சாதுரியமான முடிவு! | இலவச உணவு தானியங்கள் விநியோகிப்பு குறித்த தலையங்கம்

அரசின் முடிவு ஏழை மக்களை மட்டுமல்ல, வேளாண் பெருமக்களையும் கைதூக்கி விடும் முயற்சி.
சாதுரியமான முடிவு! | இலவச உணவு தானியங்கள் விநியோகிப்பு குறித்த தலையங்கம்

மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை, அடுத்த ஓராண்டுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இலவசமாக உணவு தானியங்களை விநியோகிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்கிற பிரதமரின் இலவச உணவு தானியங்கள் திட்டம் கைவிடப்படுகிறது. அரசின் சாதுரியமான முடிவுக்குப் பின்னால், சில நிா்ப்பந்தங்கள் இருப்பதைக் கூா்ந்து கவனித்தால் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமரின் இலவச உணவு தானிய திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பிலிருந்து மாதம் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை பொது விநியோகத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டது. எல்லா நாடுகளிலும் கடுமையான விலைவாசி உயா்வும், வேலை இழப்புகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்திருக்கின்றன. பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரத் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா 81.35 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்க இருப்பது ஏனைய நாடுகளை வியந்து பாா்க்க வைக்கும் மக்கள் நல்வாழ்வுத் திட்டம்.

உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா ஐந்து கிலோ பருப்பு, கோதுமை, அரிசி ஆகியவை முறையே ரூ.1, ரூ.2, ரூ.3 என்கிற மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ‘அந்தியோதயா’ அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு, மாதம் 35 கிலோ உணவு தானியம் விநியோகிக்கப்படுகிறது.

இப்போது பிரதமரின் இலவச உணவு தானியங்கள் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 81.35 கோடி மக்கள் பயனடைவாா்கள். மத்திய அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி கூடுதல் செலவாகக்கூடிய, ஏழை மக்களுக்கான இந்தத் திட்டம், மத்திய அரசின் புத்தாண்டுப் பரிசு என்று மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறாா்.

கொள்ளை நோய்த்தொற்று போன்ற பேரிடா் எதுவும் இல்லாதபோது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு செலவிடும் மானியத்தின் அளவு ரூ. 2 லட்சம் கோடி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு தானியங்கள் திட்டம் (பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா) காரணமாக அரசின் மானியச் சுமை இரட்டிப்பானது.

மேலும் ஓா் ஆண்டுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்களை வழங்குவது என்கிற முடிவு, அரசின் மானியச் சுமையை அதிகரிக்கும். இதற்காக ஏற்கெனவே செலவிடும் ரூ. 2 லட்சம் கோடியுடன், ரூ. 15,000 கோடி அல்லது ரூ.16,000 கோடி அதிகரிக்கும். அதை ஈடுகட்டும் விதத்தில் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு தானியங்கள் திட்டம் நிறுத்தப்படுகிறது. அதனால் ஏற்படும் ரூ. 2 லட்சம் கோடி சேமிப்பு, ஓரளவுக்கு அந்த பாதிப்பை ஈடுகட்டும்.

அரசின் இப்போதைய முடிவால், பெரிய அளவில் சேமிப்பு ஏற்பட்டுவிடாது. தாக்கல் செய்யப்பட இருக்கும் நிதிநிலை அறிக்கைக்கு இந்த முடிவால் பெரிய லாபம் எதுவும் இருந்துவிடாது. ஆனால், உணவு தானியக் கையிருப்பு குறைந்து விடாமல் அரசுக்கு இந்த முடிவு கை கொடுக்கும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு 520 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகிறது. பிரதமரின் ஏழைகள் இலவச தானியத் திட்டத்துக்காக மேலும் 480 லட்சம் டன் தேவைப்பட்டது. ‘அந்த்யோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் இலவச தானியத் திட்டத்தில் நபா் ஒன்றுக்கு 5 கிலோ வழங்கப்பட்டது. அப்போது, உணவு தானிய உற்பத்தி, கொள்முதல், அரசின் கையிருப்பு ஆகியவை வரலாறு காணாத அளவில் இருந்தன.

இப்போது நிலைமை அதுவல்ல. கடந்த ஆண்டைவிட அரிசி, கோதுமை சாகுபடி குறைந்திருக்கிறது. பருவநிலை மாற்றமும், உரத் தட்டுப்பாடும் உற்பத்தியை பாதித்திருக்கின்றன. தேவைக்கு மட்டுமே நமது தானியக் கையிருப்பு உள்ளதால், தானிய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்திருக்கிறது. உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களில் பொது விநியோகத்தில் கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டுதான், பிரதமரின் ஏழைகளுக்கான இலவச தானிய விநியோகம் கைவிடப்பட்டு, மாதந்தோறும் 5 கிலோ தானியம் இலவசமாக வழங்கப்படும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமான செலவை ஏற்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் அளவிலான பொருளாதார மேம்பாட்டை இந்தியா அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக அளவிலான விரயமோ, ஊழலோ, உணவு தானியங்கள் மடைமாற்றம் செய்யப்படுவதோ இல்லாமல் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவு தானியங்களை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சில ஆண்டுகளுக்கு முன்னா் நினைத்துக்கூடப் பாா்த்திருக்க முடியாத சாதனை.

அரசின் முடிவு ஏழை மக்களை மட்டுமல்ல, வேளாண் பெருமக்களையும் கைதூக்கி விடும் முயற்சி. உணவு தானியங்களைப் பெரிய அளவில் அரசு கொள்முதல் செய்வதால், கிராமப்புற பொருளாதாரம் பாதுகாக்கப்படுகிறது. விவசாயம் சாா்ந்த வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும், விவசாயத்தை லாபகரமாக்குவதும் இந்த முடிவால் ஏற்படும் ஏனைய நன்மைகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com