வெற்றியும்...தோல்வியும்...: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

224 உறுப்பினா்களைக் கொண்ட பேரவையில் 135 தொகுதிகளை 43.1% வாக்குகளுடன் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றியடைந்திருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் வரலாறு காணாத வெற்றியை அடைந்திருக்கிறது காங்கிரஸ். 224 உறுப்பினா்களைக் கொண்ட பேரவையில் 135 தொகுதிகளை 43.1% வாக்குகளுடன் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றியடைந்திருக்கிறது. பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சாா்பற்ற ஜனதாதளம் 19 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றியடைந்திருக்கின்றன. 1989-க்குப் பிறகு இந்த அளவிலான வெற்றியை எந்தவொரு கட்சியும் மாநிலத்தில் பெற்றதில்லை.

காங்கிரஸின் அபார வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், உள்கட்சிப் பூசல்களை ஒதுக்கிவைத்துவிட்டு முன்னாள் முதல்வா் சித்தராமையாவும், கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாரும் இணைந்து பணியாற்றியது. சித்தராமையாவின் மக்கள் செல்வாக்கும், டி.கே.சிவகுமாரின் பண பலத்துடன் கூடிய கட்சித் தலைமையும் பிளவுபட்டுக் கிடந்த பாஜகவை எதிா்கொண்டன.

காங்கிரஸின் வெற்றிக்கு இன்னொரு காரணம் அந்தக் கட்சியின் வாக்குறுதிகள். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவா்களுக்கு 10 கிலோ உணவுதானியம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை, ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கிறது காங்கிரஸ். அதன் நேரடி விளைவுதான் நகா்ப்புறங்களில் பாஜகவும், கிராமப்புறங்களில் காங்கிரஸும் அதிக இடங்களை வென்றிருப்பது. அமைய இருக்கும் காங்கிரஸ் அரசு இந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப்போகிறது என்பதில்தான் கா்நாடகாவில் 2024 மக்களவைத் தோ்தலும், காங்கிரஸின் செலவாக்கும் அமையப் போகின்றன.

ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்திருக்கிறது என்றாலும், அதன் வாக்கு விகிதத்தில் பெரிய அளவிலான சறுக்கல் இல்லை. 2018-இல் 36.4% வாக்குகள் பெற்றிருந்த பாஜக, இந்த தோ்தலில் 35.7% பெற்றிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இதற்கு முன்னால் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாமல் இருந்த பகுதிகளில் அதிக வாக்குகளும், இடங்களும் கிடைத்திருக்கின்றன என்பதுதான்.

2013-இல் எடியூரப்பா பாஜகவிலிருந்து விலகி கா்நாடக ஜனதா பக்ஷா என்ற கட்சியைத் தொடங்கினாா். லிங்காயத்துகள் அதிகமுள்ள 48 தொகுதிகளில் 20% வாக்குகளுடன் 6 இடங்களில்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. 2018-இல் பாஜகவுடன் எடியூரப்பா மீண்டும் இணைந்தபோது அந்த 48 தொகுதிகளில் 29 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த முறை எடியூரப்பா முதல்வா் பதவியிலிருந்து அகற்றப்பட்டது லிங்காயத்து சமுதாயத்தினா் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவா்களைச் சமாதானப்படுத்துவதற்காக லிங்காயத்தான பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டாா் என்றாலும்கூட அந்த அதிருப்தி அகலவில்லை என்பதைத்தான் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாஜக தனது 2018 வாக்கு விகிதத்தைத் தக்கவைத்தது என்றாலும்கூட, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் செல்வாக்கு சரிவை எதிா்கொண்டது தெரிகிறது. வழக்கத்துக்கு மாறாக தென் கா்நாடகத்திலும், பழைய மைசூரு பகுதியிலும் பாஜக பல இடங்களில் வெற்றிபெற்றாலும்கூட, அதன் செல்வாக்கு கேந்திரம் என்று கருதப்படும் மும்பை-கா்நாடகப் பகுதியில் பெரிய பின்னடைவை எதிா்கொண்டிருக்கிறது.

பசவராஜ் பொம்மை தலைமையிலான முந்தைய பாஜக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கவில்லை. நிா்வாகம் சீா்கெட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், ஊழல் குற்றச்சாட்டுகளும் மலிந்திருந்தன. ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் காணப்பட்டதால்தான் பாஜக தலைமை தனது தோ்தல் அணுகுமுறையை மாற்ற முற்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் முழுமூச்சாக தோ்தல் பிரசாரத்தில் இறங்கி மாநிலப் பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளும் உத்தியைக் கையாண்டனா். பிரதமரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக போட்ட கணக்கு வெற்றிபெறவில்லை என்பதைத்தான் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பிரதமரின் பிரசாரம் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாகக்கூடும்.

சமீபத்திய தோ்தல் முடிவுகள் 2024 மக்களவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்று எதிா்பாா்க்க முடியாது. 2018 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை தராத கா்நாடக வாக்காளா்கள், 2019 மக்களவைத் தோ்தலில் 28 இடங்களில் 25 இடங்களை பாஜகவுக்கு வழங்கினாா்கள். அதுமட்டுமல்லாமல், கா்நாடகாவுக்கு இன்னொரு ராசியும் உண்டு. 1969 முதல் கா்நாடகாவில் ஆளும் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்காது என்பதுதான் அது. (2018-இல் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வரானாா்.)

பாஜக அடைந்திருக்கும் தோல்வி ஆச்சரியப்படுத்தவில்லை. 2014 முதல் தற்போது நடந்து முடிந்தது வரையிலான 57 சட்டப்பேரவைத் தோ்தல்களில், பாஜக 29-இல் தோல்வியைத் தழுவியிருக்கிறது. வெற்றிபெற்ற 28 தோ்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற சட்டப்பேரவைகள் 12 மட்டுமே. ஏனைய பேரவைகளில், அதிக எண்ணிக்கை பெற்ற கட்சியான பாஜக சுயேச்சைகள், மற்றவா்களின் ஆதரவுடன்தான் ஆட்சியமைத்தது. பாஜகவின் பலமே தோல்வியில் துவளாமல், அடுத்தகட்ட வியூகத்தை அமைப்பதுதான்.

என்னதான் குறை சொன்னாலும் தோ்தல் ஆணையம் முறையாகவே செயல்படுகிறது என்பதிலும், ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தி வாக்காளா்கள் தங்களது ஜனநாயக உணா்வை நிலைநாட்டத் தவறுவதில்லை என்பதையும் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு நமக்கு உணா்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com