வரிவசூல் சாதனை!

வரிவசூல் சாதனை!

நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நேரடி வரிவசூலில் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட பல்வேறு நிதிநிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கி இருக்கின்றன என்பதன் அறிகுறி இது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு, சேவை வரி, நேரடி வரி விதிப்பில் எளிமை மட்டுமல்லாமல், எண்மப் பரிமாற்றத்திற்கு அளிக்கப்பட்ட ஊக்கம் ஆகிய நடவடிக்கைகளின் விளைவு இது.
2023 - 24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வரி வசூல் அதிகரிப்பில் மிதமான எதிர்பார்ப்புதான் இருந்தது. விலைவாசி குறைந்து, வளர்ச்சியும் மிதமாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில், மொத்த வரி வசூல் 10.5% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அது ஒரு  எதிர்பார்ப்பு மதிப்பீடு மட்டுமே.
ஆனால், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டில் ரூ.17.19 லட்சம் கோடி வரி வசூல் கிடைத்திருப்பது நிதியமைச்சகத்தையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த ஒன்பது மாதங்களில் 16.77% வளர்ச்சி என்பதும், முன்கூட்டிய மொத்த பட்ஜெட் மதிப்பீட்டைவிட 81% அதிகம் என்பதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதே நிலைமை அடுத்த காலாண்டிலும் தொடருமானால், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்ட முடியும் என்பது உறுதி.
தனிநபர் வரி வருமானத்தில் வருமான வரி வசூல் போலவே முக்கியப் பங்கு வகிக்கிறது கார்ப்பரேட் வரிகள். அதில் வருமான வரியைப்போல உற்சாகம் காணப்படவில்லை. கடந்த மூன்று காலாண்டுகளில் 8.32% அளவில் மட்டுமே கார்ப்பரேட் வரி வசூல் அதிகரித்திருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை தொடர்வதால் ஏற்றுமதிப் பொருள்களுக்கான கேட்பு குறைவாக இருக்கிறது. அதிகரித்திருக்கும் வட்டி விகிதம், குறைந்த வருவாய் அதிகரிப்பு இரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்துக்குக் கடிவாளம் போட்டுவிட்டன என்று தெரிகிறது.
26.11% தனிநபர் வருமான வரி வசூல் அதிகரிப்புதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. 2023 - 24-இல் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 9% அதிகரித்து இதுவரை இல்லாத அளவுக்கு 8.18 கோடியை எட்டியிருக்கிறது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அதிகரித்த எண்மப் பரிமாற்றம் இரண்டும் இதற்கு முக்கியமான காரணிகள். விமர்சிக்கப்பட்ட அதிக மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்ட நடவடிக்கையும், அனைவரையும் புரட்டிப்போட்ட கொள்ளை நோய்த்தொற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளையே நம்மை வியந்து பார்க்க வைக்கும் எண்மப் பரிமாற்ற முறையை நிலைநிறுத்திவிட்டன.
பொருளாதாரமும், நிதிப்பரிமாற்றமும் முறைப்படுத்தப்பட்டதும் முக்கியமான காரணம். மாத ஊதியம் பெறுவோர் மட்டுமே வருமான வரி வலையில் சிக்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இப்போது பழங்கதையாகிவிட்டது. பெட்டிக்கடையோ, தெருவோர சில்லறை விற்பனையோ செய்தாலும்கூட வருமான வரி விலக்கு வரம்புக்கு அதிகமான வருமானத்திற்கு வரி கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு வங்கிப் பரிமாற்றம் உள்ளாக்குகிறது. வருமான வரி விலக்குக்கான வரம்பை அதிகரித்து குறைந்த வருவாய் வியாபாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
சேவைத் துறையில் அதிக மாத ஊதியத்துடன் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியால் முறைசார்ந்த வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி இருந்ததுபோய், சுய வேலைவாய்ப்புப் பெறும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. அவர்கள் வருமான வரி செலுத்தும் அளவில் இருக்கிறார்கள் என்பதும், வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
வருமான வரி செலுத்துவதில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திவரும் பல சீர்திருத்தங்கள் பலனளிக்கத் தொடங்கி இருப்பதை மறுப்பதற்கில்லை. வருமான வரி செலுத்துவதற்கு வழங்கப்படும் பல்வேறு விலக்குகளையும், கழிவுகளையும் (எக்ùஸம்ப்ஷன்ஸ், டிடெக்ஷன்ஸ்) தவிர்க்க முற்படுபவர்களுக்குக் குறைந்த வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதன் எளிமை காரணமாக, வருமான வரி செலுத்த முற்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனலாம். 
வரி செலுத்தாமல் தவிர்ப்போரை, குறிப்பாக அதிக வருவாய் உள்ளவர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட பல உத்திகள் பலனளிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஒவ்வொரு பரிமாற்றத்தின் தொடக்கத்திலும் வரிப்பிடித்தம் (டிடிஎஸ்) செய்யும் முறை காரணமாக, வரி செலுத்துவதைத் தவிர்க்கும் முயற்சி தடுக்கப்படுகிறது.
140 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவில் இப்போதும்கூட வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8.18 கோடி மட்டுமே என்பதை நாம் பார்க்க வேண்டும். தனிநபர் வருமானத்துக்கான வரியைக் குறைப்பது, வரி செலுத்தும் முறையில் எளிமை, வரி ஏய்ப்புக்கான ஓட்டைகளை அடைப்பது ஆகியவற்றின் மூலம் வரி வருவாயை அதிகரிப்பதில் காட்டப்படும் முனைப்பு தொடர வேண்டும்.
"கரும்பைச் சக்கையாகப் பிழிவது போலல்லாமல், மலரிலிருந்து வண்டு தேனை உறிஞ்சுவதுபோல வரி வசூல் இருக்க வேண்டும்' என்கிற மூதறிஞர் ராஜாஜியின் அறிவுரையை நிதியமைச்சர்கள் தங்கள் மனதில் கொள்ள வேண்டும். வரி வருவாய் இருந்தால்தான் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த முடியும். அதே நேரத்தில் ஈட்டிய வரி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதிலும் கவனம் தேவை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com