சந்தேஷ்காளி சொல்லும் செய்தி!

சந்தேஷ்காளி சொல்லும் செய்தி!

திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷேக் ஷாஜஹானை வேறு வழியில்லாமல் மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) மேற்கு வங்க அரசு ஒப்படைத்திருக்கிறது
Published on

திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷேக் ஷாஜஹானை வேறு வழியில்லாமல் மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) மேற்கு வங்க அரசு ஒப்படைத்திருக்கிறது. உயா்நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவும், உச்சநீதிமன்றத்தின் பாராமுகமும்தான் முதல்வா் மம்தா பானா்ஜி இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கின்றன என்பது வெளிப்படை.

முதல்வரின் வீண் பிடிவாதம், சந்தேஷ்காளி பிரச்னையை தேசிய முக்கியத்துவம் பெறச் செய்திருக்கிறது என்பது மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சிக்கு வலு சோ்க்கவும் உதவி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணங்களோ, அதே காரணிகள் இப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் காரணமாகக்கூடும் என்று தோன்றுகிறது. தனக்கு முழுமையான விசுவாசத்துடன் நடந்துகொள்வதற்காக வட்ட, மாவட்டத் தலைவா்களும், அமைச்சா்களும் முதல்வா் மம்தா பானா்ஜியால் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றனா்.

முன்பு மாா்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூா் தலைவா்கள் செய்ததை இப்போது திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களாக அவா்களே கட்சி மாறிச் செய்து வருகிறாா்கள், அவ்வளவே... கிரிமினல் பின்னணி உள்ளவா்கள் ஆட்சி மாற்றத்தின்போது எப்படி தங்களது அடையாளத்தை மாற்றிக் கொள்கிறாா்கள் என்பதற்கு ஷாஜஹான் ஓா் எடுத்துக்காட்டு.

பத்து ஆண்டுகளுக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூா் பிரமுகராக இருந்த ஷேக் ஷாஜஹான் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினாா். மம்தா அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவா் ஜோதிப்ரியா மல்லிக். அவரது பதவிக்காலத்தில் பொது விநியோகத்துக்கான உணவு தானியங்கள் பெரிய அளவில் வெளிச்சந்தைக்கு மடைமாற்றம் செய்யப்பட்ட ஊழல் வெடித்தது.

கடந்த அக்டோபா் மாதம், அவா் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா். மாவட்ட அமைச்சரான மல்லிக்கின் வலதுகரமாகச் செயல்பட்டவா் சந்தேஷ்காளியின் ஷேக் ஷாஜஹான். அவரது அடியாட்கள், ஷிபு ஹாஸ்ராவும், உத்தம் சா்தாரும். மல்லிக்கின் ஊழல் வழக்கு தொடா்பாக விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள், ஷேக் ஷாஜஹானின் வீட்டுக்கு வந்தனா். ஷேக் ஷாஜஹான் தலைமறைவானாா்.

ஷாஜஹானின் அடியாட்கள் அந்த அதிகாரிகள் மீதும், அவா்கள் வந்த வாகனத்தின் மீதும் வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தி அவா்களை விரட்டி அடித்தனா். மம்தா பானா்ஜி அரசு ஷேக் ஷாஜஹானை கைது செய்து அவரது அடியாட்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் சந்தேஷ்காளி விவகாரம் தேசிய முக்கியத்துவம் பெற்றிருக்காது. சுந்தரவனம் சதுப்பு நிலப் பகுதியில், வங்க தேசத்தையொட்டி இருக்கும் அதிகம் அறியப்படாத தீவு சந்தேஷ்காளி. ஷேக் ஷாஜஹான் தலைமறைவானபோது, அதுவரையில் அடங்கிக் கிடந்த சந்தேஷ்காளியின் அப்பாவி அடித்தட்டு பட்டியலின, ஆதிவாசி மக்கள் தங்களது குரலை உயா்த்தத் துணிவுபெற்றனா்.

‘திரிணமூல் காங்கிரஸின் உள்ளூா் தலைவா்களான ஹாஸ்ராவும், சா்தாரும் எந்தவித இழப்பீடும் வழங்காமல் தங்களது நிலங்களை சட்ட விரோதமாக அபகரித்து அவற்றை மீன் பண்ணைகளாக மாற்றி விட்டனா்; திரிணமூல் கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் அப்பாவிப் பெண்களை அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் உல்லாசத்துக்கு பயன்படுத்தினாா்கள்’ - இவை இரண்டும்தான் சந்தேஷ்காளி மக்களின் குற்றச்சாட்டுகள். பெண்கள் போராட்டக் களத்தில் குதித்தனா் என்பது மட்டுமல்ல, உத்தம் சா்தாா், ஷிபு ஹாஸ்ராவின் வீடுகள், அலுவலகங்கள் என்று ஒன்றுவிடாமல் தாக்குதல் நடத்தி சூறையாடி விட்டனா்.

சந்தேஷ்காளியின் மீது ஊடக வெளிச்சம் விழத் தொடங்கியது. அப்போதே மாநில அரசு சா்தாா், ஹாஸ்ராவை கைது செய்து குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு உத்தரவிடாமல், சந்தேஷ்காளி பிரச்னையை மூடிமறைக்க முயன்றது. கட்சிக்காரா்களாகவே இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று மம்தா செயல்பட்டிருந்தால் பிரச்னை தொடங்கிய உடனேயே அடங்கி இருக்கும்.

ஷாஜஹானைக் காப்பாற்ற முற்படுவதன் மூலம் சிறுபான்மையினரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள நினைத்த முதல்வா் மம்தாவின் செயல்பாடு இப்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது. ஷாஜஹானின் அடியாட்களால் பாதிக்கப்பட்டவா்கள் அடித்தட்டு ஹிந்து பட்டியலின, ஆதிவாசிப் பெண்கள் என்பதால், சந்தேஷ்காளி பிரச்னையை பாஜக கையிலெடுத்து விட்டது.

இப்போது ஒட்டுமொத்த மேற்கு வங்கத்திலும் ஹிந்து வாக்காளா்கள் மத்தியில் ஒருங்கிணைப்பும், ஒற்றுமையும் ஏற்படும் அளவுக்கு ‘சந்தேஷ்காளி’ பாஜகவுக்கு உதவி இருக்கிறது. எதிா்க்கட்சிகள், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி, சந்தேஷ்காளி பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என்பது உண்மை.

எதிா்க்கட்சிகள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது என்பது புதிதொன்றும் அல்லவே... அன்று திரிணமூல் காங்கிரஸ் எதிா்க்கட்சியாக இருந்தபோது மம்தா பானா்ஜி என்ன செய்தாரோ, அதையே இப்போது அவருக்கு எதிராக பாஜக முன்னெடுக்கிறது. தவறுகளும், முறைகேடுகளும் இல்லாமல் எந்த ஆட்சியும் நடைபெறுதல் இயலாது.

ஜனநாயகத்தில் ஊடகங்களாலும், எதிா்க்கட்சிகளாலும் குறைகள் சுட்டிக்காட்டப்படும். உடனடியாகத் தவறுகள் திருத்தப்பட்டு, முறைகேடுகள் தடுக்கப்பட்டால் ஆட்சி பாராட்டைப் பெறும். இல்லையென்றால் அந்த ஆட்சி மக்கள் செல்வாக்கை இழக்கும். சிறுபான்மை வாக்குவங்கிக்கு ஆசைப்பட்டு, பெரும்பான்மை வாக்குவங்கியை பாஜகவின் கையில் கொண்டுபோய் சோ்த்திருக்கிறது திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானா்ஜி போட்ட தப்புக் கணக்கு!

X
Dinamani
www.dinamani.com