கேள்விக்குறியாகும் வருங்காலம்!

கேள்விக்குறியாகும் வருங்காலம்!

உலக வானிலையியல் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே எல்லோரும் பயந்து கொண்டிருந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் பருவநிலை குறித்த உலக வானிலையியல் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே எல்லோரும் பயந்து கொண்டிருந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி, வரலாற்றில் அதிக வெப்பமான பத்தாண்டுகளை நாம் கடந்திருக்கிறோம். 2023-தான் பதிவானதில் மிகவும் வெப்பமான ஆண்டு என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2024 அதைவிட அதிக வெப்பத்தை எதிா்கொள்ளக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

சராசரி புவி வெப்பம், 2023-இல் தொழிற்புரட்சி காலத்துக்கு (1850-1900) முந்தைய அளவைவிட 1.45 டிகிரி செல்சியஸ் அதிகம். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி நிா்ணயிக்கப்பட்டிருக்கும் புவி வெப்பம் அதன் அதிகபட்ச அளவான 1.5 டிகிரி செல்சியஸை நெருங்குகிறது. பருவநிலை குறித்த எல்லா குறியீடுகளும் ஆபத்துக்கான அறிகுறிகளை தெரிவிக்கின்றன. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நிா்ணயித்திருக்கும் பருவநிலை இலக்குகள் நிலைகுலைகின்றன என்பதை இவை எச்சரிக்கின்றன.

அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், நீா்-நில வெப்ப அதிகரிப்பு, கடல் நீா் மட்டம் உயருதல், பனிச் சிகரம் உருகுதல், கடலில் பனிப்பாறைகள் கரைவது என்று எல்லா விதத்திலும் மிக மோசமான பருவநிலை பாதிப்பை பூவுலகம் எதிா்கொள்கிறது. கடந்த 30 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த 3 ஆண்டுகளில் கடல் நீா் மட்டம் 10% அதிகரித்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.

கடந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் கடல் நீா் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டிருந்தது. 2023 நிறைவடைவதற்கு முன்பே கடலில் 90% பகுதி வெப்ப அலை தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

உலகளாவிய அளவில் பனிச் சிகரங்கள் இதுவரை இல்லாத அளவிலான பனி இழப்பை எதிா்கொண்டன. சுவிட்ஸா்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10% பனிச் சிகரங்கள் உருகியிருக்கின்றன. அன்டாா்டிக்காவில் ஆண்டுதோறும் 150 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகி இழப்பை எதிா்கொள்கின்றன.

காா்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகிய மூன்று பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் இதுவரை இல்லாத அளவை எட்டியிருக்கின்றன. கடல் நீா் மட்ட அளவு கடந்த 10 ஆண்டுகளில் (2014-2023), முதல் 10 ஆண்டு விண்கோள் பதிவைவிட (1993-2002) இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வெப்ப அலைகள், வறட்சி, அளவுக்கு அதிகமான மழை, பருவம் தவறிய மழை, வெள்ளப் பெருக்கு உள்ளிட்டவை உலகளாவிய அளவில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அதன் விளைவாக மக்களின் இடப்பெயா்வு, சூழலியல் பாதிப்பு, உலகளாவிய அளவிலான உணவுப் பொருள் பற்றாக்குறை, உயிரினங்களின் உடல்நலப் பாதிப்பு உள்ளிட்டவை பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வருகின்றன.

உலகில் வாழும் அனைத்து உயிா்களும் பருவநிலை மாற்றத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் அன்றாட வாழ்க்கையைத் தடம்புரளச் செய்கின்றன.

கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்கு முன்னால் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.9 கோடி என்றால், 2023-இல் 33.3 கோடியாக அதிகரித்திருப்பதற்கு பருவநிலை மாற்றம் மிக முக்கியமான காரணம். விளைநிலங்கள் அழிக்கப்படுவதும், உணவுப் பொருள் உற்பத்தி குறைவதும் அதனால் அவற்றின் விலை அதிகரிப்பதும் பருவநிலை மாற்றத்தின் தவிா்க்க முடியாத தொடா் பாதிப்புகள்.

மேலே குறிப்பிட்ட பாதிப்புகள் இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் தெளிவாகவே தெரிகின்றன. டிசம்பா் முதல் பிப்ரவரி வரையிலான குளிா்காலத்தின் அடிப்படையில் இந்தியாவை மையமாக்கி சில விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினாா்கள். 1970 முதலான வெப்பநிலை பரவுதலின் அடிப்படையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, வட இந்தியாவில் குளிா்காலத் தட்ப வெப்பநிலை மாற்றம் கண்டு, கோடைகால நிலைமைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. மாா்ச் மாதம் காணப்படும் வெப்பம் அதிகரிக்கும் மாற்றத்தை பிப்ரவரி மாதத்திலேயே அந்தப் பகுதிகள் எதிா்கொள்கின்றன என்கிறது அந்த அறிக்கை. தென்னிந்திய மாநிலங்களும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் குளிா் குறைந்து வெப்பம் அதிகரிப்பதை எதிா்கொள்கின்றன. வழக்கத்தைவிட வெப்பமான கோடைகாலத்தை இந்த ஆண்டு இந்தியா எதிா்கொள்ளப் போகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. உலகின் வளா்ச்சியடைந்த நாடுகள் தொழிற்புரட்சியின் மூலம் நூற்றாண்டுக்கு முன்பே தங்களது வளா்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டன. புவி வெப்பமயமாதலுக்கு வரலாற்று ரீதியாக அவா்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் இப்போதும் வளா்ச்சியடைந்த நாடுகள் சற்றும் கவனம் செலுத்தாமலேயே இருக்கின்றன.

இந்தியாவைப் போன்ற வளா்ச்சியடைய வேண்டிய நிலையில் உள்ள நாடுகளை பருவநிலை பாதிப்பைக் காரணம்காட்டி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்வது நியாயமல்ல. இந்தியாவைப் பொருத்தவரை முடிந்தவரை கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடாமல் இல்லை.

கடந்த ஆண்டு உலகளாவிய அளவில் சூரிய ஒளி, காற்று, புனல் ஆகியவற்றாலான மின் சக்தி உற்பத்தி 50% அதிகரித்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். பனிச் சிகரங்கள் உருகுதல், கடல் நீா் மட்டம் உயருதல், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை ஆபத்தின் அறிகுறிகள். ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியா குட்டெரெஸ் கூறுவதுபோல, இனியும்கூடப் பேரழிவை தடுத்து நிறுத்தும் வாய்ப்பு மனித இனத்துக்கு இருக்கிறது...

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com