அமைதியைத் தடுப்பது எது? மணிப்பூர் கலவரம் குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

நான்கு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இணைய சேவை கடந்த மாதம் 23-ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கியபோது, மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்று நினைத்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதில் சிலர் முனைப்புடன் இருப்பதுதான், கலவரம் பழையதுபோல அதிகரித்திருப்பதற்குக் காரணம்.

ஜூலை மாதத்தில் மைதேயி இனத்தைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் காணாமல் போனார்கள். காதலர்களான அவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் குகி இனத்தவர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி, கொலை செய்யப்பட்ட அவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது. சற்று அடங்கியிருந்த கலவரம் மீண்டும் பற்றி எரியத் தொடங்கியதற்கு அதுதான் காரணம்.

அந்த சம்பவத்தைக் கண்டித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. மேற்கு இம்பாலில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டிருக்கிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பல இடங்களில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.

இதற்கு முன்பும் இதேபோல, குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, மைதேயி இனத்தைச் சேர்ந்த கும்பலால் மே மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் காணொலி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு, கலவரத்துக்கு நெய் வார்க்கப்பட்டது. மணிப்பூரில் பெண்கள் போராட்டத்தை முன்னெடுப்பதும், பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாவதும் நீண்ட நாள்களாக வழக்கமாகவே இருந்து வருகிறது.

அக்டோபர் மாதம் தொடங்கி, அடுத்த ஆறு மாதங்களுக்கு மணிப்பூரின் பலப் பகுதிகள் ராணுவப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மொத்த மாநிலத்திலும் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும், இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 19 காவல் நிலைய எல்லைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

மைதேயிகள் அதிகமாக வாழும் இம்பால் பள்ளத்தாக்கு மட்டும் ஏன் விதிவிலக்காக்கப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது. நிலைமையின் தீவிரம் கருதி அந்தச் சட்டத்தை பயன்படுத்துவதில் தவறு காண முடியாவிட்டாலும், அதிகமான போராட்டங்களையும், வன்முறைகளையும் சந்திக்கும் பகுதிகள் தவிர்க்கப்பட்டிருப்பது, குகி இனத்தவரின் ஆத்திரத்தை அதிகரிக்கக் கூடும்.

மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில், அண்டை நாடான மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரும் பெரும் பங்கு வகிக்கிறது. நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூர் எல்லைகளையொட்டிய மியான்மரில் சகேய்ங், சின் மாவட்டங்களில், தேசிய ஐக்கிய அரசின் போராளிகளுக்கு எதிராக மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தப் பகுதிகள் மியான்மர் ராணுவ ஆட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், தொடர்ந்து விமான குண்டு வீச்சுகளும், கிராமங்களுக்குத் தீ வைத்தலும் அங்கிருக்கும் மக்களைத் தப்பியோட வைத்திருக்கிறது.

தேசிய ஐக்கிய அரசின் தலைவர்கள் உள்பட ஏறத்தாழ 60,000 சின், குகி, ஜோமி பழங்குடியினர் அகதிகளாக மிúஸôரம், மணிப்பூர் மலைப்பகுதிகளைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, கட்டுப்பாடில்லாமல் எல்லை கடந்து பயணிக்க முடியும் என்பதால், ஆயுதங்கள், போதை மருந்துகள் போன்றவை மணிப்பூருக்குள் மியான்மர் அகதிகளால் கடத்தப்படுகின்றன.

அதிகாரபூர்வமாக இதுவரை 180 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும், சுமார் 50,000 பேர் தங்கள் வீடு வாசல்களை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையான நிலவரம் என்ன என்பது குறித்து யாருக்கும் வெளியில் தெரியாது.

மணிப்பூரில் நிலைமை கட்டுப்படுத்தப்படாமல், கலவர பூமியாகத் தொடரும் அதே வேளையில், நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருக்கிறது கடந்த மாதம் பூடான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் கால்பந்தாட்ட போட்டி. வெறும் விளையாட்டுதானே என்று அந்தக் கால்பந்தாட்ட போட்டியை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

திம்புவில் நடந்த 'சாஃப்' விளையாட்டுகளின் 16 வயதுக்குட்பட்டவர்களின் கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. கடந்த ஐந்து மாதங்களாகத் தொடரும் கலவரம் மணிப்பூரில் அடங்கியபாடில்லை என்றாலும், 23 வீரர்களைக் கொண்ட அந்த இந்திய கால்பந்தாட்ட அணியில் 16 பேர் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள்.

அந்த 16 பேரில் 11 பேர் மைதேயிகள், 4 பேர் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் மணிப்பூரி முஸ்லிமான மைதேயி பங்கள் கால்பந்தாட்ட மைதானத்தில் உருளும் பந்தில், ரசிகர்களின் சுவாசம் நிரப்பப்பட்டிருக்கும் என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, சகோதரத்துவமும், அதில் நிறைந்திருக்கும் என்பதை உணர்த்தியது இந்திய அணியின் விளையாட்டு. பூடான் தலைநகர் திம்புவிலுள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் நட்புறவுடனும், ஒற்றுமையுடனும் விளையாடிய அந்த மணிப்பூர் மாணவர்கள், தங்கள் சொந்த மாநிலமான மணிப்பூரிலும் அதேபோல ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்தச் செய்தியை மணிப்பூரில் விளம்பரப்படுத்த இந்திய அரசு ஏன் தயங்குகிறது என்று புரியவில்லை!

மணிப்பூரில் நடப்பது கலவரம் அல்ல, அரசியல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com