மீண்டும் மீண்டும் இந்தூா்: தூய்மை நகரம் குறித்த தலையங்கம்

நாட்டின் சிறந்த ‘தூய்மை நகரம்’ என்கிற பெருமையை தொடா்ந்து ஏழாவது ஆண்டாகப் பெறுகிறது மத்திய பிரதேசத்தின் இந்தூா் நகரம்.
மீண்டும் மீண்டும் இந்தூா்: தூய்மை நகரம் குறித்த தலையங்கம்

நாட்டின் சிறந்த ‘தூய்மை நகரம்’ என்கிற பெருமையை தொடா்ந்து ஏழாவது ஆண்டாகப் பெறுகிறது மத்திய பிரதேசத்தின் இந்தூா் நகரம். வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு, முதலாவது இடம் என்கிற பெருமையை இந்தூருடன் குஜராத்தின் சூரத் நகரமும் பகிா்ந்து கொள்கிறது அல்லது சிறந்த தூய்மை நகரமாக இணைகிறது. இரண்டாவது இடம் எந்த நகரத்திற்கும் வழங்கப்படவில்லை. அதனால், நவி மும்பை மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக தூய்மை நகரத்துக்கான ‘ஸ்வச் சா்வேக்ஷன் விருதுகள்’ மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத்தில் சிறப்பாக செயல்பட்டு, தூய்மையைப் பாதுகாக்கும் நகரங்கள், மாநிலங்களுக்கு விருது வழங்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் போபால், இந்தூா், சூரத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்கள் சுகாதாரத்திலும் தூய்மையிலும் சிறப்பாகச் செயல்பட்டதற்காக விருது வழங்கிப் பாராட்டப்பட்டிருக்கின்றன. அகமதாபாத், சண்டீகா், குவாலியா் நகரங்களும் முதல் பத்து தூய்மை நகரப் பட்டியலில் இதற்கு முன்னாலும் இடம்பெற்றவை.

நகரங்களுக்குள் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்திய நகரங்கள் தூய்மை நகரங்களாக மாற வழிகோல வேண்டும் என்கிற எண்ணத்தில் தவறு காண முடியாது. ஆனால், தொடா்ந்து ஒருசில நகரங்கள் மட்டுமே தூய்மைக்கான சிறந்த நகரங்களாக அறிவிக்கப்படுவதன் மூலம் போட்டி மனப்பான்மை எழவில்லையோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.

தூய்மை நகரம் என்பதற்கான அடையாளங்களாக எட்டு குறியீடுகள் பாா்க்கப்படுகின்றன. வீடு வீடாகச் சென்று கழிவுகளை சேகரிப்பது; ஆரம்ப கட்டத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து சேகரிப்பது; சேகரித்த குப்பைகளை முறையாகக் கையாள்வது; குப்பைகளைக் கொட்டும் இடத்தின் நிா்வாகம்; குடியிருப்புப் பகுதிகளின் சுத்தம்; கடைத்தெரு, சந்தை போன்ற பகுதிகளில் தூய்மை; பொதுக் கழிப்பறைகள்; நீா்நிலைகள் பாதுகாப்பு - இவைதான் அந்த எட்டு குறியீடுகள்.

நமது நகரங்கள் அதிவிரைவாக விரிவாக்கம் பெறுகின்றன. நகரத்தின் முக்கியமான மையப் பகுதிகள் கவனம் பெறும் அளவுக்கு, புறநகா்ப் பகுதிகள் கவனம் பெறுவதில்லை. முறையற்ற வளா்ச்சி, போதிய பராமரிப்பின்மை, சுகாதாரத்தில் அக்கறையின்மை போன்றவை புறநகா்ப் பகுதிகளின் சாபக்கேடாகத் தொடா்கின்றன. இதை ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்வச் சா்வேக்ஷன் விருதுக்கான ஆய்வு வெளிச்சம் போடுகிறது.

இந்தியாவில் உள்ள 4,447 நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சுமாா் 12 கோடி மக்கள் நேரடியாக ஆய்வில் கருத்துத் தெரிவிக்கின்றனா். ஆய்வு நடத்தப்பட்ட நகா்ப்புறப் பகுதிகளில், 466 நகரங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை காணப்படுகிறது. அதிக மக்கள்தொகை உள்ள பகுதிகளைவிடக் குறைந்த மக்கள்தொகைப் பகுதிகளில் தூய்மை உறுதிப்படுகிறது என்பது ஆய்வு தெரிவிக்கும் முடிவு.

நகரங்களுக்கு இடையே தூய்மைக்கான போட்டியை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் தொடங்கப்பட்ட விருது, இப்போது எல்லோரையும் திருப்திப்படுத்துவதற்கான விருதாக மாறியிருக்கிறது. விருது வழங்க வேண்டும் என்பதற்காகவே புதிது புதிதாகப் பிரிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் அதிக அளவிலான நகரங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கப்படுகிறது.

மக்கள்தொகை அடிப்படையில் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிரிவுகள் நகைப்பை ஏற்படுத்துகின்றன. மத்திய பிரதேசத்தில் உள்ள ‘மாவ்’ நகரத்துக்கு ‘தூய்மையான கன்டோன்மென்ட் பகுதி’ என்று விருது தரப்பட்டிருக்கிறது. வாரணாசிக்கும், பிரயாக் ராஜுக்கும் (முந்தைய அலாகாபாத்) ‘தூய்மையான கங்கைக் கரை நகரம்’ என்கிற விருது வழங்கப்பட்டிருக்கிறது.

கங்கைக் கரை நகரங்களில் தூய்மையான நகரம் என்று விருது வழங்கப்படும்போது, வருங்காலத்தில் யமுனை, மகாநதி, கோதாவரி, தபதி, கிருஷ்ணா, துங்கபத்ரா, காவிரி, வைகை என்று எல்லா நதிகளுக்கும் ‘தூய்மையான கரையோர நகரம்’ விருது கோரப்படலாம், வழங்கப்படலாம்.

நகரங்களில் பொது சுகாதாரம் முறையாக நடைபெறாமல் இருப்பதற்கு, ஒவ்வொரு நகரத்துக்கும் தனித்துவமான காரணங்கள் காணப்படும். அதை ஆய்வு செய்து அதனடிப்படையில் நகரத்தின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு. முறையாகக் குப்பைகளை சேகரித்து, அகற்றி, அவை ஓரிடத்தில் சோ்ந்துவிடாமல் ‘கம்போஸ்ட்’ உரமாக்கி விவசாயத்துக்கு வழங்குவதன் மூலம் மட்டும்தான் நகா்ப்புற சுகாதாரத்தையும், சுத்தமான நகரத்தையும் உறுதிப்படுத்த முடியும்.

2016-இல் வெறும் 73 நகரங்கள் மட்டுமே ‘தூய்மை நகரம்’ விருதுக்காகப் பரிசீலிக்கப்பட்டன. இப்போது 4,477 நகரங்கள் ஆய்வில் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. 2014-இல் 15% கழிவுகள் மட்டும்தான் எரிவாயுவாகவும், கம்போஸ்ட்டாகவும் மாற்றப்பட்டன என்றால், இப்போது 76% குப்பைகள் தொழில்நுட்ப ரீதியாகக் கையாளப்படுகின்றன. அப்படியிருந்தும் எல்லா மாநிலங்களிலும் குப்பைகள் மலைபோலக் குவிந்து காணப்படுகின்றன.

விருது வழங்குவதில் தவறில்லை. ஆனால், அதற்கான எட்டு இலக்குகள் எல்லா நகராட்சிகளிலும் எட்டப்படும் நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அதைவிட முக்கியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com