சரியான அணுகுமுறை! - வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு குறித்த தலையங்கம்

சரியான அணுகுமுறை! - வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு குறித்த தலையங்கம்

இந்தியா ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் வேளையில் இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கும் தலைமை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இரண்டு கூட்டங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் இந்தியாவில் நடந்தன. ஏப்ரல் மாதம் தில்லியில் அந்த அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடும், கடந்த வாரம் கோவாவில் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடும் நடந்து முடிந்திருக்கின்றன.
 அமெரிக்காவின் முனைப்பில் உருவாக்கப்பட்ட மேலை நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவைப் போலவே, அதற்கு மாற்றாக சீனாவால் முன்மொழியப்பட்ட கீழை நாடுகளின் கூட்டமைப்பு என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை (எஸ்சிஓ) குறிப்பிடலாம். ரஷியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் நான்கு மத்திய ஆசிய நாடுகளும் இதில் அங்கம் வகிக்கின்றன.
 இஸ்ரேலில் தொடங்கி வியத்நாம் வரையில் பல ஆசிய நாடுகள் எஸ்சிஓ-வில் சிறப்பு விருந்தினர் அந்தஸ்து பெறுகின்றன. இலங்கை, துருக்கி, எகிப்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இந்த அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொள்ள விழைகின்றன. விரைவிலேயே இதன் உறுப்பினர் நாடாக ஈரான் இணைய இருக்கிறது.
 கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றுக்கும், உக்ரைன் போருக்குப் பிறகும் இந்தக் கூட்டமைப்பு புதிய அரசியல், பொருளாதார மையமாக உயர்ந்து வருகிறது. மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் நேட்டோ அமைப்பு தனது செல்வாக்கை நிலைநிறுத்த விழையும் நிலையில், எஸ்சிஓ-வின் முக்கியத்துவம் அதிகரிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
 பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான ஒருங்கிணைந்த கருத்தொற்றுமை எஸ்சிஓ-வின் அடிப்படை. ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இருநாட்டுப் பிரச்னைகள், அந்த அமைப்பின் ஒன்றுபட்ட செயல்பாட்டை தடுக்கிறது. எடுத்துக்காட்டாக சீனாவுடன் எல்லை பிரச்னையும், பாகிஸ்தானுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதப் பிரச்னையும் இருப்பதால் ஓரணியில் இருந்தாலும் ஒரே குரலில் இந்த மூன்று நாடுகளும் பேச முடியாத சூழல் நிலவுகிறது.
 கோவாவில் நடந்த வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு கூடினோம், கலைந்தோம் என்பதாக இருந்ததே தவிர, எந்தவொரு பிரச்னையும் ஆழமாக விவாதிக்கப்படவில்லை. மாநாட்டின் பின்னணியில் தனிப்பட்ட முறையில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசமுடிந்தது என்பது என்னவோ உண்மை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் முக்கியமான தலைவர் ஒருவர் இந்திய மண்ணில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பதை வேண்டுமானால் குறிப்பிடும்படியான நிகழ்வாகக் கருதலாம்.
 பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் ஜர்தாரி புட்டோ, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இந்தியாவைக் காரணம் காட்டி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்தால் சர்வதேச அரசியலில் பாகிஸ்தான் மேலும் தனிமைப்படும் என்பதால் அவர் நேரில் கலந்துகொண்டார் என்று தோன்றுகிறது. அதுமட்டுமல்லாமல், கோவா மாநாட்டில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங்கும், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவும் கலந்துகொள்கிறார்கள் என்பதால் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் அவர் அந்த முடிவை எடுத்திருக்கலாம்.
 ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் மீது சற்றுக் கடுமையான கருத்துக்களை முன்வைத்தது குறித்து சில விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. விருந்தினராக வந்திருக்கும் இன்னொரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரை விமர்சிக்கலாமா என்கிற கேள்வியில் அர்த்தமில்லை. பிலாவல் ஜர்தாரி புட்டோ வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்காமல் இருந்தால் அதை இந்தியா ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகிவிடும்.
 ஸ்ரீநகரில் நடக்க இருக்கும் ஜி20 அமைப்பின் சுற்றுலா மாநாடு குறித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோவின் கருத்தை மறுதலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பூஞ்ச், ரஜௌரியில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மௌனம் காக்க இயலாது.
 பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு அரசியல் குழப்பமும் அங்கே நிலவுகிறது. அந்நாட்டின் ராணுவத்திலும் தளபதிகளுக்கு இடையே குழப்பமும், பிளவும் காணப்படுகிறது. இதுபோன்ற சூழலில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில் வியப்பில்லை. அப்படி எடுக்கும்போது இந்தியா தக்கவிதத்தில் பதிலடி கொடுக்கும் என்பதை நாம் உணர்த்தியாக வேண்டும். அதைத்தான் அமைச்சர் ஜெய்சங்கர் செய்திருக்கிறார்.
 வழக்கம்போல, பாகிஸ்தானின் எல்லை கடந்த பயங்கரவாதம் குறித்து பேசுவதுடன் நிற்காமல் அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்திருக்கும் புதிய நிலைப்பாடு பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் ஏனைய நாடுகளும்கூட எதிர்பார்த்திருக்காது. "இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஜம்மு-காஷ்மீருக்கு பழைய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்' என்கிற பிலாவல் புட்டோவின் கருத்துக்கு அமைச்சர் ஜெய்சங்கரின் பதில் இது-
 "எஸ்சிஓ-வின் உறுப்பினர் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் என்கிற முறையில் பிலாவல் புட்டோ அதற்கான மரியாதைகளுடன் நடத்தப்பட்டார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒரே பிரச்னை அவர்கள் வசமிருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் பகுதிகளாகத்தான் இருக்க முடியும்!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com