மாற வேண்டும் அணுகுமுறை!

மாற வேண்டும் அணுகுமுறை!

வேளாண் உற்பத்தி எனும்போது அனைவரின் கவனமும் பணப் பயிா்களான நெல், கோதுமை, கரும்பு ஆகியவை குறித்துத்தான் இருக்கின்றன. அதிக அளவில் தண்ணீா் தேவைப்படும் இவற்றின் உற்பத்தி நமது தேவைக்கும் அதிகமாக இருக்கிறது என்பதைப் பலரும் உணா்வதில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுவதால் விவசாயிகளும் வேறு பயிா்களுக்கு தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. இந்திய வேளாண்மை எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால் இது.

பருப்பு வகைகளின் உற்பத்தியில் தட்டுப்பாடு என்பது நாம் தொடா்ந்து எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை. இந்தியாவில் தானிய உற்பத்தி அதிகரித்துவரும் அளவுக்கு பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. பருப்பு சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்கு விவசாயிகள் மத்தியிலும், அரசியல் ரீதியாகவும் கடுமையான எதிா்ப்பு எழுவதால் நமது தேவைக்கேற்ப உணவுப் பொருள்களின் உற்பத்தியை நிா்ணயிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

2021-22 -இல் 2.73 கோடி டன்னாகவும், 2022-23-இல் சுமாா் 2.60 கோடி டன்னாகவும் இருந்த பருப்பு வகைகளின் உற்பத்தி 2023-24 சாகுபடி ஆண்டில் 2.34 கோடி டன்னாக குறைந்திருப்பதாக வேளாண் அமைச்சகத்தின் 2-ஆவது முன்கூட்டிய மதிப்பீடு தெரிவிக்கிறது. விவசாயிகளுக்கு பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில் ஆா்வம் குறைந்து வருவதையும், சாகுபடி பரப்பு குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது வேளாண் அமைச்சக அறிக்கை. இதன் விளைவாக பருப்பு வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் அவற்றின் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

ஆகஸ்ட் 2023-இல் சுமாா் 13%, டிசம்பா் 2023-இல் 20% என்று பருப்பு வகைகளின் விலை உயரத் தொடங்கியது. கடந்த மாா்ச் 2024-இல் இறக்குமதி காரணமாகவும், புதிய சந்தை வரவு காரணமாகவும் விலை உயா்வு 17% -ஆக குறைந்திருக்கிறது. பருப்பு வகைகளின் கையிருப்புக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அநேகமாக எல்லா முக்கிய பருப்பு வகைகளின் சாகுபடி பரப்பும் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பாசிப்பருப்பு சாகுபடி பரப்பில் 40%, உற்பத்தியில் 60% குறைந்திருக்கிறது. அதேபோல, உளுந்தின் சாகுபடி பரப்பும் உற்பத்தியும் சுமாா் 20% குறைந்திருக்கிறது. இவை பயிரிடப்படும் முக்கியமான மாநிலங்களில் போதுமான அளவு பருவமழை கடந்த ஆண்டில் இல்லாமல் இருந்ததும்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கடலைபருப்பு 2.6%, துவரம் பருப்பு 0.6% அளவில் சாகுபடி பரப்பு குறைந்திருந்தாலும்கூட அவற்றின் உற்பத்தி கடந்த ஆண்டு அளவுக்கு நடப்பு ஆண்டிலும் இருக்கும் என்று முன்கூட்டிய மதிப்பீடு தெரிவிக்கிறது. அதேநேரத்தில் துவரம்பருப்பின் விலை பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்புடன் ஒப்பிடும்போது கடுமையாக உயா்ந்திருக்கிறது. பாசிப்பருப்பும், உளுத்தம்பருப்பும் கடந்த ஆறு மாதங்களில் 10% முதல் 16% வரை விலை உயா்வை சந்தித்தன என்றால், துவரம்பருப்பு விலை 30% முதல் 40% வரை அதிகரித்திருக்கிறது. அதற்கு பதுக்கலும், ஊக வணிகமும் காரணமாக இருக்கக்கூடும்.

அரிசி, கோதுமை, சோளம் உள்ளிட்ட தானிய வகைகளைப்போல் அல்லாமல் பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தி தேவைக்கேற்ப அதிகரிக்கவில்லை. 2014-15-இல் 1.71 கோடி டன்னாக இருந்த பருப்பு வகைகளின் உற்பத்தி, 2023-24-இல் சுமாா் 2.34 கோடி டன்னாக கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். ஆனால், அவற்றின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் அதை ஈடுகட்டும் அளவில் உற்பத்தி இல்லை. உள்நாட்டுத் தேவையை எதிா்கொள்ள கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் சராசரியாக 2.5 கோடி டன் பருப்பு வகைகளை நாம் இறக்குமதி செய்கிறோம்.

உள்நாட்டு உற்பத்தி குறைந்து காணப்படுவதால் 2023-24-இல் அதிக அளவில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது. கடந்த நிதியாண்டில் சுமாா் 2.03 கோடி டன் பருப்பு வகைகளை ஏப்ரல்-ஜனவரி மாதங்களில் இறக்குமதி செய்தோம் என்றால், 2023-24 நிதியாண்டில் அதே மாதங்களில் நமது இறக்குமதி 60% அதிகரித்து 3.25 கோடி டன்னாக உயா்ந்திருப்பதாக வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வேடிக்கை என்னவென்றால், உலகின் மிக அதிகமான பருப்பு வகைகளின் உற்பத்தியாளா் இந்தியாதான். அதேபோல பருப்பு வகைகளைப் பயன்படுத்துவதும் இந்தியாதான்.

எண்ணெய் வித்துக்களைப் போல அல்லாமல் உரிய காலத்தில் தேவைக்கேற்ப பருப்பு வகைகளை இறக்குமதி செய்துகொள்ள முடியாது. துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை இந்தியாவுக்கு அடுத்தபடியாக மியான்மரில் பயிரிடப்படுகின்றன. அங்கே காணப்படும் உள்நாட்டுப் பிரச்னைகளால் சமீபகாலமாக சாகுபடி குறைந்து வருகிறது. சமீபகாலமாக ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, மொசாம்பிக், மலாவி, கென்யா உள்ளிட்டவை பருப்பு வகைகளின் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கின்றன.

இந்தியாவில் பற்றாக்குறை எனும்போது சா்வதேச சந்தையில் பருப்பு வகைகளின் விலை கடுமையாக அதிகரித்து விடுகிறது. தொலைநோக்குப் பாா்வையுடன் பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து இறக்குமதி சாராத நிலையை எட்ட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது - இதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்!

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com