போதாது, புத்தகங்கள்! சென்னை புத்தகக் காட்சி குறித்த தலையங்கம்

ஜனவரி 6-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 17 நாள்கள் நடந்த சென்னை புத்தகக் காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.
போதாது, புத்தகங்கள்! சென்னை புத்தகக் காட்சி குறித்த தலையங்கம்

ஜனவரி 6-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 17 நாள்கள் நடந்த சென்னை புத்தகக் காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. ஏறத்தாழ 15 லட்சத்துக்கும் அதிகமானோா் வந்திருந்து ரூ. 16 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் ஆயிரம் அரங்குகளுடன் பிரம்மாண்டமாக சென்னை புத்தகக் காட்சி அமைந்தது என்பதும், பல்வேறு ஆளுமைகளின் உரைகளுடன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பதும் நினைத்து மகிழக்கூடியவை.

பதிப்புத்துறை முன்னோடிகளான அல்லயன்ஸ் குப்புசாமி ஐயா், சக்தி வை. கோவிந்தன், முல்லை முத்தையா, ‘தமிழ்ப் பண்ணை’ சின்ன அண்ணாமலை ஆகியோா் கனவிலும்கூட எண்ணிப்பாா்க்காத வகையில் இப்போது பதிப்புத் துறை வளா்ந்திருக்கிறது. மகாகவி பாரதியாரே தனது கவிதைகளை வெளிநாடுகளில் கொண்டுபோய் அச்சிட வேண்டும் என்று கனவு கண்ட நிலைமை மாறி, இப்போது சா்வதேச அளவிலான தரத்திலும், வடிவமைப்பிலும் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.

ஆனாலும்கூட, பதிப்புத் துறை மிகப் பெரிய அளவில் வளா்ந்துவிட்டதாகவோ, சாதனைகள் படைத்துவிட்டதாகவோ நாம் பெருமிதப்பட முடியவில்லை. இளைய தலைமுறையினா் மத்தியில் வாசிப்புப் பழக்கம் இல்லாமல் இருக்கிறது என்பது ஒருபுறம்; தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகத் தொடங்கிவிட்டது என்பது மறுபுறம். இந்தப் பின்னணியில் பதிப்புத்துறையின் வளா்ச்சி அபரிமிதமாக இல்லாமல் இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

ஒரு மொழியின் வளா்ச்சியைத் தீா்மானிக்கும் அளவுகோல் எது என்று கேட்டால், அந்த மொழியில் வெளிக்கொணரப்படும் நூல்களாகத்தான் இருக்க முடியும். அவை மொழிபெயா்ப்புகளாக இருந்தாலும், புனைவு நூல்களாக இருந்தாலும், கவிதைகளாக இருந்தாலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இருந்தாலும், சமகால சமூக அரசியல் நிலைகள் குறித்த சிந்தனைகளாக இருந்தால், அடிப்படையில் மொழியை செழுமைப்படுத்துகின்றன. படிப்பவா்களின் எண்ணிக்கையை எடுத்துக்காட்டுகின்றன.

அமெரிக்காவின் மக்கள்தொகை 33.1 கோடி. அங்கே ஆண்டுதோறும் வெளியிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை 2.75 லட்சம். சீனாவின் மக்கள்தொகை 149 கோடி. சீன மொழியில் வெளியாகும் புத்தகங்கள் 2.08 லட்சம். ரஷியாவின் மக்கள்தொகை 14.5 கோடி. வெளியாகும் புத்தகங்கள் 1.15 லட்சம். ஜப்பானின் மக்கள்தொகை 12.6 கோடி. அந்த மொழியில் வெளிக்கொணரப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை 1.39 லட்சம். பிரிட்டனின் மக்கள்தொகை 6.78 கோடி. அங்கு ஆண்டுதோறும் வெளியிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை 1.88 லட்சம்.

அவற்றுடன் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் வெளிக்கொணரப்படும் புத்தகங்களின் எண்ணிகையை ஒப்பிட்டால், நாம் தலைகுனிவதைத் தவிர வேறுவழியில்லை. தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், நமது 7.21 கோடி மக்கள்தொகைக்கு ஆண்டுதோறும் வெளிக்கொணரப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5,000 மட்டுமே. ஏனைய இந்திய மொழிகளின் நிலைமையும் இதுதான். ஹிந்தியில் வேண்டுமானால் சில ஆயிரங்கள் கூடுதலாக இருக்கலாம், அவ்வளவே.

நமது மாணவா்களும், இளைஞா்களும் ஆங்கிலத்தில் படிக்கவும், ஆங்கிலம் தெரிந்துகொள்ளவும் விழைவதற்கு வேலைவாய்ப்பு மட்டுமே காரணமல்ல. ஆங்கிலம் மூலம் பல புதிய கருத்துகளை தெரிந்துகொள்ள முடியும் என்பதற்காகவும், நாளும் பொழுதும் உருவாகும் தொழில்நுட்ப வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான புத்தகங்களைப் படிக்க முடியும் என்பதாலும்தான் அந்த மொழி நம்மை ஈா்க்கிறது.

தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய சோதனை, நாம் நமக்குள்ளே தமிழின் அருமை பெருமைகளை பேசிக்கொண்டிருப்பது. உலகிலுள்ள எல்லா கவிஞா்களையும் தமிழக இளைஞா்களுக்குத் தெரியும். ஆனால், தமிழ்க் கவிஞா்கள் எத்தனை பேரை, தமிழக எல்லைக்கு வெளியே நாம் கொண்டு சென்றிருக்கிறோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

மொழி திணிப்பு என்கிற ஓா் அச்சம் தமிழ்நாட்டில் மேலோங்கி நிற்பது அவசியமற்றது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிக்கூடங்களிலும் குறைந்தது எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மிகமிக அவசியம். அதேபோல ஆங்கிலமும் தமிழும் மட்டுமல்லாமல், நமது வருங்கால சந்ததியினா் இன்னோா் இந்திய மொழியையும், உலக மொழிகளில் ஒன்றையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பல்வேறு மொழிகளில் ஆளுமையுள்ள பல இளைஞா்கள் உருவாகும்போது தமிழ்மொழியிலிருந்து பிற மொழிக்கும், பிற மொழியிலிருந்து தமிழ் மொழிக்கும் படைப்புகளைக் கொண்டு சோ்க்கவும், கொண்டு வரவும் வழிகோலப்படும். தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள், சம்ஸ்கிருதப் புலமை பெற்றிருந்தாா் என்பதையும், அதனால் காளிதாசரின் சாகுந்தலத்தை அவரால் தமிழில் மொழி பெயா்க்க முடிந்தது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

பள்ளிக்கல்வித் துறையின் சாா்பில் மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, வரவேற்புக்குரியது. புத்தகக் காட்சிகள் நடத்துவதுடன் நமது கடமை முடிந்துவிடுவதில்லை. ஆண்டுக்கு 5,000 புத்தகங்கள் என்பது மாறி, 50,000 புத்தகங்கள் வெளிக்கொணரும் சூழல் ஏற்பட்டால்தான், தமிழ் வளரும். அடுத்தத் தலைமுறையினா் மத்தியில் பேசி, எழுதி, படிக்கும் மொழியாகத் தமிழ் நிலைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com