தாமதம் தகாது! மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தலையங்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டும் தள்ளிப்போடப்படுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. 
தாமதம் தகாது! மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தலையங்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடங்கும் பணி செப்டம்பர் 30' ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கணக்கெடுப்பின்கீழ், வீடுகள் கணக்கிடுதல் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பித்தல் பணி கடந்த 2020'ஆம் ஆண்டு ஏப்ரல் 1'ஆம் தேதி முதல் செப்டம்பர் 30'ஆம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக அப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. 2021, 2022'ஆம் ஆண்டுகளிலும் பல்வேறு காரணங்களால் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. 

மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிமுறைகளின்படி மாவட்டங்கள், கோட்டங்கள், வட்டங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட நிர்வாக பிரிவுகளின் எல்லை மறுவரையறை பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகே, மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். மறுவரையறை பணியை நிறுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30'ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பியிருக்கிறார் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரான தலைமைப் பதிவாளர்.

எல்லை மறுவரையறை பணிகள் நிறுத்திவைப்பதற்கான மூன்று மாத காலம் ஜூலை 1'ஆம் தேதி முதல் தொடங்கும். 

நிர்வாக எல்லையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களை ஜூன் 30'க்குள் அமல்படுத்தி, அதற்கான அறிவிக்கை நகலை மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருக்கு மாநிலங்களும், ஒன்றிய பிரதேசங்களும் அனுப்ப வேண்டும். பலமுறை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவில் 19'ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 2011 வரை, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. "சென்சஸ்' என்று பரவலாக அறியப்படும் இந்த கணக்கெடுப்புச் சங்கிலி இப்போது முதல்முறையாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. 

கொள்ளை நோய்த்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் எத்தனையோ சட்டப்பேரவைத் தேர்தல்களும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும், ஏன் மக்களவைத் தேர்தலும்கூட நடத்தப்பட்டிருக்கின்றன.

அப்படியிருக்கும்போது, மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டும் தள்ளிப்போடப்படுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. 

கொள்ளை நோய்த்தொற்று என்பது உலகில் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமல்லாது, நமது அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளத்திலும்கூட மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 2019'இல் மக்களவைத் தேர்தல் முடியட்டும் என்று ஒத்திப்போடப்பட்ட இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டும்  பலமுறை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தாமதப்படுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது பொருளாதார வளர்ச்சியின் அளவை கணிப்பதாக மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கை தரம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதன் அளவுகோலாகவும் பார்க்கப்படுகிறது. எத்தனை பேருக்கு சொந்த வீடு இருக்கிறது? ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஊர்விட்டு ஊர் போய் பிழைப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை வீடுகளில் அடுப்பு இருக்கிறது? அது என்ன வகையான அடுப்பு? இறை நம்பிக்கை உள்ளவர்கள் எத்தனை பேர்? ஒவ்வொரு மதத்தினரும் எத்தனை பேர்? எழுதப்படிக்க தெரிந்தவர்கள் எத்தனை பேர் ' உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் 
சேகரிக்கப்படுகின்றன.

1948 சென்சஸ் சட்டத்தின் அடிப்படையில் அந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதிலிருந்து கிடைக்கும் தரவுகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, நம்பகத்தன்மையும் உலகையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைகின்றன. 1941'இல் உலக யுத்தம் நடந்தபோதும், 1971'இல் பாகிஸ்தானுடன் போர் மூண்டபோதும்கூட தடையில்லாமல் நாம் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினோம். அப்படியிருக்கும்போது 2021'இல் நடந்திருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடுகள் இன்னும்கூட செய்யப்படாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

ஆதார் அட்டை என்பது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் அரசின் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பெரும்பாலான மக்கள்நலத் திட்டங்களும் மத்திய அரசால்தான் வழங்கப்படுகின்றன. அவை எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன? அவற்றில் என்னென்ன குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதையெல்லாம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகள் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். கணக்கெடுப்பு தாமதமாகும்போது கொள்கை முடிவுகளும் திட்டங்களும் முறையாக நடைபெறாமல் போகிறது. 

செப்டம்பர் 2023'க்குப் பிறகு, மாநிலப் பேரவைத் தேர்தல்களும், அதைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலும் நடைபெற வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் தேவைப்படுவார்கள் என்பதால் இப்போதைக்கு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான சாத்தியம் தெரியவில்லை. 

"கதைகளின் அடிப்படையில் வரலாறு எழுதிய காலம் மாறி 21'ஆம் நூற்றாண்டில் தரவுகள்தான் வரலாற்றைத் தீர்மானிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் தரவுகள் இல்லாமல் மத்திய அரசு செயல்படுகிறது என்கிற ஆதங்கத்தை அவருக்குத் தெரிவிக்கத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com