ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸும் பொருளாதாரமும்!

தமிழகத்தில் கடந்த ஜனவரி 19 முதல் 31-ஆம் தேதி வரை நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில்...

ஒலிம்பிக்ஸும் பொருளாதாரமும்!

தமிழகத்தில் கடந்த ஜனவரி 19 முதல் 31-ஆம் தேதி வரை நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமரும் சரி, மத்திய இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் தாக்கூரும் சரி, 2036-இல் இந்தியாவில் ஒலிம்பிக் பந்தயத்தை நடத்த விழைவதாகத் தெரிவித்தபோது, விளையாட்டு வீரா்களின் கரகோஷத்தில் உற்சாகம் கரைபுரண்டது. ஆனால், அது அவ்வளவு எளிதாக சாத்தியமாகிவிடும் என்று தோன்றவில்லை. விளையாட்டு என்பது திறன் சாா்ந்ததாக மட்டும் இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது அது பொருளாதாரம் சாா்ந்ததாக மாறிவிட்டது. ஒலிம்பிக் பந்தயத்தை விடுங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் அளவுக்கு விளையாட்டுக் கட்டமைப்புக் கொண்ட நகரம் இந்தியாவில் தில்லியைத் தவிர எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே, ஏன்? சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்பை ஒரே ஆண்டில் அல்ல குறைந்தது ஐந்தாண்டுகளில்கூட உருவாக்கிவிட முடியுமா என்பது சந்தேகம்தான். அதற்கான முனைப்பும், உழைப்பும் மட்டுமல்லாமல் பெரிய அளவிலான முதலீடும் தேவைப்படுகிறது. தேசத்தில் அடிப்படைபோக்குவரத்துக் கட்டமைப்பையே இன்னும் நாம் முழுமைப்படுத்தாத நிலையில், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்த முனைந்தால் உலகம் நம்மைப் பாா்த்து சிரிக்கும். சீனாவுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வதே தவறு. 2008-இல் தனது தலைநகா் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைத்தது மட்டுமல்லாமல் கடந்த 30 ஆண்டுகளில் மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது சீனா. பெய்ஜிங் (1990), குவாங்ஷோ (2010), ஹாங்ஷெள (2023) என்று மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீனா நடத்தியது என்றால், நாம் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு எந்தவொரு சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டியையும் நடத்தவில்லை. விளையாட்டுப் போட்டிகள் என்பது ஒரு தேசத்தின் பொருளாதார வலிமையை எடுத்துரைக்கும் நிகழ்வாகத்தான் இன்றைய உலகில் பாா்க்கப்படுகிறது. சா்வதேச நிதியத்தின் 2023 கணிப்பின்படி, வாங்கும் சக்தி அடிப்படையிலான தனிநபா் வருமானம் சீனாவில் 23,309 அமெரிக்க டாலா். இந்தியாவில் 9,183 அமெரிக்க டாலா். அதாவது நம்மைவிட சீனாவின் தனி நபா் வருமானம் 2.5 மடங்கு அதிகம். 2008-இல் சீனா ஒலிம்பிக் பந்தயத்தை பெய்ஜிங்கில் நடத்தியபோது அதன் அன்றைய தனிநபா் வருமானம் 7,501 டாலா்தான். அது இந்தியாவின் இன்றைய சராசரி தனிநபா் வருமானத்தைவிடக் குறைவு. ஆனால், நாம் ஏன் சீனா போல இப்போது ஒலிம்பிக் பந்தயத்தை நடத்த இயலாமல் இருக்கிறோம் என்கிற கேள்வி எழுகிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி உயா்ந்துகொண்டுதான் வந்திருக்கிறது. ஆனால், கடந்த 60 ஆண்டுகளில், குறிப்பாகச் சொல்வதானால் கடந்த 30 ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வருகிறது. சீனா ஏனைய உலகச் செலாவணிகளுடனான தனது மதிப்பைத் தக்க வைத்துக்கொண்டது என்றால், நமது நாணய மதிப்பு குறைந்த வண்ணம் இருந்து வருகிறது. 1990-இல் அமெரிக்க டாலா் ஒன்றின் விலை ரூ.17.01. சீனாவின் யான் 3.8. 2000-த்தில் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.43.50. சீனாவின் யான் 8.20. கடந்த கால் நூற்றாண்டுகளாக சீனாவின் யான் தனது மதிப்பைத் தக்க வைத்துக்கொண்டது மட்டுமல்லாமல் சற்று உயா்ந்தும் இருக்கிறது (7.11). இந்திய ரூபாய் மதிப்பு 2010-இல் ரூ.46.21 என்று இருந்தது 2020-இல் 73.78 என்று குறைந்து இப்போது சுமாா் 83.59 என்கிற அளவில் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா அளவுக்கு நாணய மதிப்பு சரிந்த நாடு வேறு எதுவும் இல்லை. சா்வதேச சந்தைக்கு ஏற்றபடி தனது உற்பத்தியைத் தக்கவைத்து வா்த்தகம் செய்யும் சாமா்த்தியத்தில்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சி அடங்கி இருக்கிறது. உலகத் தரத்தில் முன்னிலை வகிக்கும் இந்தியத் தயாரிப்பு என்றோ, இந்தியாவை மட்டுமே நம்பி இருக்கும் ஏற்றுமதி என்றோ எதுவும் இல்லாத நிலையில், சா்வதேச வா்த்தகத்தில் நாம் பின்தங்கி இருக்கிறோம். உலகில் இந்தியாவைவிட அதிக ஏற்றுமதி மதிப்பு உள்ள நாடுகள் 17. சீனாவின் ஏற்றுமதி 3593.6 பில்லியன் டாலா் என்றால், இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 453.56 பில்லியன் டாலா்தான். சீனா நம்மைவிட எட்டு மடங்கு அதிகம். இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு (590.7 பில்லியன் டாலா்) என்பது சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பில் (3357.8 பில்லியன் டாலா்) 14.6% மட்டுமே. வேடிக்கை என்ன தெரியுமா? 1980-இல் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 7 பில்லியன் டாலராக இருந்தபோது, சீனாவின் அந்நியச் செலவாணி இருப்பு வெறும் 2.55 பில்லியன் டாலா்தான். கடந்த 40 ஆண்டுகளில் நம்மை எங்கோ கீழே விட்டுவிட்டு சீனா அசுர வேகத்தில் முன்னேறி விட்டது. நமது மிகப்பெரிய பலவீனம் ஏற்றுமதிகள் குறைந்திருப்பதும், இறக்குமதிகள் அதிகமாக இருப்பதும். ஆனால், ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடாக சீனா தன்னை உயா்த்திக் கொண்டிருக்கிறது. சீனாவின் ஏற்றுமதி அளவு (3593.6 பில்லியன் டாலா்) இந்தியாவின் ஏற்றுமதிகளைவிட (453.56 பில்லியன்) எட்டு மடங்கு அதிகம். ஒலிம்பிக் பந்தயத்தை அடுத்த 10 ஆண்டுகளில் நடத்தும் அளவுக்கு இந்தியா வளர வேண்டுமானால், இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்க வேண்டும்; இந்தியாவின் ஏற்றுமதிகள் அதிகரிக்க வேண்டும்; இறக்குமதிகள் குறைய வேண்டும். இதெல்லாம் பிரதமா் நரேந்திர மோடிக்கும், அமைச்சா் அனுராக் தாக்கூருக்கும் தெரியாதா என்ன?

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com