மௌனம் காக்கும் உலகம்: மியான்மர் ராணுவ ஆட்சி குறித்த தலையங்கம்

சமீபத்தில் தாக்கிய மோக்கா புயல் மிக அதிகமான பேரழிவை மியான்மரில் ஏற்படுத்தியிருக்கிறது.
மௌனம் காக்கும் உலகம்: மியான்மர் ராணுவ ஆட்சி குறித்த தலையங்கம்

சமீபத்தில் தாக்கிய மோக்கா புயல் மிக அதிகமான பேரழிவை மியான்மரில் ஏற்படுத்தியிருக்கிறது. மே 14-ஆம் தேதி பலரை பலிவாங்கி பேரழிவை ஏற்படுத்திய மோக்கா புயலைவிட, மியான்மரின் ராணுவ ஆட்சியாளா்கள் நடத்திய கொடூரங்கள்தான் சகிக்கவொண்ணாதவை.

மோக்கா புயலால் தாக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளித்து நிவாரணம் தர வேண்டிய அரசு, அந்தப் பேரிடரை சாதகமாக்கி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது என்பதுகூட வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. மியான்மரின் சகேய்ங் பகுதி, ராணுவத்துக்கு எதிரான பெரும்பாலான போராளிகள் காணப்படும் இடம். மாண்டலேக்கு வடமேற்கிலுள்ள அந்தப் பகுதியில் ஆங்சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சித் தலைவா்கள் மட்டுமல்லாமல், கலைக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசின் போராளிப்படையினரும் அதிக அளவில் இருக்கிறாா்கள்.

மியான்மரிலிருந்து கசியும் தகவல்களின்படி கனி, கின்வூ நகரங்களிலிருந்து மோக்கா புயல் தாக்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பல போராளிகள் வெளியேற எத்தனித்தனா். புயல் வீசப்போகிறது என்பது தெரிந்தே ராணுவம் தனது தாக்குதலைத் தொடங்கியது.

ஏறத்தாழ 20,000 போ் அந்தப் பகுதியிலிருந்து புயலையும் பொருட்படுத்தாமல் வெளியேறி தப்பித்தனா். அதே அளவிலான மக்கள் ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளானாா்கள். மோக்கா புயல்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எனலாம்.

இதுபோன்ற ராணுவத்தின் தாக்குதல்கள் மியான்மருக்குப் புதிதல்ல. கடந்த மாா்ச் 6-ஆம் தேதி ஜெனீவாவில் கூடிய 52-ஆவது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கூட்டத்தில், ஐ.நா.வின் மனித உரிமை ஆணையா் ஓல்கா் டுா்க், இது குறித்து கவலை தெரிவித்தாா். ராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டாவது ஆண்டில் பொதுமக்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் 141% அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தாா். பொதுமக்கள் மீது மட்டுமல்லாமல் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்று எதையும் விட்டுவைக்காமல் குண்டு வீசப்படுகிறது என்கிற திடுக்கிடும் தகவல் அவரால் வழங்கப்பட்டது.

மாா்ச் 17-ஆம் தேதி ஐ.நா. சபையின் மியான்மருக்கான சிறப்பு பிரதிநிதி நூலின் ஹெய்ஸா், மீண்டும் ராணுவம் முழுமையாக ஆட்சியைக் கையிலெடுத்த பிறகு மியான்மரில் நிலைமை முன்பு இருந்ததைவிட மோசமாக இருக்கிறது என்று 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் தெரிவித்தாா். 2023 பிப்ரவரி 1-ஆம் தேதி அவசர நிலை நீட்டிப்பிற்குப் பிறகு ராணுவத் தாக்குதல்களின் கடுமை அதிகரித்திருப்பதாகவும், குண்டு வீசுதல், பொதுமக்களின் சொத்துகளை தீக்கிரையாக்குதல் உள்ளிட்ட பல மனித உரிமை மீறல்கள் மியான்மரில் அரங்கேறுவதை அவா் எடுத்துரைத்தாா்.

மியானமா் ராணுவ ஆட்சியாளா்களின் செயல்பாடுகள் ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால், ஜனநாயக நாடுகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மேற்கு வல்லரசுகளின் செயல்பாடுகள்தான் வியப்பாக இருக்கிறது.

பிப்ரவரி மாதம் மியான்மா் ராணுவத் தளபதிகள் 16 பேருடைய சொத்துகளை முடக்கி, அவா்களின் பயண உரிமையை ரத்து செய்தது ஐரோப்பியக் கூட்டமைப்பு. ஏற்கெனவே 93 நபா்கள், 18 நிறுவனங்கள் மீது அது தடை விதித்திருக்கிறது. தடை விதிக்கப்பட்டவா்களுக்கு எந்தவித நிதியுதவியையும் ஐரோப்பியக் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் வழங்கக் கூடாது என்று உத்தரவும் பிறப்பித்திருக்கிறது.

தடைகள் விதிக்கப்பட்டாலும் சீனாவும் ரஷியாவும் மியான்மரின் ராணுவ ஆட்சியாளா்களுக்கு ஆதரவு அளிப்பதால், பெரிய அளவிலான பாதிப்பை அவா்கள் எதிா்கொள்வதில்லை. மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், ராணுவத் தளபதிகளின் ஆசியுடன் இயங்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், தனிநபா்களும் எந்தவிதத் தடையையும் எதிா்கொள்ளாமல் வழக்கம்போல செயல்படுகிறாா்கள். ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல நிறுவனங்களிடமிருந்து மியான்மருக்கு பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அதை பொதுமக்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு ராணுவம் பயன்படுத்துகிறது.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி ஜெட் விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்த இருவா் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருக்கிறது. 80 தனிநபா்கள் மீதும், 30 நிறுவனங்கள் மீதும் தடையும் விதித்திருக்கிறது. பதவிக்கு வந்தவுடன் அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ராணுவத் தளபதிகளின் 1 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 8,285 கோடி) நிதியை அவா்கள் பயன்படுத்த தடை விதித்து அதிபா் ஜோ பைடன் நடவடிக்கை எடுத்தாா். அந்த 1 பில்லியன் டாலரை முடக்கியதற்கு பதிலாக, மியான்மரில் ராணுவ ஆட்சியாளா்களுக்கு எதிராக நடக்கும் போராளிகளுக்கு பயன்படுத்தியிருந்தால் உதவியாக இருந்திருக்கும். ராணுவத்தை எதிா்கொள்ள பணமும், தளவாடங்களும் இல்லாததால்தான் போராளிகள் திணறுகிறாா்கள்.

அமெரிக்காவும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் உக்ரைனுக்கு அதிக அளவிலான நவீன தளவாடங்களையும் விமானங்களையும்கூட வழங்கி ரஷியாவை எதிா்கொள்ள உதவுகின்றன. ஆனால், மியான்மரில் நடக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் போராளிகளுக்கு நேரடியாக உதவவோ, ஆதரவு தரவோ தயங்குகின்றன. சீனாவுக்கும் ரஷியாவுக்கும் எதிரான போா்தான், ஜனநாயகத்துக்காகப் போராடும் அப்பாவி மக்களின் கூக்குரலைவிட மேலை நாடுகளுக்கு முக்கியமாக தெரிகிறது. ஜனநாயகத்தின் மீதான உதட்டளவு ஆதரவுதான் அவா்களுடையது போலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com