தடுமாற்றத்தில் ஜனநாயகம்! 

ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்
தடுமாற்றத்தில் ஜனநாயகம்! 
Updated on
2 min read

ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போதைய அரசின் பதவிக் காலம் ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்ரானின் கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தானில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்ற இம்ரான் கான் 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் பதவி இழக்க நேர்ந்தது. பிரதமர் பதவியை இழந்ததில் இருந்து அவர் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தனது பதவிக் காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை மறைத்து வைத்தது, அரசுக் கருவூலத்திலிருந்து பரிசுப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஆகஸ்ட் 5 அன்று உத்தரவிட்டது.

இம்ரான் கைது செய்யப்படுவது, கடந்த மூன்று மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். அல் காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் கான் கடந்த மே 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது பயங்கரக் கலவரம் வெடித்தது. இந்த முறை இம்ரான் கைது செய்யப்பட்டபோது அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை. 
மே 9 கலவரத்தின்போது, இம்ரான் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நிறைய பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அரசுத் தரப்புக்கு ஒத்துழைக்க மறுத்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளானார்கள்.

ஒரு காலகட்டத்தில் இம்ரானுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சர்க்கரை தொழிலதிபரான ஜெஹாங்கீர் தரீன் இம்ரானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதுடன் அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுடைய புதிய கட்சியை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கினார். நாடாளுமன்றத்திலும், மாகாண சட்டப்பேரவைகளிலும் உறுப்பினர்களாக இருந்த இம்ரான் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தக் கட்சியில் இணைந்தனர்.அதனால், இம்ரான் முன்பு கைது செய்யப்பட்டபோது நிகழ்ந்தது போன்ற கலவரம் இப்போது நிகழவில்லை.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர்கள் கைது செய்யப்படுவது புதிதொன்றுமல்ல. இந்தக் கைதுப் படலம் 1960-களிலேயே தொடங்கிவிட்டது. ராணுவத்துடன் முரண்படுபவர்கள் இந்த கதியைத்தான் சந்திக்க நேரிட்டுவருகிறது. 1962-இல் வங்கத்தை (இப்போதைய வங்கதேசம்) சேர்ந்த ஹுசைன் ஷஹீத் சுஹ்ராவர்தி, 1974-இல் ஜுல்பிகர் அலி புட்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், புட்டோவின் மகள் பேநசீர் புட்டோ, நவாஸ் ஷெரீஃப் போன்றவர்கள் பல்வேறு வழக்குகளில் பலமுறை கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜுல்பிகர் அலி புட்டோ 1979-இல் தூக்கிலிடப்பட்டார்.  சிறையில் அடைக்கப்படுவதைத் தவிர்க்க பேநசீரும், நவாஸும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். 

2018-இல் ராணுவ தலைமைத் தளபதி கமர் பாஜ்வாவின் ஆதரவுடன் இம்ரான் ஆட்சியைக் கைப்பற்றினார். காலப்போக்கில் ராணுவத் தலைமையுடன் கருத்து வேறுபாடு அதிகரித்ததால் 2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

ஆனாலும், மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராகவே இம்ரான் விளங்கினார். பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் அகற்றப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் ராஜிநாமா செய்தனர். கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மாகாணங்கள், கராச்சி நகருக்கு உட்பட்ட அந்த எட்டு தொகுதிகளுக்கு கடந்த அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கான் ஏழு தொகுதிகளில் தானே போட்டியிட்டு 6-இல் வென்று வரலாறு படைத்தார்.

இந்தத் தேர்தலுடன் பஞ்சாப் பேரவையின் மூன்று தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இம்ரான் கட்சி இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றியது. பாகிஸ்தானின் மிக முக்கியமான மாகாணமாகக் கருதப்படும் பஞ்சாபில் இம்ரான் கட்சியைச் சேர்ந்த 20 பேர் அணி மாறியதால் 2022-ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அந்த 20 தொகுதிகளில் 15-ஐ அவரது கட்சி கைப்பற்றியது.

இந்தச் சூழலில்தான் இம்ரான் கானை பலவீனப்படுத்தி மீண்டும் தலையெடுக்கவிடாமல் செய்வதற்காக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்வது, நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவரை சிறையில் அடைப்பது, கட்சியை உடைப்பது, முக்கிய பிரமுகர்களை சிறையில் அடைப்பது போன்ற பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. 

பாகிஸ்தானில் கடந்த 75 ஆண்டுகளில் எந்தவொரு பிரதமரும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்ததில்லை. ஏற்கெனவே பொருளாதார ரீதியில் கடுமையான சவால்களை அந்த நாடு சந்தித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, சீனா போன்றவை நிதி உதவி அளித்து கைதூக்கிவிடுகின்றன. 

ஏற்கெனவே மூச்சுத்திணறலில் உள்ள ஜனநாயகத்தை புதைகுழியில் போட்டு மூடும் நடவடிக்கைகளை ராணுவத் தலைமையும், ஆட்சியாளர்களும் மேற்கொண்டால் அது அந்த நாட்டுக்குத்தான் பாதகமாக முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com