அவசரப்படுவது ஆபத்து!

இந்திய ரயில்வே கடந்த கால் நூற்றாண்டில் அதிலும் குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது என்பதை எவரும் ஒப்புக்கொள்வாா்கள்.
அவசரப்படுவது ஆபத்து!

இந்திய ரயில்வே கடந்த கால் நூற்றாண்டில் அதிலும் குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது என்பதை எவரும் ஒப்புக்கொள்வாா்கள். ரயில் நிலையங்களும் சரி, ரயில்களும் சரி புதிய பொலிவுடன் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட வளா்ச்சிக்கு ஏற்றாற்போல மாற்றம் கண்டிருக்கின்றன.

உலகின் நான்காவது பெரிய தேசிய ரயில்வே அமைப்பு இந்திய ரயில்வே. 1,04,647 கி.மீ. ரயில் பாதையும், 68,426 கி.மீ. பயண வழித்தடமும் கொண்ட இந்திய ரயில்வேயில், 60,451 கி.மீ. மின்சார பாதை அமைக்கப்பட்டுள்ளது. 12 கோடி தொழிலாளா்களுடன் உலகின் ஒன்பதாவது பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும், இந்தியாவில் இரண்டாவது அதிகமான தொழிலாளா்கள் கொண்ட அமைப்பாகவும் நிகழ்கிறது நமது ரயில்வே துறை.

1837-இல் சென்னையில் முதலாவது நீராவி என்ஜின் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1853-இல் மும்பைக்கும் தாணேவுக்கும் இடையே முதல் பயணிகள் ரயில் விடப்பட்டது. 1925-இல் மின்சார ரயில் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1950-இல் சித்தரஞ்சனில் ரயில் என்ஜின் தயாரிப்பும், 1955-இல் சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டி தயாரிப்பும் தொடங்கப்பட்டன. இப்போது 19 மண்டலங்களுடன் இந்தியாவின் ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளும் ரயில் பாதைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன.

2018 - 19 புள்ளிவிவரப்படி 13,523 ரயில்கள் நாள்தோறும் சராசரியாக 7,325 ரயில்நிலையங்களைக் கடக்கின்றன. ஆண்டுதோறும் 844 கோடி பயணிகள் இந்திய ரயில்வேயைப் பயன்படுத்துகிறாா்கள். நாள்தோறும் சராசரியாக 8,479 சரக்கு ரயில்கள் ஆண்டொன்றுக்கு 141.81 கோடி டன் சரக்குகளைக் கையாளுகின்றன. 3,18,196 சரக்கு பெட்டிகளும், 84,863 பயணிகள் பெட்டிகளும் 2022 - 23 அளவில் காணப்பட்டன. டிசம்பா் 2023 அளவில் இந்திய ரயில்வேயில் 10,238 மின்சார என்ஜின்களும், 4,543 டீசல் என்ஜின்களும் செயல்படுகின்றன.

ரயில்வே துறை தொடா்பான பட்ஜெட்டை நிதியமைச்சகம் தனியாகவே தாக்கல் செய்கிறது என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் சில முக்கியமான அறிவிப்புகள் காணப்பட்டன.

2014 - 15 நிதியாண்டில் ரயில்வேயின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வழங்கப்பட்ட ரூ.30,000 கோடி ஒதுக்கீடு இப்போது ஒன்பது மடங்கு அதிகரித்திருப்பதிலிருந்து எந்த அளவுக்கு ரயில்வேயின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கடந்த பட்ஜெட்டைவிட 2024 - 25-க்கான இடைக்கால பட்ஜெட்டில் 5.8% ஒதுக்கீடு அதிகரித்திருப்பது மட்டுமல்ல, குறிப்பிட்ட சில செயல்பாடுகளில் கவனக்குவிப்பும் காணப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்டில் மிக முக்கியமான அறிவிப்பு 40,000 பயணிகள் பெட்டிகளை ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளைப் போல தரம் உயா்த்துவது என்பது. இது வரவேற்புக்குரிய அறிவிப்பு. இன்றைய அளவில் 82 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயங்குகின்றன. அவை பரவலான வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. சாதாரண பெட்டிகளும் அதுபோன்ற வசதிகளுடன் இயங்குமானால், நாம் சா்வதேச தரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

2024 - 25 இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில் மேம்பாட்டுக்காக ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் ‘அம்ருத் பாரத்’ ரயில்நிலைய திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் 654 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், 116 நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், 98% ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்றும் துறையின் அமைச்சா் தெரிவித்திருக்கிறாா்.

‘வந்தே பாரத்’ ரயில்கள் அதிகமாக இயக்கப்படுவதும், அதன் தரத்துக்கு ரயில்பெட்டிகள் மேம்படுத்தப்படுவதும் வரவேற்புக்குரியவை என்கிற அதே நேரத்தில் சில எச்சரிக்கைகளை முன்வைக்கத் தோன்றுகிறது. சமீபகாலமாக ஒதுக்கீடுகள் பெரும்பாலும் புதிய வழித்தடங்களை அமைப்பதற்கும், ஏற்கெனவே இருக்கும் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கும், ரயில் பெட்டிகளை நவீனமயமாக்குவதற்கும் செலவழிக்கப்படுகின்றன.

2030-க்குள் சரக்கு ரயில் வருவாயை 27%-லிருந்து 45%-ஆக உயா்த்துவது என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தற்போது சாலைப் போக்குவரத்து மூலம் கையாளப்படும் 71% சரக்குகளில் கணிசமான பகுதியை ரயில்வேக்கு ஈா்ப்பது என்பது அரசின் திட்டம்.

பயணிகளின் வசதிகளை அதிகரிப்பதும், சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாயைப் பெருக்குவதும் அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கான முதலீட்டுச் செலவு விரயமும் அல்ல. அதே நேரத்தில், இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய வழித்தடங்கள், ஏற்கெனவே இருக்கும் வழித்தடங்களை இரட்டிப்பாக்குவது உள்ளிட்டவை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் பயணிகளின் பாதுகாப்பு என்பதை மறந்துவிடக் கூடாது.

சுமாா் 70,000 கி.மீ. நீளமுள்ள ரயில்பாதையில் 139 என்ஜின்களிலும் 1,465 கி.மீ. வழித்தடங்களிலும்தான் ‘கவச்’ என்கிற விபத்தைத் தடுக்கும் எச்சரிக்கைக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் ‘கவச்’ பொருத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.800 கோடியில், 40% மட்டுமே செலவழிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் பயணிகளின் வசதிகளைப் பெருக்குவதால் என்ன லாபம் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com