தகுதிதான் நமக்குத் தடை!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்பிரிக்காவிலிருந்து நிரந்தர உறுப்பினராக ஒரு நாடுகூட இல்லை என்று அந்த அமைப்பின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் "எக்ஸ்' வலைதளத்தில் கடந்த வாரம் பதிவிட்டிருந்தார். அதற்கு பங்குச் சந்தை முதலீட்டாளர் மைக்கேல் ஐசன் பெர்க், "இந்தியா இல்லையே ஏன்?' என்று பதிவிட்டிருந்தார். அதை ஆமோதிக்கும் விதத்தில் உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இல்லாமல் இருப்பதுபோல முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது என்கிற எலான் மஸ்கின் பதிவு சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலமாக பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நம்மால் மட்டுமல்ல, ஏனைய பல நாடுகளாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது அதே கருத்தை அரசியல் சாராத பன்னாட்டு பெருமுதலாளிகள் எழுப்பத் தொடங்கியிருக்கும் நிலையில், அந்தக் கோரிக்கை மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.
அடுத்து வரும் காலங்களில் எரிசக்தி, நுகர்வுத் தேவை, சேவைத் துறை ஆகியவை இந்தியாவில் கூடுதல் கவனம்பெற இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியாவின் மீது குவிந்து வருவதில் வியப்பில்லை. உலகில் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடு என்கிற நிலைமையும் ஏற்பட்டிருப்பதால் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருக்கான இந்தியாவின் தகுதி மேலும் நியாயப்படுகிறது.
பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளும் இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக வேண்டும் என்பதை ஆதரித்து வரவேற்கின்றன. தடையாக இருப்பது செஞ்சீனா மட்டும்தான்.
ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இணைக்கப்பட வேண்டும் என்றும், அதற்குப் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்த நாடு பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இந்தியா. இப்போது இந்தியா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதற்கு சீனாவின் தடைதான் காரணம் என்பதை என்னவென்று சொல்வது?.
அமெரிக்கா - சோவியத் யூனியன் என்று உலகம் பனிப்போர் சூழலைச் சந்தித்த காலம் முடிந்துவிட்டது. ஆனால், ஒருபுறம் ரஷியா - சீனா என்றும், இன்னொருபுறம் அமெரிக்கா-ஐரோப்பியக் கூட்டமைப்பு-ஜப்பான் என்றும் இரண்டு குழுக்களாக இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. 
அவை இரண்டிலும் இணையாமல் அதேநேரத்தில் இரண்டு அணியிடமும் பகைமை பாராட்டாமல் தனது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் அணுகுமுறை அதற்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்படுத்துகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்கிற தகுதி ஒன்று போதும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியா அங்கம் வகிப்பதற்கு.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான ஐக்கிய நாடுகள் சபை 80 ஆண்டுகளுக்கு முந்தைய உலக வல்லரசுக் கட்டமைப்பை பிரதிபலிக்கிறது. அன்றைய சூழல் இன்று இல்லை. அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகளில் தனது நிலைமை மாறாமல் தொடர்வது அமெரிக்கா மட்டுமே. 
சோவியத் யூனியன் பிளவுபட்டு அந்த இடத்தில் ரஷியா இருப்பது முதலாவது முரண். சியாங் காய் ஷேக்கின் சீனாவின் இடத்தை இப்போது பெற்றிருப்பது செஞ்சீனா. பிரிட்டன் தனது முந்தைய பெருமைகளை இழந்து வலிமை குன்றிய நிலையில் இருக்கிறது. ஸ்காட்லாந்தும் பிரிந்துவிட்டால் பிரிட்டன் மேலும் வலிமை குன்றிவிடும். பிரான்ஸ் முன்பு இருந்த வலிமையான நாடாக இன்று இல்லை.
அன்றும் இன்றும் பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்திலும் வலிமையான நாடாக அமெரிக்கா தொடர்கிறது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஐக்கிய நாடுகள் சபைக்கு மிக அதிக அளவில் நிதி வழங்கும் நாடு என்பதும் உண்மை. அதேநேரத்தில், ஐ.நா.வின் கருத்துகளுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக பல ராணுவ நடவடிக்கைகளை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா எடுத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளும் தங்களது தனிப்பட்ட சுயநலத்துக்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் "வீட்டோ' எனப்படும் நிராகரிக்கும் உரிமையைப் பயன்படுத்தி வருகின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த ஒருமித்த கருத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறாமல் போனதற்கு அமெரிக்காவின் "வீட்டோ' அதிகாரம்தான் காரணம். அது உக்ரைன் ஆனாலும் காஸா ஆனாலும் அங்கே நடக்கும் மோதலை தடுத்து நிறுத்தவோ, சமாதான முயற்சி மேற்கொள்ளவோ இயலாத கையறு நிலையில்தான் ஐ.நா. தொடர்கிறது. ஆனால் இந்தியா தன்னிச்சையாக சில சமாதான முயற்சிகளை முன்னெடுக்கத் தயங்கவில்லை. அப்படி இருந்தும் இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற முடியாமல் இருப்பதற்கு சீனாதான் காரணம்.
ஆப்பிரிக்கா மட்டுமல்ல, தென் அமெரிக்காவிலிருந்தும் எந்த நாடும் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறவில்லை. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான ஜப்பான், ஐரோப்பாவின் பெரிய பொருளாதாரமான ஜெர்மனி ஆகிய இரண்டும் அங்கம் வகிக்கவில்லை. 
எலான் மஸ்க் கூறுவதுபோல, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்பது மட்டுமல்லாமல், ஐ.நா. சபையின் முழுமையான சீர்திருத்தத்துக்கும் மாற்றத்துக்குமான தருணம் இது. அதற்குத் தடையாக இருக்கும் வீட்டோவை யார் அகற்றுவது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com