காத்திருக்கும் பேராபத்து! - இந்திய நகரங்களில் காற்றின் தரம் குறித்த தலையங்கம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
2 min read

தில்லி, மும்பை உள்ளிட்ட பல இந்திய நகரங்களில் காற்றின் தரம் குறைந்து மக்கள் மூச்சுவிடக்கூட திணறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அறுவடைக்குப் பிறகு வயல்களில் தீ வைப்பதைத் தடுக்குமாறு பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தலைமையிலான அமர்வு மக்களின் சுகாதாரத்தை படுகொலை செய்யும் நடவடிக்கை என்று அதைக் கண்டித்திருக்கிறது.
நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பேரியம் சார்ந்த பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதித்திருக்கிறது. காற்று மாசு காரணமாக புகை மண்டலம் போல சுற்றுச்சூழல் மாறியிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 
காற்றின் தரம் குறைந்திருப்பது மட்டுமே அச்சுறுத்தல் அல்ல. அதைவிடப் பெரிய அச்சுறுத்தலாக புவி வெப்பமயமாதல் ஒட்டுமொத்த மனித இனத்தையே கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. உலகில் உள்ள எந்தவொரு நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. மிக அதிகமாக எல் - நினோவாலும் புவி வெப்பமயமாதலாலும் பாதிக்கப்பட்டிருப்பது ஐரோப்பா என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 
இந்த ஆண்டு ஐரோப்பாவின் பல மலைகளில் காட்டுத் தீ பரவி ஆயிரக்கணக்கான மரங்கள் சாம்பலாகி இருக்கின்றன. முந்தைய பதிவுகளைக் கடந்து வெப்பம்  அதிகரிப்பதால் ஐரோப்பாவில் ஒரு நகரமே அழிந்திருக்கிறது. 75 நாடுகளில் வழக்கமான வெப்பநிலை, இரண்டு டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமாக  அதிகரித்ததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சாதாரணமானதல்ல.
பூமத்திய ரேகையையொட்டிய பசிபிக் மகா சமுத்திரத்தின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் எல்-நினோவின் தாக்கம் ஒரு முக்கியமான காரணம். இந்த ஆண்டு காணப்படும் அதிகரித்த வெப்பநிலைக்கு எல்-நினோவின் தாக்கமும் முக்கியமான காரணம். இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கடந்த ஏழு மாதங்களின் கடல் நீர்மட்ட வெப்பமும், ஐந்து மாதங்களின் நிலப்பகுதிகளின் வெப்பமும் இதுவரை இல்லாத அளவுக்குப் பதிவாகி இருக்கின்றன. 1982 முதல் 2011 வரையிலான வெப்பநிலை சராசரியைவிட கணிசமான அளவில் கடல்மட்ட வெப்பநிலை அக்டோபர் மாதம் கூடுதலாகக் காணப்பட்டது. ஏப்ரலில் தொடங்கிய வெப்ப அதிகரிப்பு எல்-நினோவின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க மேலும் உயர்ந்தது. போதாக்குறைக்கு புவி வெப்பமயமாதலும் சேர்ந்து கொண்டது.
கடந்த 174 ஆண்டு உலக பருவநிலை பதிவில் இந்த ஆண்டுதான் (2023) மிக அதிகமான வெப்பத்தை சந்தித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1981 முதல் பதிவாகி இருக்கும் உலக சராசரி வெப்பத்தைவிட இந்த ஆண்டு வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது.
வழக்கமாக புவி வெப்பமடையும்போது 93 % வெப்பத்தை கடல் நீர் உள்வாங்குகிறது. அது ஆவியாகி மழை பொழியும்போது பூமி குளிர்கிறது. எல்-நினோ காரணமாக கடலின் மேல்மட்ட நீர் ஏற்கெனவே வெப்பமாகிவிடுவதால் இந்த சுழற்சி பாதிக்கப்படுகிறது. அதனால்தான் இந்து மகா சமுத்திரம் போன்ற பகுதிகளில் வெப்ப அலைகள் தோன்றி, அந்தப் பகுதியில் உள்ள நாடுகளின் பருவ நிலையை பாதிக்கின்றன.
இதைவிடக் கவலையளிப்பது, அடுத்த மூன்று மாதங்கள் - அதாவது நவம்பர், டிசம்பர், ஜனவரியில் - எல்-நினோவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்கிற கணிப்பு. அந்த நிலை தொடர்ந்தால் வெப்பம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், கடல்வாழ் உயிரினங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடும். அவற்றின் இனப்பெருக்கம் தடைபட்டு கடல்வளம் குறையும்.
ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக 2023-இல் காணப்படும் அதிகரித்த வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரியிலும், ஆகஸ்டிலும் வெப்பமும், எப்போதும் இல்லாத அளவில் பருவமழைப் பொழிவும் இந்த ஆண்டு காணப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் பருவமழை சீராகப் பொழியாமல் இருந்ததையும் குறிப்பிட வேண்டும். கடந்த அக்டோபர் மாதம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக வெப்பம் காணப்பட்ட மாதம் என்றும் பதிவாகி இருக்கிறது.
தொழிற்புரட்சி காலத்தைவிட 1.5 டிகிரி - 2 டிகிரி சென்டிகிரேட் அதிகரித்த வெப்பநிலையைக் குறைப்பதற்கான எந்த முயற்சிகளும் இதுவரை வெற்றிபெறவில்லை. 2 டிகிரி சென்டிகிரேட் அளவில் புவி வெப்பமயம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும்கூட, இந்தியாவில் வெப்ப அலைகள் எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
மிக அதிகமாக பாதிக்கப்பட இருப்பவை இந்தியாவின் நகரங்கள். சராசரி வெப்பம் 41 டிகிரி சென்டிகிரேடில் இருந்து 46 டிகிரி சென்டிகிரேடாக அதிகரித்தால் பலருடைய மரணத்துக்கும் அது காரணமாகக்கூடும். கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் வெப்ப அலை காரணமாக 15,700 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் எனும்போது, அதுபோன்ற சூழல் இந்தியாவிலும் ஏற்படாது என்று கூறுவதற்கில்லை.
வறட்சியும், பஞ்சமும் லட்சக்கணக்கானோரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கின்றன. 1876 - 1878, 1899 - 1900 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியும், பஞ்சமும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோரின் மரணத்துக்கு காரணம் என்று வரலாறு பதிவு செய்கிறது. அதனால், அதிகரித்துக் கொண்டிருக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள இப்போதே நாம் தயாராக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com