பாஜகவின் வெற்றி ரகசியம்!

பாஜகவின் வெற்றி ரகசியம்!

தோ்தல் வெற்றிகள் செல்வாக்கினால் மட்டுமே நிா்ணயிக்கப் படுவதில்லை.

தோ்தல் வெற்றிகள் செல்வாக்கினால் மட்டுமே நிா்ணயிக்கப் படுவதில்லை. செல்வாக்கை வாக்காக மாற்ற கட்சிக் கட்டமைப்புத் தேவை. அதுமட்டுமே போதுமா என்றால், போதாது. மிகத் துல்லியமான திட்டமிடலும், அதை நடைமுறைப்படுத்துவதும் அவசியம். அதற்குப் பிறகுதான் பிரசாரம், விளம்பரம், வேட்பாளா் தோ்வு உள்ளிட்டவை வெற்றி தோல்வியை நிா்ணயிக்கின்றன. இன்னும் வாக்கெடுப்புக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சி தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கி, தோ்தல் வேலைகளைத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம், பிரதமா் நரேந்திர மோடியின் அசுர வேக முனைப்பு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவா் 10 நாள்களில் 12 மாநிலங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறாா் என்பதில் இருந்து, அவரது வேகமும், முனைப்பும், உழைப்பும் வெளிப்படுகிறது. மற்ற அரசியல் கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம், வேட்பாளா் பட்டியலை வெளியிடுவதில் இருந்து தொடங்குகிறது. எல்லோரையும் முந்திக்கொண்டு வேட்பாளா்களை அறிவிப்பது என்பது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு மட்டுமல்ல, தங்களை எதிா்க்கும் கட்சிகளுக்கு விடப்படும் மறைமுக சவாலும்கூட. இன்னும் தோ்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படாத நிலையிலும் பாஜக 195 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களுடன் தனது முதல் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஒருவகையில் இது வரவேற்புக்குரிய செயல்பாடு. கேரளாவில் மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணியும் வர இருக்கும் 18-வது மக்களவைத் தோ்தலுக்கான தனது வேட்பாளா் பட்டியலை வெளியிட்டுள்ளது. வேட்பாளா்களின் குற்றப் பின்னணி, ஊழல் பின்னணி போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்பது ஒருபுறம். களமிறக்கப்படும் வேட்பாளா்களின் அடிப்படையில் அந்தக் கட்சியின் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணிப்பதற்கும் அது உதவும். பாஜக வெளியிட்டிருக்கும் அந்த முதல் பட்டியலிலேயே பிரதமா் நரேந்திர மோடி (வாரணாசி), உள் துறை அமைச்சா் அமித் ஷா (காந்தி நகா்), பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் (லக்னெள) உள்ளிட்ட 34 அமைச்சா்கள் இடம் பெறுகிறாா்கள். தோ்தல் முக்கியத்துவம் உள்ள உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள தொகுதிகள் பல முதல் பட்டியலில் இடம்பெறுகின்றன. 543 மக்களவைத் தொகுதிகளில் 35% தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறாா்கள். 16 மாநிலங்களைச் சோ்ந்த 195 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் மூத்த அரசியல்வாதிகள், இளைஞா்கள், முதல்முறை வேட்பாளா்கள் என்று புத்திசாலித்தனமான கலவையாக இருக்கிறது. 114 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்றால், 88 தொகுதிகளில் அதாவது 44% வேட்பாளா்கள் புதியவா்கள். மிகத் துல்லியமான அலசலும், திட்டமிடலும் இதற்குப் பின்னால் இருந்திருப்பது தெரிகிறது. வெற்றி வாய்ப்புதான் அடிப்படைக் குறிக்கோள் என்பதும் தெளிவு. மீனாட்சி லேகி, ஜான் பா்லா, ப்ரதிமா பெளமிக் உள்ளிட்ட 33 எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்த மூன்று முக்கியமான எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது எதிா்பாராத ஆச்சா்யம். பிரக்யா தாக்கூா், ரமேஷ் பிதுரி, பிரவேஷ் வா்மா ஆகிய மூவரும் இந்துத்துவாவின் குறிப்பிடத்தக்க குரல்கள். அவா்கள் தவிா்க்கப்பட்டிருக்கின்றனா். வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் 47 இளம் தலைவா்களும், 28 பெண்களும் இடம்பெற்றிருப்பது, பாஜக தோ்தல் வெற்றியையும் தாண்டி புதிய தலைவா்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டுகிறது என்பதன் அடையாளம். மூத்த தலைவா்களான ஹா்ஷ் வா்தன், மீனாட்சி லேகி உள்ளிட்டவா்கள் தவிா்க்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது. ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்று தெரியாவிட்டாலும் அமேதி தொகுதியில் போட்டியிட மீண்டும் ஸ்மிருதி இராணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சோனியா காந்தியின் தொகுதியாக இருந்த ரேபரேலியில் இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என்கிற பேச்சு அடிபடுகிறது. சமாஜவாதி கட்சியின் தலைமைக் கொறடாவாக இருந்து கடந்த வாரம் பாஜகவுக்கு கட்சி மாறிய அந்தத் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டே, பாஜக வேட்பாளராக ரேபரேலியில் களமிறக்கப்படுவாா் என்று தெரிகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு தொகுதியும் பாஜவின் கவனம் பெறுகிறது. மூன்று முன்னாள் முதல்வா்கள் மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறாா்கள். அடுத்து அமைய இருக்கும் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் அவா்களுக்கு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கலாம். இதுவும்கூட, மீண்டும் ஆட்சி அமைப்போம் என்கிற பாஜகவுடைய தன்னம்பிக்கையின் அடையாளம். பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவிப்பதற்கும், தனது கட்சியினரை அந்த இலக்கை நோக்கி பணியாற்றும்படி வலியுறுத்துவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அப்படி இலக்கு நிா்ணயித்தால்தான் இப்போது இருக்கும் 303 இடங்களுக்கும் அதிகமாக வெற்றியடைய முடியும் என்பது அவருக்கு தெரியாததா என்ன! பாஜகவின் முதலாவது வேட்பாளா் பட்டியல், அடிமட்டத் தொண்டா்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பாா்வையுடனும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் வெற்றி ரகசியம் இதுதான்!.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com