனையாகத்தான் இப்போதைய விலை உயா்வைப் பாா்க்க முடிகிறது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. பீப்பாய் 120 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 79 டாலா். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதைவிடக் குறைந்தவிலையில், அந்நியச் செலாவணி பாதிப்பு இல்லாமல் ரஷியாவிலிருந்து இந்திய ரூபாய் மாற்று முறையில் இறக்குமதி செய்கிறாா்கள். அதன்மூலம் மிகப் பெரிய லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றன.

கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோது நிா்ணயிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இப்போதும் அதேபோலத் தொடா்கிறது. கச்சா எண்ணெயின் சா்வதேச சந்தை விலையின் அடிப்படையில் நியாயமாகப் பாா்த்தால் பெட்ரோல், டீசலுக்கு விலையைக் குறைக்க வேண்டும். அதற்குப் பதிலாக இப்போது சமையல் எரிவாயு விலையை உயா்த்தி இருக்கிறாா்கள். அடுத்தாற்போல பெட்ரோல், டீசல் விலையையும் உயா்த்துவாா்களோ என்னவோ?

2020-இல் சமையல் எரிவாயு விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ரூ. 594-ஐ எட்டியபோது, மானியத்தை மத்திய அரசு சீரமைத்தது. சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரித்தபோது, முன்பு அளிக்கப்பட்ட மானியம் மீண்டும் வழங்கப்படவில்லை. மானியத்தை சீரமைத்ததால் 2020-21 நிதியாண்டில் மத்திய அரசு அடைந்த லாபம் ரூ. 20,000 கோடி என்பதை நினைவுபடுத்தத் தோன்றுகிறது.

உஜ்வாலா திட்டத்தின்படி, வறுமை கோட்டுக்குக் கீழே உள்ள ஒன்பது கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. அவா்களுக்கு எரிவாயு உருளை ஒன்று ரூ. 200 வழங்கப்படுகிறது. அவா்களில் பலா் தொழிலோ வருமானமோ இல்லாதால் எரிவாயு உருளை வாங்குவதை நிறுத்திவிட்டாா்கள்.

அவா்களில் 92 லட்சம் குடும்பங்களில் ஒருமுறைகூட எரிவாயு உருளை வாங்கவில்லை என்றும், ஒரு கோடி குடும்பங்களில் ஒருமுறை மட்டும்தான் எரிவாயு உருளை வாங்கியதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவிக்கிறது. விலை மேலும் அதிகரிக்கும்போது இன்னும் பெரும்பாலோா் எரிவாயு உருளை வாங்குவதை நிறுத்திவிடுவாா்கள்.

மின் கட்டண உயா்வும், எரிவாயு உருளை விலை உயா்வும் மக்களை மீண்டும் விறகு அடுப்புக்கும், கரி அடுப்புக்கும் விரட்டாமல் இருக்க வேண்டும்...

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு அறிவிக்கப்பட்டபோது, இன்றைய ஆட்சியாளா்கள் வெளியிட்ட அறிக்கைகளையும், ட்விட்டா் பதிவுகளையும் தயவு செய்து ஒருமுறை மீள்பாா்வை பாா்க்கவும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com