
பணமும் அதிகாரமும் இருந்தால் சட்டம் எப்படியெல்லாம் வளைக்கப்படும் என்பதற்கு புணேயில் நடந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் 17 வயதுச் சிறுவன் மது போதையில் கார் இயக்கியபோது, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தது தேசிய அளவில் பல கேள்விகளை எழுப்புகிறது.
புணேயைச் சேர்ந்த மனை வணிக தொழிலதிபர் விஷால் அகர்வாலின் 17 வயது மகன், சுமார் ரூ.1 கோடி மதிக்கத்தக்க ஜெர்மானிய தயாரிப்பான ‘போர்ஷ்' காரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) அதிகாலை சுமார் 200 கி.மீ. வேகத்தில் இயக்கியுள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தில் கார் மோதியதில், மத்திய பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஐ.டி. ஊழியர்களான அனிஷ் (24), அஸ்வினி (24) ஆகியோர் உயிரிழந்தனர்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக அந்தச் சிறுவன் தன் நண்பர்களுக்கு விருந்து அளிப்பதற்காக அழைத்துச் சென்றபோது பல இடங்களில் அவர்கள் மது அருந்தியுள்ளனர். மது போதையில் அதிவேகத்தில் காரை இயக்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது.
பின்னர், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தச் சிறுவன், 15 நாள்கள் போக்குவரத்துக் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், சாலை விபத்து குறித்து 300 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும் என்றும் உத்தரவிட்டு சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு கடும் கண்டனத்தை எழுப்பியது.
அதன் விளைவாக புணே காவல் துறையினர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ததில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு ஜூன் 5-ஆம் தேதி வரை கூர்நோக்கு இல்லத்துக்கு சிறுவன் அனுப்பப்பட்டான்.
சிறுவனின் தந்தையும், சிறுவனுக்கும் அவனுடன் வந்த மற்ற சிறுவர்களுக்கும் மதுபானம் வழங்கிய மதுபான விடுதிகளின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் 25 வயது நிரம்பாதவர்கள் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருந்து சிறுவனைப் பாதுகாப்பதற்காக, சம்பவத்தின்போது குடும்ப ஓட்டுநர்தான் காரை இயக்கினார் என்பதுபோன்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக அவனது தாத்தா முயன்றுள்ளார். அதற்காக, அந்த ஓட்டுநரை மே 19, 20 ஆகிய தேதிகளில் ஓர் அறையில் அடைத்து வைத்து, குற்றத்தை ஏற்றுக்கொண்டால் விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள், ரொக்கப் பணம் வழங்குவதாக ஆசை காட்டியுள்ளார். அதற்கு ஓட்டுநர் மறுத்தபோது மிரட்டியுள்ளார். தாத்தாவின் மிரட்டலுக்கு பயந்து, காவல் துறையினரிடம் ஓட்டுநர் குற்றத்தை ஏற்றபோதும், சிறுவன் காரை இயக்கியதற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் தாத்தாவை போலீஸார் கைது செய்தனர்.
இது ஒருபுறம் என்றால், அந்தச் சிறுவன் மது அருந்தவில்லை என்பதை நிரூபிப்பதற்காக, சோதனை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விலைபேசி உள்ளனர். அவர்களும் சிறுவனின் ரத்த மாதிரியில் போதைப்பொருளுக்கான தடயமில்லை என்று சான்று அளித்துள்ளனர். சிறுவனின் ரத்த மாதிரியைக் குப்பையில் வீசிவிட்டு, மது அருந்தாதவரின் ரத்த மாதிரியைக் கொண்டு சோதனை செய்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றப்பட்ட ரத்த மாதிரி சிறுவனின் தாயாருடையது என்பது தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதள விமர்சனங்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது. புணே சம்பவத்துக்கு சில நாள்கள் முன்னதாக, சென்னை கோயம்பேட்டில் வசித்து வரும் வைஷாலி பாட்டீல் (41) என்ற பெண் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை மதுபோதையில் காரை இயக்கியபோது அசோக் நகரில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த 7 பேரின் கால்களில் கார் ஏறி இறங்கியது. இதுபோன்றே, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கமல்நாத் (23), புதுச்சேரிக்கு கடந்த மே 31-ஆம் தேதி சென்றபோது மதுபோதையில் தாறுமாறாக காரை இயக்கி 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியுள்ளார்.
இதுபோன்ற பல விபத்துகளிலும் மதுதான் முக்கிய காரணமாக உள்ளது என்பதைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
மது விலக்கால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவ ஆய்வு இதழான ‘லான்செட்' ஓர் ஆய்வுக் கட்டுரையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் பிகாரில் மதுவிலக்கு 2016 ஏப்ரல் 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதில் இருந்து 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மது அருந்தும் பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், மனைவி மீதான குடும்ப வன்முறை, பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகள் போன்றவை கணிசமாகக் குறைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புணே சம்பவத்துக்குப் பெற்றோரின் பொறுப்பின்மையும் மிக முக்கிய காரணமாகும். சொகுசு காரை நள்ளிரவில் சிறுவன் எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதித்திருக்கக் கூடாது. நண்பர்களுடன் சேர்ந்து உயர் ரக மது அருந்தும் அளவுக்கு அவனிடம் பணத்தைக் கொடுத்து வைத்ததும் தவறு.
18 வயதுக்குள்பட்டோர் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், பெற்றோருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறை ஜூன் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படுவதுடன் சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் கூறியுள்ளது.
இந்த விதிமுறைகள் எந்தவித சமரசமும் இல்லாமல் அமல்படுத்தப்படுவதுடன், பெற்றோர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே புணே விபத்து போன்ற சம்பவங்கள் குறைய
வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.