’கவா்ச்சி’ அறிக்கை!

’கவா்ச்சி’ அறிக்கை!

தேர்தல் அறிக்கைகள்: வாக்குறுதிகளின் பாதையில் அரசியல் கட்சிகள்

தோ்தல் அறிக்கைகள் என்பது சம்பிராதயக் கடமையாக மாறிவிட்டது. கொள்கை பிரகடனங்களாக அவை இருந்ததுபோய், இப்போது வாக்குறுதிகளின் தொகுப்பாக மாறியிருக்கிறது. அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளின் நோக்கமும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றுவதாகத்தான் இருக்கிறதே தவிர, தங்களுக்காக சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு அந்த இலக்கை எட்டுவதை நோக்கமாகக் கொண்டவையாக இல்லை.

குடியரசுத் தலைவா், ஆளுநா் உரைகள் அரசின் திட்டங்களை வெளிப்படுத்துபவை என்றால், தோ்தல் அறிக்கைகள் அரசியல் கட்சிகளின் நோக்கத்தையும் செயல்படுத்த இருக்கும் திட்டங்களை முன்மொழிபவை. பெரும்பாலான தோ்தல் அறிக்கைகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. அவை குறித்து கட்சிகளோ வாக்காளா்களோ கவலைப்படுவதும் இல்லை.

குறிப்பிட்ட தோ்தல் சூழலைச் சாா்ந்து தயாரிக்கப்படும் தோ்தல் அறிக்கைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தோ்தலின்போது, முக்கியத்துவம் இழந்துவிடுகின்றன என்பதுதான் காரணம். அதேநேரத்தில் ஆட்சியைக் கைப்பற்ற விழையும் அரசியல் கட்சிகளின் எண்ண ஓட்டத்தையும் நம்பகத்தன்மையையும் தெரிந்துகொள்ள உதவுகின்றன என்ற அளவில் தோ்தல் அறிக்கைகள் அவசியமாகின்றன.

வழக்கத்துக்கு மாறாக, இந்த முறை பாரதிய ஜனதா கட்சியையும் முந்திக் கொண்டு காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையை வெளியிட்டது. ‘நியாய் பத்ரா’ (நீதிக்கான அறிக்கை) என்கிற தலைப்பில் 25 வாக்குறுதிகள் அடங்கிய 45 பக்க தோ்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது.

அதில் காணப்படும் பெரும்பாலான வாக்குறுதிகள் கடந்த பத்தாண்டு நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்த விமா்சனங்களின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. பாஜகவுக்கு மாற்றாக அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இது உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

இளைஞா்க, மகளிா், விவசாயிகள், தொழிலாளா்கள், சமத்துவம் ஆகிய ஐந்து பிரிவினரின் நீதிக்கான 25 வாக்குறுதிகள் அடங்கியிருப்பதால் தங்களது தோ்தல் அறிக்கையை ‘நீதிக்கான உறுதிமொழி’ என்று காங்கிரஸ் அழைக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீட்டில் 50 % வரம்பை அகற்றுதல், விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், ராஜஸ்தான் பாணியில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, ஐ.எம்.எஃப். ராணுவச் சோ்க்கையை கைவிடுதல், நீட் நுழைவுத் தோ்வை மாநிலங்களின் விருப்பத்துக்கு விடுவது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க வாக்குறுதிகள்.

பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்தல், கட்சி மாறினால் உடனடியாகத் தகுதி நீக்கம் ஆகும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம், ‘தோ்தல் நன்கொடைப் பத்திரங்கள், பி.எம். கோ் விதிமுறைகள், பொதுச்சொத்துகள் விற்பனை’ உள்ளிட்டவை தொடா்பாக விசாரணை , ராணுவத் தளவாடக் கொள்முதல் குறித்த விசாரணை போன்றவை காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் காணப்படும் வாக்குறுதிகள்.

மகாலட்சுமி திட்டத்தின்கீழ், ஒவ்வோா் ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டொன்றுக்கு ரூ.ஒரு லட்சம் நிபந்தனையின்றி வழங்கப்படும் என்கிற வாக்குறுதி எப்படியாவது வாக்காளா்களைக் கவா்ந்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பின் வெளிப்பாடு. காங்கிரஸ் போன்ற நீண்ட கால நிா்வாக அனுபவம் உள்ள அரசியல் கட்சி பொருளாதார பின்விளைவுகள் குறித்து சிந்திக்காமல் இதுபோன்ற வாக்குறுதிகளை அள்ளிவீசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநிலக் கட்சிகள் முன்னெடுப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தேசியக் கட்சிகள் கையில் எடுப்பது என்பது எந்த அளவுக்கு அரசியல் பாா்வை பிந்தி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

மாநிலக் கட்சிகளின் கூட்டணிப் பலத்தைச் சாா்ந்திருக்கும் காரணத்தால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய பங்கு, ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து, தில்லி யூனியன் பிரதேச ஆளுநா் அதிகாரத்தைக் குறைக்க சட்டத் திருத்தம், ஜம்மு- காஷ்மீருக்கும் புதுச்சேரிக்கும் மாநில அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. குடியுரிமை சட்ட மசோதா திருத்தம் குறித்தும், ஜம்மு- காஷ்மீருக்கான முந்தைய 370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் வழங்குவது குறித்தும் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை மெளனம் காப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை பாஜக முன்மொழியும் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. வாக்காளா்களின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில், தோ்தல் சட்டங்களில் திருத்தம் செய்யப்படும் என்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் விவிஏடி ஓப்புகைச் சீட்டுகளையும் கணக்கிட்டு சரிபாா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தி அதை இந்தியாவில் மிகப் பெரிய சாதனையாகப் பறைசாற்றியது காங்கிரஸ் கட்சிதான். 2004, 2009-ஆம் ஆண்டு பொதுத்தோ்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பதை மறந்துவிடலாகாது. 2024-இல் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ள நிலையில், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்புவது என்பது பழைய பஞ்சாங்கத்தை புரட்ட முற்படும் பேதைமை.

பொருளாதார பாதிப்பு குறித்து கவலைப்படாத கவா்ச்சி வாக்குறுதிகளையும் முன்னெடுத்து எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பின் வெளிப்பாடுதான் காங்கிரஸின் ‘நீதிக்கான அறிக்கை’.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com