தாய்மண், ஆனால் அகதிகள்! | காஷ்மீர் பண்டிட்களின் நிலை குறித்த தலையங்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்

 காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பயங்கரவாதிகளால் துரத்தப்பட்டு ஜம்மு பகுதியில் வாழும் லட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரின் வேதனைகள் தொடர்கின்றன. அவர்களை மறுகுடியமர்த்தும் மத்திய அரசின் திட்டங்கள் பயங்கரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
 தற்போது ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், முன்பு ஜம்மு-காஷ்மீர் என்கிற தனி மாநிலமாக இருந்தது. 1989-95 காலகட்டத்தில் காஷ்மீர் பயங்கரவாதிகளின் மதரீதியான தொடர் தாக்குதல்களால் 700-க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சார்ந்த ஹிந்துக்கள் பலியாகினர். மண்ணின் மைந்தர்களான அவர்கள் தங்கள் உயிரையும் குடும்பத்தையும் பாதுகாக்க, வீடுகளையும் சொத்துகளையும் கைவிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறி ஜம்முவில் அடைக்கலம் புகுந்தனர். அன்று முதல் இன்று வரை அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வாழ்கின்றனர்.
 இவ்வாறு ஜம்முவில் குடிபெயர்ந்த அகதி பண்டிட்களின் எண்ணிக்கை சுமார் 3.5 லட்சம். இவர்களது வீடுகளும் சொத்துகளும் பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை இதுவரை முழுமை பெறவில்லை; குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை.
 இந்த விவகாரத்தை பாஜக ஆரம்பத்திலிருந்தே நாடு முழுவதிலும் பிரசாரம் செய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து, தேசிய அளவில் சிறுபான்மையினர் நலன் குறித்துப் பேசும் எந்தக் கட்சியும் பேசுவதில்லை என்பது பாஜகவின் பிரதான குற்றச்சாட்டு.
 எனவேதான், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தவுடன், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிய காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை மீண்டும் அங்கு குடியமர்த்தும் பணிகளைத் தொடங்கியது. ஆனால் வாழ்வாதாரம் தொலைந்து 33 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், பண்டிட்கள் அங்கு செல்லத் தயங்குகின்றனர்.
 எனவே, காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரின் மறுகுடியமர்வுக்காக பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம் 2015-இல் தொடங்கப்பட்டது. அதன்படி, ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசுப் பணியிடங்களில் 3,000 இடங்கள் காஷ்மீர் அகதி பண்டிட்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த ஐந்தாண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 2,639 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
 இதனிடையே காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தும் 2019-இல் நீக்கப்பட்டது. மத்திய அரசின் திட்டங்கள் வெற்றி பெற்றால் தங்கள் பிரிவினை எண்ணம் பலிக்காது என்பதை உணர்ந்த பயங்கரவாதிகள், 2020 முதல் அங்கு அரசுப் பணியில் அமரும் காஷ்மீர் பண்டிட்களைத் தாக்கி வருகின்றனர்.
 கடந்த ஆண்டில் காஷ்மீர் பண்டிட்கள் மூவர் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினர் 14 பேர் ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்டிருப்பதாக, மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்திருக்கிறார். லஷ்கர்-ஏ-தொய்பா பிரி
 வினைவாத இயக்கம், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்படுவதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.
 கடந்த மே மாதம் பட்காம் அருகில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர் ராகுல் பட்டும், குல்காம் அருகில் பள்ளி ஆசிரியை ரஜினி பாலாவும் பணியிடத்திலேயே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கு வழங்கப்பட்ட அரசுப் பணியைத் தொடர மறுத்து, ஜம்முவிலேயே தங்களுக்கு பணியிட மாற்றம் கோரி வருகின்றனர் காஷ்மீர் பண்டிட்கள்.
 எனவே, இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மாதாந்திர ஊதியம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. தவிர, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிற அரசின் உறுதியை பண்டிட் மக்கள் நம்பத் தயாராக இல்லை. அரசை ஆதரிக்கும் உள்ளூர் இஸ்லாமிய மக்களையே கொல்லத் துணிந்த பயங்கரவாதிகள் தங்களை விட்டு வைப்பார்களா என்பதுதான் பண்டிட் மக்களின் ஐயம்.
 இதனிடையே டிசம்பர் 5-ஆம் தேதி, காஷ்மீரில் பணியாற்றும் பண்டிட் சமூக அரசு ஊழியர்கள் 56 பேரின் பட்டியலை வெளியிட்டு அவர்களைக் கொல்லப்போவதாக, எதிர்ப்பு முன்னணி (டி.ஆர்.எஃப்.) என்ற பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்ட இடத்தில் பணி புரியாதவரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா எச்சரித்திருக்கிறார்.
 இதுநாள் வரை பாஜகவின் ஆதரவாளர்களாக இருந்த காஷ்மீர் பண்டிட்கள், இந்தத் தொடர் நிகழ்வுகளால் தற்போது அக்கட்சியின் தீவிர எதிர்ப்பாளர்களாக மாறி வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மத்திய அரசு விளையாடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 இவ்வாறாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் காஷ்மீர் பண்டிட்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்படாதவரை, அங்கு அமைதியை நிலைநாட்டுவது பகல் கனவாகவே இருக்கும். அங்குள்ள பயங்கரவாதிகளுக்குத் துணைபுரியும் அண்டைநாடான பாகிஸ்தான் திருந்தாதவரை, பண்டிட் மக்களின் வாழ்க்கை நிலையற்றதாகவே தொடரும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com