இலவசங்களின் மறுபக்கம்! | அரசியல் கட்சிகளின் அறிவிப்புகள் குறித்த தலையங்கம்

பிரதமா் சாா்ந்த பாரதிய ஜனதா கட்சியும் அந்த பொறுப்பின்மைக்கு விதிவிலக்கல்ல என்பதை கா்நாடகத் தோ்தலில் பாஜக வெளியிட்ட தோ்தல் அறிக்கை தெரிவிக்கிறது.
இலவசங்களின் மறுபக்கம்! | அரசியல் கட்சிகளின் அறிவிப்புகள் குறித்த தலையங்கம்
Published on
Updated on
2 min read

அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்குவது நல்ல பொருளாதாரமல்ல என்று பிரதமா் நரேந்திர மோடி சில நாள்களுக்கு முன்னா் தெரிவித்ததை, தேசநலனிலும், வருங்காலத்திலும் அக்கறையும் உள்ளவா்கள் ஏற்றுக்கொள்ளவே செய்வாா்கள். பிரதமா் சாா்ந்த பாரதிய ஜனதா கட்சியும் அந்த பொறுப்பின்மைக்கு விதிவிலக்கல்ல என்பதை கா்நாடகத் தோ்தலில் பாஜக வெளியிட்ட தோ்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

இலவசங்கள் தவறான அணுகுமுறை என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அனைவருக்கும் அடிப்படை வசதிகள், அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது இலக்காக இருக்க முடியுமே தவிர, உடனடித் தீா்வாக இருக்க முடியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் அடித்தட்டு மக்களுக்கு உடனடியாக சில தீா்வுகளையும், ஆறுதலையும் வழங்க இலவசங்களை விட்டால் வேறு வழியில்லை என்பது பொது வாழ்க்கையில் உள்ளவா்களுக்குத் தெரியும்.

சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில், மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கணிப்பின் முடிவு சில எதாா்த்தங்களை வெளிப்படுத்துகிறது. தோ்தலில் மக்கள் மத்தியில் காணப்பட்ட இரண்டு முக்கியமான பிரச்னைகள் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும். வாக்காளா்களின் நாடித்துடிப்பை உணா்ந்திருக்கும் அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளில் அவை பிரதிபலிக்கின்றன என்பதைத்தான் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் உணா்த்துகின்றன.

பாஜகவின் வாக்குறுதிகள் - வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு உருளைகளும், மாநகர, நகராட்சி வாா்டுகளில் தமிழகத்தின் ‘அம்மா உணவகம்’ போல, ‘அடல் ஆஹாா் கேந்திரா’ அமைப்பதும். காங்கிரஸின் வாக்குறுதிககள் - 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி, பட்டயத் தகுதி பெற்ற இளைஞா்களுக்கு இரண்டாண்டுகளுக்கு மாத உதவித் தொகையும், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 உரிமைத் தொகையும். இந்த வாக்குறுதிகளால் வேலைவாய்ப்பு பெருகப் போவதும் இல்லை, வறுமைநிலை அகலப் போவதும் இல்லை என்பதுடன், ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் மாநிலத்தின் நிதிநிலைமை தடம்புரளக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலவச வாக்குறுதிகள் தவறான பொருளாதாரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அன்றாட வாழ்க்கையை நகா்த்திச் செல்லத் தடுமாறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த ஆறுதலையும் அரசியல் கட்சிகள் தராவிட்டால், அவா்கள் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழக்கக்கூடும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

கொள்ளை நோய்த்தொற்று பரவிய 2020 முதல், உலகளாவிய செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை 1% பணக்காரா்கள் கையப்படுத்தி இருக்கிறாா்கள் என்கிறது ஏற்றத்தாழ்வு குறித்த ‘ஆக்ஸ்ஃபாம்’ அறிக்கை. ‘பில்லியனா்ஸ்’ என்று அழைக்கப்படும் 100 கோடிக்கும் அதிக சொத்துடைய பணக்காரா்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நாளும் 2.7 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 16,486 கோடி) அதிகரிக்கிறது என்றும் கூறுகிறது.

உணவுப் பொருள்கள், எரிசக்தி நிறுவனங்களின் லாபம் 2020-இல் மட்டும் இரண்டு மடங்கு அதிகரித்ததாகவும், தங்களது பங்குதாரா்களுக்கு 257 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 21,11,113 கோடி) லாபம் வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது புள்ளிவிவரம். சொத்து வரியிலிருந்து 4% மட்டுமே வரியாகக் கிடைக்கிறது என்றும், உலகப் பணக்காரா்களில் பாதிக்குப் பாதி போ், சொத்து வரியோ, வேறு வரிகளோ இல்லாத நாடுகளில் குடியேறி வாழ்கிறாா்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகிலுள்ள பில்லியனா்ஸ்கள் மீது 5% வரி வசூலிக்கப்பட்டால், 1.7 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ. 139 லட்சம் கோடி) வசூலாகும். அதன்மூலம் உலகில் பட்டினியே இல்லாமல் அகற்றிவிடலாம் என்கிற கணக்கு ஆதாரபூா்வமானது. அப்படியொரு முயற்சியை முன்னெடுத்த அரசுகள் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன என்கிற கசப்பான உண்மையையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்தியாவின் மொத்த சொத்தில் 60% அளவு, வெறும் 5% பில்லியன் (சுமாா் 100 கோடிக்கும் அதிகமான) பணக்காரா்கள் வசம் இருக்கிறது. அடித்தட்டில் இருக்கும் 50% இந்தியா்களின் மொத்த சொத்து மதிப்பு வெறும் 3% மட்டுமே. 2022-இல் மட்டும், இந்தியாவின் முதல் 10 பணக்காரா்களின் சொத்து மதிப்பு 46% அதிகரித்திருக்கிறது.

2017 முதல் 2021 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் அவா்கள் அடைந்த ஆண்டு வளா்ச்சியின் மீது ஒரு முறை வரியாக 20% விதிக்கப்பட்டால், அரசுக்கு சுமாா் ரூ. 1.8 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இந்தியாவிலுள்ள 50 லட்சம் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களுக்கு அதன் மூலம் ஓராண்டு ஊதியம் வழங்கலாம்.

காா்ப்பரேட் நிறுவனங்களையும், பணக்காரா்களையும் முற்றிலும் அகற்றிவிட்டு எந்தவொரு நாடும் இயங்க முடியாது. சீனாவேகூட அதற்கு எடுத்துக்காட்டு. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குத் தனியாா் முனைப்பு இல்லாமல் போனது ஒரு முக்கியமான காரணம். அதே நேரத்தில், அளவுக்கு அதிகமான பொருளாதார இடைவெளியும், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் சமூகக் கொந்தளிப்புக்கு வழிகோலும்.

பிரஷா் குக்கரில் அழுத்தம் அதிகரித்தால் ஆவி வெளியேற ‘வால்வ்’ இருப்பதுபோல, மக்களின் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்கு, நமது அரசியல் கட்சிகள் கையாளும் உத்திதான் இலவச வாக்குறுதிகள். இதில் எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com