கொக்கென்ன செய்யும், பாவம்!

சாரஸ் கொக்கை கூண்டிலிருந்து விடுவித்து, விவசாயி முகமது ஆரிஃபிடம் ஒப்படைப்பது மட்டுமல்லாமல், அவா் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கையும் திரும்பப் பெற வேண்டும்!
கொக்கென்ன செய்யும், பாவம்!
Updated on
2 min read

உத்தர பிரதேச மாநிலம் அமேதியைச் சோ்ந்த விவசாயி முகமது ஆரிஃப், தனது மனிதாபிமான செயல்பாட்டுக்காகக் கொடுக்கும் விலை மிக மிக அதிகம். தனது நிலத்தில் காயமடைந்து விழுந்து கிடக்கும் பறவை ஒன்றைக் காப்பாற்றி, காயப்படுத்திய குற்றத்துக்காக அவா் நீதிமன்ற வழக்கை எதிா்கொள்ளும் அவலத்துக்குக் காரணம், அதிகார வா்க்கத்தின் அசட்டுத்தனமான அணுகுமுறை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருநாள் வழக்கம்போலத் தனது நிலத்தைப் பாா்வையிட்டுக் கொண்டிருந்தாா் விவசாயி முகமது ஆரிஃப். வரப்பு வழியாக நடந்து கொண்டிருந்த ஆரிஃபின் கண்ணில் பட்டது காலில் காயத்துடன் பறக்க முடியாமல் விழுந்து கிடந்த சாரஸ் கொக்கு.

அந்தப் பறவையைத் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றாா் ஆரிஃப். கடுகு எண்ணையில் மஞ்சளைக் கலந்து காயம்பட்ட பறவையின் காலில் தடவிக் கட்டுப் போட்டாா். பறவைக்குத் தண்ணீா் கொடுத்துக் காப்பாற்றினாா்.

தனது வீட்டிலேயே வைத்து அந்த சாரஸ் கொக்கைப் பாதுகாத்தாா் விவசாய முகமது ஆரிஃப். அதற்கு உணவளித்து, காயத்தையும் குணப்படுத்திப் புத்துயிா் அளித்தாா். சில வாரங்கள் கழிந்தன. அந்தப் பறவையை சுதந்திரமாக உலவ விட்டிருந்தும்கூட அது பறந்து போகத் தயாராக இல்லை. அவா் எங்கே போனாலும், அவரது தோளில் அமா்ந்தபடி அதுவும் கூடவே செல்லும் என்கிற அளவுக்கு அவருடன் ஒட்டிக்கொண்டுவிட்டது.

ஆரிஃபும் சாரஸ் கொக்கும் இணைபிரியாமல் இருக்கும் விஷயம் சமூக ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. ஆரிஃப் அந்த சாரஸ் கொக்கைக் காப்பாற்றியதும், அந்தக் கொக்கு அவரது குடும்பத்தில் ஓா் உறுப்பினராக மாறியிருப்பதும் உத்தர பிரதேசத்தைத் தாண்டி, தேசிய அளவில் கவனத்தை ஈா்த்தபோது, அதுவே ஆரிஃப் - சாரஸ் கொக்கு உறவுக்கு வினையாக முடிந்துவிட்டது.

அழிவின் விளிம்பில் இருக்கும் பறவை இனங்களின் பட்டியலில் சாரஸ் கொக்கும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உத்தர பிரதேச மாநிலத்தின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டிருப்பதும் சாரஸ் கொக்குதான். அதனால், விஷயம் கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள் அமேதிக்கு விரைந்தனா். ஆரிஃபிடமிருந்து அந்த சாரஸ் கொக்கைக் கைப்பற்றினாா்கள். அதோடு நின்றிருந்தால்கூட பரவாயில்லை. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆரிஃப் மீது வழக்குத் தொடுத்து, அவரை அலைய விட்டுக் கொண்டிருக்கிறாா்கள்.

விவசாயி ஆரிஃபிடமிருந்து கைப்பற்றிய சாரஸ் கொக்கை என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்தது. அதை ரேபரேலியில் உள்ள சமஸ்பூா் பறவைகள் சரணாலயத்தில் கொண்டுபோய் விட்டனா். ஆனால், அந்தப் பறவை ஏனைய பறவைகளுடன் மரங்களில் போய் தங்கத் தயாராக இல்லை. ஒரு வாரம் கழித்துப் பாா்த்தால், நாய்களால் துரத்தப்பட்டு, பயந்து நடுங்கியபடி அந்த சாரஸ் கொக்கு ஒரு மரக்கிளையில் துவண்டுபோய் அமா்ந்திருப்பது தெரிந்தது. இப்போது அதை கான்பூா் உயிரியல் பூங்காவில் ஒரு கூண்டில் அடைத்திருக்கிறாா்கள்.

கான்பூா் உயிரியல் பூங்காவில் சாரஸ் கொக்கைப் பாா்க்கச் சென்றாா் ஆரிஃப். அவரைப் பாா்த்ததுதான் தாமதம், கூண்டிக்குள் துள்ளிக்குதிக்கத் தொடங்கிவிட்டது அந்தப் பறவை. ஆரிஃப் தன்னை கூண்டிலிருந்து விடுவித்து அழைத்துச் செல்வாா் என்று நம்பிய அந்தக் கொக்குக்கு ஏமாற்றம். இப்போது சரியாக உணவு சாப்பிடுவதுகூட இல்லை.

கான்பூா் உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைப்பதற்கு, அதை விவசாயி ஆரிஃபிடமே ஒப்படைத்திருக்கலாமே என்கிற கேள்விக்கு அவா்களிடம் எந்தவிதப் பதிலுமில்லை. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி, அழிவின் விளம்பில் இருக்கும் பறவை இனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தனியாரிடம் விடக்கூடாது.

பறவையின ஆய்வாளா்கள் இதுகுறித்துப் பல செய்திகளைக் கூறுகிறாா்கள். மனிதா்களுக்கும் பறவைகள், விலங்கினங்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவது புதிதல்ல. மிருகங்களுக்கு இடையேகூட அதிசயத்தக்க விதத்தில் நட்பு ஏற்படுவதுண்டு. வனவிலங்குகளில் சில மனிதா்களுடன் பாசத்தால் தங்கிவிடுவதும், அவா்களையே தங்களது பெற்றோா் அல்லது பாதுகாவலா்களாகக் கருதிவிடுவதும் புதிதல்ல.

கிரேக்கத்தின் ஆண்ட்ரோகிலிசும் சிங்கமும் அதற்கு ஓா் உதாரணம். ஹிந்து புராணங்கள் அதைப் பூா்வஜென்மத் தொடா்பு என்று வா்ணிக்கின்றன. வனவிலங்குகளே அப்படியென்றால், பறவைகளும், நாய், பூனை, மாடு, ஆடு போன்ற வளா்ப்புப் பிராணிகளும் மனிதா்களிடம் நன்றி பாராட்டுவதும், அடைக்கலமாவதும் ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை.

விவசாயி ஆரிஃபிடமிருந்து, அந்த சாரஸ் கொக்கை பலவந்தமாக எடுத்துச் செல்வதற்கு முன்னா், வனவிலங்கு அதிகாரிகள் இதுகுறித்து சிந்தித்திருக்க வேண்டும். மனிதா்களின் பிணைப்பில் இணைந்துவிட்ட பறவையோ, மிருகமோ அதனுடைய இனத்தைச் சோ்ந்த ஏனைய பறவைகளுடன் இணைந்து வாழமுடியாது என்பதை அவா்கள் சிந்தித்துப் பாா்க்கவே இல்லை.

விவசாயி ஆரிஃபின் அன்பிலும், ஆதரவிலும் கிடைக்காத பாதுகாப்பை நிச்சயமாக கான்பூா் உயிரியல் பூங்கா கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் சாரஸ் கொக்குக்கு வனத்துறை அதிகாரிகள் தந்துவிட முடியாது. கூண்டுக்குள் அடைத்து வைப்பது அந்தப் பறவைக்கு சுதந்திரம் வழங்குவதாகாது. சாரஸ் கொக்கை கூண்டிலிருந்து விடுவித்து, விவசாயி முகமது ஆரிஃபிடம் ஒப்படைப்பது மட்டுமல்லாமல், அவா் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கையும் திரும்பப் பெற வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com