பருவமழை கணிப்பு!- தென்மேற்குப் பருவமழை குறித்த தலையங்கம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கேரளத்தில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான மழைப்பொழிவைத் தரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். பருவமழை குறித்த தனது முன்னோட்டக் கணிப்பை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் வானிலை மையம் வெளியிடுவது வழக்கம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை வழக்கத்துக்கு அதிகமான மழைப்பொழிவு காணப்படும் என்கிற அறிவிப்பு மையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

"ஜூன்-செப்டம்பர் பருவமழைக் காலம்தான் இந்தியாவின் உண்மையான நிதி அமைச்சர்' என்று நிதி அமைச்சராக இருந்த இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருமுறை தெரிவித்ததிலிருந்து எந்த அளவுக்குப் பருவமழை முக்கியமானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கடந்த கால் நூற்றாண்டு காலத்தில், இந்தியாவின் வேளாண்மை பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் கண்டிருக்கிறது என்றாலும்கூட பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலை முற்றிலுமாக மாறிவிடவில்லை.

கால்வாய்கள் மூலமும், ஆழ்துளைக் கிணறுகள் மூலமும் இந்திய விவசாயம் வறட்சியிலிருந்து ஓரளவுக்கு பாதுகாக்கப்படுகிறது. புதிய வகை விதைகள், விஞ்ஞான ரீதியிலான பாசன முறை உள்ளிட்டவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும், தென்மேற்கு பருவமழையின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை. இந்தியாவுக்கு கிடைக்கும் மொத்த பருவமழையில் 70% தென்மேற்குப் பருவமழையிலிருந்து கிடைக்கிறது. வேளாண்மைக்கு உதவுவது மட்டுமல்லாமல், நிலத்தடி நீரை மீள் நிரப்புவதிலும் (ரீசார்ஜ்), அனல் மின்சக்தி உற்பத்தியிலும் அது பெரும் பங்கு வகிக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிட 6% அதிகமாக இருக்கும். இந்திய பொருளாதாரத்தில் வேளாண்துறையின் பங்கு சுமார் 17% மட்டும்தான் என்றாலும், பருவ மழையின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது. மொத்த சாகுபடி பரப்பில் பாதிக்கு மேல் பருவமழையை நம்பி இருக்கும் நிலை மாறிவிடவில்லை. "காரீஃப்' பருவ சாகுபடியில் 60% பருவமழையை நம்பித்தான் செய்யப்படுகிறது. அதனால்தான், தென்மேற்குப் பருவமழையின் வரவை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

பருவமழை மூன்று காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக, வேளாண் உற்பத்தியை அதிகரித்து கிராமப்புற வேலைவாய்ப்பை பெரிய அளவில் உருவாக்குகிறது; இரண்டாவதாக, விவசாயம் அடிப்படையில் பருவமழையை நம்பி இருப்பதால் உணவு உற்பத்திக்கு அது முக்கியம்; மூன்றாவதாக, உணவுப் பொருள்களின் விலைவாசியை கட்டுக்குள் வைப்பதுடன், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் அவசியமான 89 நீர்த்தேக்கங்களை நிரப்புவதில் பருவமழை முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது பெரும்பாலான நீர்த்தேக்கங்கள், அதன் கொள்ளளவில் பாதி அளவுதான் இருக்கின்றன. பல பகுதிகளில் ஏற்கெனவே குடிநீர்த் தட்டுப்பாடும் தொடங்கியிருக்கும் நிலை.

இந்த ஆண்டு நல்ல பருவமழைப் பொழிவு கிடைப்பதற்கான வாய்ப்பை, பலவீனப்பட்டுவரும் "எல் நினோ' தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பானிஷ் மொழியில் "சிறுவன்' என்று பொருள்படும் "எல் நினோ' பருவம் பசிபிக் கடலின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் காணப்படும் கடல்மட்ட வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் எதிர்வினையான "சிறுமி' என்று பொருள்படும் "லா நினா' என்பது பசிபிக் கடல் மட்டம் குளிர்வதால் உருவாகும் நிலை.

சராசரியாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை "எல் நினோ' ஏற்பட்டு ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள் நீடிக்கும். கடந்த ஜூன் மாதம் உருவான "எல் நினோ' டிசம்பர் மாதம் உச்சம் தொட்டது. இப்போது அது பலவீனம் அடைந்து கொண்டிருக்கிறது. 1954 முதல் காணப்பட்ட 22 "லா நினா' ஆண்டுகளில் 1974, 2000-ஆண்டுகளைத் தவிர ஏனைய ஆண்டுகளில் இந்தியாவுக்கு பருவமழை வழக்கத்துக்கு அதிகமாகக் கிடைத்திருக்கிறது. அதுதான் இந்த ஆண்டு வானிலை மையத்தின் எதிர்பார்ப்புக்கு காரணம்.

இந்திய வானிலை மையம் ஜூன்-ஜூலை மாதங்களில் எந்த அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்பது குறித்து தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை. இரண்டு மாத சராசரி மழைப்பொழிவும், கடைசி இரண்டு மாதங்களில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவும்

வேளாண்மைக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால் 2018-இல் கேரளம் சந்தித்த பெருவெள்ளத்தைப்போல ஏற்பட்டால் உயிர்களுக்கும், வாழ்வாதாரத்துக்கும், கட்டமைப்புக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மே மாதம் வானிலை மையம் வழங்க இருக்கும் முன்னறிவிப்பின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மாநிலங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதும் மிக மிக அவசியம்.

ஜூன் மாதத் தொடக்க பருவமழை காலத்தில் அதிகமாக தண்ணீரை உறிஞ்சும் நெல் பயிரிடப்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான சாகுபடிப் பரப்பு பாசன கால்வாய்களாலும், ஆழ்துளை கிணறுகளாலும் இணைக்கப்பட்டிருப்பதால் சராசரிக்கும் குறைவான பருவமழையால் பெரிய பாதிப்பை அவை எதிர்கொள்ளாது; மற்ற பகுதிகள் அப்படி அல்ல. குறிப்பாக "ராபி' பருவத்தில் பயிரிடப்படும் கோதுமை, கடுகு உள்ளிட்டவை பருவமழையை அதிகமாக நம்பியிருக்கின்றன. ஆகவே, வானிலை மையத்தின் அறிவிப்பு வேளாண் பெருமக்களை மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது.

சராசரிக்கும் அதிகமான பருவமழை சமச்சீராக அனைத்துப் பகுதிகளுக்கும், எல்லா பருவமழை மாதங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com