பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பது புதிது ஒன்றுமில்லை. அந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றாலும், கடந்த ஆக. 26-ஆம் தேதி தென்மேற்கு பிராந்தியமான பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட "ஒருங்கிணைக்கப்பட்ட' தாக்குதல் பாகிஸ்தானை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. உலக நாடுகளையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.
பலூசிஸ்தான் மாகாணம், மூசாகேல் மாவட்டத்தில் பஞ்சாப்-பலூசிஸ்தான் மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளை நிறுத்திய பயங்கரவாதிகள், பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி அவர்களின் தேசிய அடையாள அட்டைகளை சோதனை செய்து 23 பேரை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அனைவரும் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அதே நாளில், பலூசிஸ்தானின் கலாட் மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் உள்பட 10 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும், பாகிஸ்தான்-ஈரான் இடையிலான ரயில்வே தண்டவாளம், ரயில்வே பாலம் ஆகியவற்றையும் வெடிகுண்டுகள் மூலம் தகர்த்தனர். ஒட்டுமொத்தமாக இந்தத் தாக்குதல்களில் ராணுவத்தினர், பொதுமக்கள், பயங்கரவாதிகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை என்கிற பிரிவினைவாத இயக்கம் பொறுப்பேற்றிருக்கிறது. பொதுமக்கள்போல பஞ்சாப் மாகாணத்திலிருந்து பலூசிஸ்தானுக்குள் நுழையும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தால் 2006-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பலூச் இயக்கத்தின் தலைவர் அக்பர் பக்டியின் நினைவு நாளில் வழக்கமான பயங்கரவாத தாக்குதலாக இல்லாமல், திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 800 பேர் ஈடுபட்டதாக பலூச் விடுதலைப் படை தெரிவித்திருக்கிறது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து உடனடியாக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை நடத்தி, பலூசிஸ்தானில் பிரிவினைவாதிகளின் தாக்குதல்கள் முறியடிக்கப்படும்; பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும், வரும் நாள்களில் இதுபோன்று மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என பலூச் விடுதலைப் படை அறிவித்திருப்பது பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
பலூசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து பிரித்து தனி நாடாக்க வலியுறுத்தி செயல்பட்டுவரும் பல்வேறு பிரிவினைவாத இயக்கங்களில் பலூச் விடுதலை இயக்கம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம், பலூச் மக்களின் உரிமைகளுக்காகவும், இந்த மாகாணத்தின் வளம் சுரண்டப்படுவதற்கு எதிராகவும் "போராடுவதாக' தன்னைக் கூறிக் கொள்கிறது.
பாகிஸ்தானிலேயே பரப்பளவில் பெரிய மாகாணமாக பலூசிஸ்தான் உள்ளது. ஆனால், குறைந்த மக்கள்தொகையைக் கொண்டது. ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லைகளையொட்டி உள்ள இந்த மாகாணம் கனிமவளம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் நிறைந்தது. நாட்டின் மற்ற பகுதிகளைவிட வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.
சீனாவின் நிதியுதவியுடன் நடைபெற்றுவரும் சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின் முக்கியமான பகுதியாக பலூசிஸ்தான் உள்ளது. இந்தத் திட்டத்தில் பணிபுரியும் சீனாவைச் சேர்ந்த பலர் இதற்கு முன்னர் பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி சீனர்களை மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதும் பலூச் இயக்கத்தின் நோக்கம்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நிகழ்ந்த வன்முறை, பொருளாதார சீர்குலைவு, உள்நாட்டு பயங்கரவாதத் தாக்குதல், ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (பாகிஸ்தான் தலிபான்) என்ற அமைப்பு எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்தும் தாக்குதல் என ஏற்கெனவே நிலைகுலைந்துபோய் உள்ள பாகிஸ்தானுக்கு பலூசிஸ்தானில் பெரிய அளவில் வெடித்துள்ள பிரிவினைவாத தாக்குதல்கள் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பலூசிஸ்தானில் சீன திட்டங்களுக்கு எதிராக அவ்வப்போது நடத்தப்படும் தாக்குதலால் சீனாவின் அதிருப்தியையும் பாகிஸ்தான் எதிர்நோக்குகிறது.
பலூசிஸ்தானில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது. பலூசிஸ்தான் புறக்கணிக்கப்படுகிறது என்பதும், அதன் விளைவுதான் அங்கு நடத்தப்படும் தாக்குதல் என்பதும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல. இதை எதிர்கொள்ள ராணுவ நடவடிக்கைதான் பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே வழி என்கிறபோதிலும், அதனால் கிடைக்கும் பலன்களைவிட உயிரிழப்புகள்தான் அதிகமாக இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. ஏனெனில், பலூசிஸ்தான் அமைந்துள்ள நிலப்பரப்பு உள்ளூர் இனக் குழுக்களுக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான முகமாக தன்னைக் காட்டிக்கொண்டு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான நிதி உதவியைப் பெற்று, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த தயங்காத பாகிஸ்தான், இப்போதுதான் பயங்கரவாதத்தின் வலியை உணரத் தொடங்கியிருக்கிறது.
வங்க தேசத்தில் மதவாதத்தைத் தூண்டி குழப்பத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தான், அதே நிலையை அனுபவிக்கக் காத்திருக்கிறது.