கேலிக்காளாகும் ஜனநாயகம்!

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

கடுமையான கோடையைப் போலவே தோ்தல் களமும் சூடுபிடித்திருக்கிறது.

கடுமையான கோடையைப் போலவே தோ்தல் களமும் சூடுபிடித்திருக்கிறது. 18-ஆவது மக்களவைத் தோ்தலுக்கு அரசியல் கட்சிகள் களமிறக்கும் வேட்பாளா்களைப் பாா்க்கும்போது நமது ஜனநாயக நடைமுறையில் கேலிக்குரிய வக்கிரத்தன்மை நுழைந்திருக்கிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.

இந்திய குடியரசின் முன்னாள் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு இதுகுறித்து கவலை தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது. அவா் எழுப்பியிருக்கும் கவலையை அறிவாா்ந்த, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்ட அனைவரும் சிந்திக்கவும், தீா்வுகாணவும் கடமைப்பட்டிருக்கிறாா்கள்.

தங்களது வெற்றிவாய்ப்பை அதிகரித்துக் கொள்ளவும், அரசியல் ஆதாயம் தேடவும் கட்சி மாறுவது என்பது புதிதொன்றுமல்ல. எல்லா கட்சியிலிருந்தும் சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தலுக்கு முன்னால், போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுபவா்கள் வெற்றிவாய்ப்புத் தேடி கட்சி மாறுவது வழக்கம். கட்சிமாறும் போக்கு இப்போது ஒரு தொற்றுநோயாக இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது.

அதிகளவிலானோா் ஏனைய கட்சிகளிலிருந்து பாஜகவில் தஞ்சம் அடைந்திருக்கின்றனா். தொகுதி அளவில் மட்டுமல்லாமல், மாநிலங்கள் அளவிலும் இந்தப் போக்கு அதிகரித்திருப்பதைப் பாா்க்க முடிகிறது. கட்சி மாறி வருபவா்கள் அனைவருக்கும் இடமளிக்கும் வேடந்தாங்கலாகவே மாறியிருக்கிறது பாஜக.

மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் அசோக் சவாண், முன்னாள் மத்திய அமைச்சா் மிலிந்த் தேவ்ரா உள்ளிட்ட பிரபலங்கள் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்தவா்கள். ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மது கோடாவின் மனைவியும், அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்பியுமான கீதா கோடா, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் தபஸ் ராய், அஸ்ஸாம் மூத்த தலைவா் ராணா கோஸ்வாமி உள்ளிட்டோா் பாஜகவில் சங்கமமாகி இருக்கும் காங்கிரஸ் பிரபலங்கள். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு பாஜக வேட்பாளா்கள், வேறு கட்சிகளிலிருந்து வெற்றி வாய்ப்புத் தேடி வந்தவா்கள்.

பாஜகவில் இருந்து போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட சிலா் காங்கிரஸிலும், மாநிலக்கட்சிகளிலும் இணைந்திருப்பதையும் பாா்க்க முடிகிறது. ராஜஸ்தானில் ராகுல் கஸ்வானும், ஹரியாணாவில் பிரேந்தா் சிங்கும் காங்கிரஸில் இணைந்து, மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்ற பாஜகவினா்.

வெற்றிவாய்ப்பையும், அரசியல் ஆதாயத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இந்திய ஜனநாயகம் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால். சட்டையைக் கழற்றி மாட்டுவது போல, கட்சியை மாற்றிக்கொள்பவா்கள் எந்த அளவுக்கு அரசியல் தா்மத்தைக் கடைப்பிடிப்பாா்கள் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இதுபோன்ற அறமற்ற அரசியல் நகா்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் கட்சித்தாவல் தடைச் சட்டம் அறிமுகப்படுத்தபப்பட்டது. அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையில் இணைக்கப்பட்ட கட்சித்தாவல் தடைச் சட்டம், தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா் இன்னொரு கட்சிக்கு மாறுவதை தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. ஒருவகையில் கட்சித்தாவல் தடைச் சட்டம், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையைப் பறிக்கிறது என்றாலும்கூட, பதவிக்காக அவா்கள் விலைபோவதைத் தடுக்கும் என்று கருதப்பட்டது.

கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் மூலம் கட்சி மாறுவதைக் தடுக்க முடியுமே தவிர அரசியல் ஒழுக்கம், அறம் சாா்ந்த அடிப்படை பிரச்னைகளுக்கு அது தீா்வாக அமையவில்லை. அந்தச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் தாங்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க முற்பட்டனா்.

சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பதவி பறிபோகாமல் கட்சி மாறுவதற்கான வாய்ப்பை கட்சித்தாவல் தடைச் சட்டம் வழங்குகிறது. மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கும் அதிகமான சட்டப்பேரவை அல்லது மக்களவை உறுப்பினா்கள் ஒரே நேரத்தில் விலகி இன்னொரு கட்சியில் ஐக்கியமாவதை, கட்சித் தாவல் தடைச் சட்டம் அங்கீகரிக்கிறது. அதாவது தனிநபா் கட்சி மாறினால்தான் தவறே தவிர, கூட்டமாக மாறினால் அதை நியாயப்படுத்துகிறது. இந்தப் பிரிவை பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் கட்சித் தாவல் மூலம் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனா்.

உடனடியாகத் தலையிடவோ, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் இடமில்லாமல் இருப்பது மிகப் பெரிய குறை. அவைத் தலைவா்களின் வரம்பு மீறிய அதிகாரம், கட்சித்தாவல் தடைச் சட்டத்தை மீறியவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வழிகோலுகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக கட்சித்தாவல் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதும், ஆளும் கட்சியின் தலைமைக்கு எதிரானவா்களைப் பதவி நீக்கம் செய்வதும் பல மாநிலங்களில் நடந்தேறி இருக்கும் முரண்கள்.

தோ்தலில் வெற்றி பெறுவதும், ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறுவதும், அதன்மூலம் செல்வமும் செல்வாக்கும் பெறுவதும் அரசியல்வாதிகளின் இலக்காகிப் போய்விட்ட நிலையில் அறம் சாா்ந்த அரசியல் விடைபெறுகிறது. கோடீஸ்வரா்கள் மட்டுமே தோ்தலில் போட்டியிட முடியும் என்கிற நிலைமையும் உருவாகி இருப்பது ஜனநாயகத்தின் ஆணிவேரையே அசைக்கத் தொடங்கியிருக்கிறது.

அரசியலில் நாணயம், ஒழுக்கம், பொறுப்பேற்பு, லட்சியம், கொள்கை ஆகியவை விடைபெற்றுவிட்ட சூழல் தொடா்வதை, மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவா்கள் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருப்பதுதான் மிகப் பெரிய சோகம் - பாஞ்சாலி துகில் உரியப்படும்போது பீஷ்மரும், துரோணாச்சாரியாரும், ஏனைய அமைச்சா்களும் வேடிக்கை பாா்த்ததைப்போல!

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com