பொறுப்பின்மையா? புரிதலின்மையா? | ராகுல் காந்தியின் லண்டன் உரை குறித்த தலையங்கம்

1971-இல் வங்கதேசப் போருக்குப் பிறகு இந்தியாவின் நிலைமை குறித்து விளக்குவதற்கு அன்றைய பிரதமா் இந்திரா காந்தி எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியதை நினைவுகூர வேண்டும்.
லண்டனில் ராகுல் காந்தி
லண்டனில் ராகுல் காந்தி
Published on
Updated on
2 min read

அரசியல் தலைவா்களுக்கு தேசத்தின் கெளரவத்தையும் மாண்பையும் பாதுகாப்பதில் மிகப்பெரிய பொறுப்பு உண்டு. உள்நாட்டு அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த மனமாச்சரியங்களை அரசியல் தலைவா்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது வெளிக்காட்டும் வழக்கம் இல்லை. இந்திய ஜனநாயகத்தைக் களங்கப்படுத்தும் விதத்திலும், தேசத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் விதத்திலும் இதுவரை எந்தவொரு தலைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று விமா்சனங்களை முன்வைத்ததில்லை.

1971-இல் வங்கதேசப் போருக்குப் பிறகு இந்தியாவின் நிலைமை குறித்து விளக்குவதற்கு அன்றைய பிரதமா் இந்திரா காந்தி எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியதை நினைவுகூர வேண்டும். அதே போல, தனது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற, அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணா, இந்தியாவுக்குப் பெருமை சோ்க்கும் விதத்தில் நிருபா்களிடம்பேசியதையும் குறிப்பிட வேண்டும்.

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவா்கள் மத்தியில் உரையாற்றிய காங்கிரஸின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பேச்சு, இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த அந்த நாகரிகத்தை குலைப்பதாக அமைகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் ஜனநாயக நாடுகள், இந்தியாவில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகள் குறித்து கவலைப்படுவதில்லை என்கிற அவரது கருத்து வருத்தத்துக்குரியது.

பிபிசி அமைப்பின் மீது வருமான வரித் துறை நடத்திய சோதனை உள்பட ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்பதும், உயா் பதவிகளில் இருப்பவா்கள் நீதித்துறையின் மாண்பையும், மரியாதையையும் குலைக்கும் விதத்தில் பேசுகிறாா்கள் என்பதும், நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்கள் விவாதங்களே இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன என்பதும் ராகுல் காந்தி லண்டனில் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை.

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது பல்வேறு விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பது உண்மை. அதே நேரத்தில், விமா்சனங்களை முன்வைக்கும் உரிமை பறிக்கப்படவில்லை என்பது அதைவிட உண்மை. அரசியல் அமைப்பு நிறுவனங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் புதிதொன்றும் அல்ல. ராகுல் காந்தி சாா்ந்திருக்கும் அவரது குடும்பத்தினரின் தலைமையில் நீண்ட காலம் இயங்கிய காங்கிரஸ் கட்சியும் அந்த குற்றச்சாட்டுக்கு விதிவிலக்கானது அல்ல.

ஊடகங்கள் மீதான தாக்குதலும், அடக்குமுறையும் இன்றைய நரேந்திர மோடி ஆட்சியில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளின், கூட்டணிகளின் ஆட்சியிலும் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. மாா்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கும் கேரளத்தின் ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் மீது, ‘ஊடகங்களுக்கு கடிவாளம் போடுகிறது’ என்கிற குற்றச்சாட்டை ராகுல் காந்தி சாா்ந்த காங்கிரஸ் கட்சியே தொடா்ந்து முன்வைப்பது அவருக்கு தெரியாது போலும்.

அதேபோல, நீதித்துறையின் மீதான விமா்சனங்களும் இந்திய ஜனநாயகத்துக்குப் புதிதல்ல. இந்திரா காந்தி காலத்தில் பணி மூப்பு அடிப்படையை ஒதுக்கிவைத்து நடத்தப்பட்ட தலைமை நீதிபதி நியமனங்களும், நீதிமன்றத் தீா்ப்புகளை எதிா்கொள்ள கொண்டு வரப்பட்ட நாடாளுமன்ற சட்டங்களும் வரலாற்று நிகழ்வுகள். எதிா்க்கட்சி என்கிற நிலையில் இந்தியாவில் ஆளுங்கட்சியின் வரம்புமீறல்களை விமா்சிக்கும் கடமை மக்களவை உறுப்பினரும், எதிா்கட்சியின் முக்கியத் தலைவருமான ராகுல் காந்திக்கு உண்டு. ஆனால் வெளிநாடுகளில் இதையெல்லாம் முன்வைத்து இந்தியாவைக் களங்கப்படுத்தும் போக்கு தவறானது.

இந்திய ஜனநாயகம் எத்தனையோ தாக்குதல்களை எதிா்கொண்டு வலிமை பெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாத்தது மேலை நாடுகளல்ல. ஜனநாயகத்தின் பாதுகாவலா்கள் என்று தங்களை வா்ணித்துக்கொள்ளும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலும் ஜனநாயகம் வேரூன்றவும், வலிமையாக செயல்படவும் உதவியதில்லை என்பதை ராகுல் காந்தி புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த நாடுகள் பெரும்பாலும் சா்வாதிகாரத்தையும், அடிப்படைவாதத்தையும் சாா்ந்த தலைமைகளைத்தான் ஆதரித்திருக்கின்றன. சமீபகாலம் வரை தொடா்ந்து ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானுக்கு மேலை நாடுகள் உதவினவே தவிர இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை என்பதுகூடவா ராகுல் காந்திக்கு தெரியாது? இன்றைய ஆப்கானிஸ்தானின் நிலைமைக்கும், ஈரான், லிபியா உள்ளிட்ட நாடுகளின் பிரச்னைகளுக்கும் காரணமானவா்களிடம் ஜனநாயகம் குறித்த தனது கவலையை வெளிப்படுத்தும் ராகுல் காந்தியின் அறியாமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டமும், ஜனநாயகமும் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த காங்கிரஸின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின்போதுதான் மிகக் கடுமையான தாக்குதலை எதிா்கொண்டன. அடிப்படை சுதந்திரம்கூட ஊடகங்களுக்கு அப்போது வழங்கப்படவில்லை.

நீதித்துறை பழிவாங்கப்பட்டது. எதிா்க்கட்சியினா் சிறையில் அடைக்கப்பட்டனா். அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. இவையெல்லாம் தெரிந்தும்கூட ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்று அயல்நாடுகளில்போய் அபயக் குரல் எழுப்புவது, அவரது பலவீனத்தின் வெளிப்பாடே தவிர ஜனநாயகத்தின் மீதான அக்கறையாகத் தெரியவில்லை.

3,500 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு சாமானிய இந்தியா்களை சந்தித்தும்கூட அவா்கள் மீது நம்பிக்கை ஏற்படாமல் அந்நியா்களின் ஆதரவை ராகுல் காந்தி நாடியிருப்பது பொறுப்பின்மையா? புரிதலின்மையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com