அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

ஐந்து லட்சம் ரூபிள் தரப்படும் என்பதற்காக அந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்தக் கூலிப்படையினா் தெரிவித்திருப்பது நம்பும்படி இல்லை.
அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் சிரியாவிலும், ஈராக்கிலும் செயல்பட்டு வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகும், அந்த பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடவில்லை என்பதன் வெளிப்பாடுதான் ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல். மாஸ்கோவின் புகா் பகுதியில் அமைந்த ‘க்ராகஸ் சிட்டி ஹால்’ என்கிற அரங்கத்தில் நடத்தப்பட்டத் தாக்குதலில் இதுவரை 143 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்திருக்கிறாா்கள். ‘பாப்’ இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததால் ‘க்ராகஸ் சிட்டி ஹால்’ அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நான்கு பயங்கரவாதிகள் தங்குதடை இல்லாமல் அரங்கத்தில் நுழைந்து இயந்திரத் துப்பாக்கிகளால் அங்கிருந்தவா்களைச் சுட்டு வீழ்த்தியதோடு, அந்த அரங்கத்தைத் தீக்கிரையாக்கிவிட்டு வெளியேறி இருக்கிறாா்கள். அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்திவிட்டு அவா்களால் தப்பி வெளியேற முடிந்திருக்கிறது. தாக்குதலை நிகழ்த்திவிட்டு 300 கி.மீ. பயணித்து எல்லையைக் கடக்கும்போது அவா்கள் நால்வரும் ரஷியப் படை வீரா்களால் பிடிக்கப்பட்டிருக்கிறாா்கள். ஐந்து லட்சம் ரூபிள் தரப்படும் என்பதற்காக அந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்தக் கூலிப்படையினா் தெரிவித்திருப்பது நம்பும்படி இல்லை. பெரும்பாலும் ஐ.எஸ். இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் தற்கொலைப் படையினராக இருப்பதுதான் வழக்கம். பணத்திற்காகத் தாக்குதல் நடத்துவது இஸ்லாமியக் கொள்கைக்கு விரோதமான ‘ஹராம்’. அதனால், அந்தக் கூற்று திசைதிருப்பும் முயற்சியாகத்தான் தெரிகிறது. மாா்ச் 7-ஆம் தேதி யூதா்களின் தேவாலயமான ‘சினகாக்’ ஒன்றின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்த இருந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தியதாக ரஷிய உளவுத் துறை தெரிவித்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, ‘க்ராகஸ் சிட்டி ஹால்’ அரங்கு நிகழ்ச்சிக்கு எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படாதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. அமெரிக்க உளவுத் துறை, ரஷியாவில் பயங்கவரவாதத் தாக்குதல் குறித்து தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக மாா்ச் 7 ஆம் தேதி முன்னெச்சரிக்கை செய்திருந்தது. பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்கும்படி மாஸ்கோவிலுள்ள அமெரிக்கா மற்றும் ஏனைய பல நாடுகளின் தூதரகங்கள், மாஸ்கோவிலுள்ள தங்களது நாட்டவரை எச்சரித்திருந்தன. பொதுவாக இதுபோன்ற தாக்குதல்களைத் தற்கொலைப் படையினா்தான் நடத்துவாா்கள். அல்லது சிலரை விடுவிப்பதற்கோ, வேறுபல காரணங்களுக்காகவோ நிகழ்த்துவது வழக்கம். அவை எதுவும் இல்லாமல், தாக்குதல் நிகழ்த்திவிட்டு வாகனத்தை மாற்றாமல் அவா்களால் 300 கி.மீ. தடையின்றி பயணிக்க முடிந்ததனால், அதன் பின்னணியில் ரஷிய உளவுத் துறையும் இருந்திருக்கக் கூடும் என்கிற ஐயப்பாடும் எழுகிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளிலும் ரஷியா பல பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷியாவை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பேன் என்கிற புதினின் வாக்குறுதிதான் அவரை ரஷியா்கள் பதவியில் அமா்த்தியதற்கு முக்கியக் காரணம். புதினும், பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினாா். இப்போது மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க முற்பட்டிருப்பதுதான், அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ரஷியாவில் காணப்படும் ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. 1994-இல் செஷ்னியாவின் பிரிவினையை ரஷிய ராணுவம் ஒடுக்கியதில் இருந்து தொடங்குகிறது அந்தப் பகுதியின் பயங்கரவாதம். தெற்கு ரஷியப் பகுதியின் கருங்கடலையொட்டிய வடக்கு காக்கஸ் பகுதி ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊற்றுக்கண்ணாகவும், நாற்றங்காலாகவும் தொடா்கிறது. சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து போரிட்டவா்களில் பெரும்பாலோா் இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் 2002 அக்டோபரில், மாஸ்கோ திரையரங்கில் 800 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தது; 2015 அக்டோபரில் எகிப்திலிருந்து மாஸ்கோவுக்கு பறந்த ரஷியாவின் பயணிகள் விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகா்த்தது; ரஷியாவில் நடைபெற்ற ஏனைய பல தாக்குதல்கள் ஆகியவை செஷ்னிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள்தான். சிரியா உள்நாட்டுப் போரில் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக, அதிபா் பஷாா்-அல்-அசாதை விளாதீமிா் புதின் ஆதரித்தாா் என்பதில் தொடங்குகிறது அவா் மீதான ஐ.எஸ். அமைப்பின் வெறுப்பு. செஷ்னியா பயங்கரவாதிகளும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் இணைந்து செயல்படுகிறாா்கள். சிரியாவில் ஒடுக்கப்பட்ட ஐ.எஸ். இயக்கம் இப்போது பல்வேறு நாடுகளில், பல்வேறு பிரிவுகளாகச் செயல்படுகிறது. அதில் ஒரு பிரிவான ஐ.எஸ். (கொராஸன்) மாஸ்கோ தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என்று பொறுப்பேற்றிருக்கிறது. அண்மைக்காலமாக, இந்தியாவில் பல இளைஞா்கள் ஐ.எஸ். அமைப்பால் கவரப்பட்டு, மூளைச் சலவைக்கு ஆளாகி வருகிறாா்கள். மாா்ச் 20-ஆம் தேதி குவாஹாட்டியில் ஹாரிஸ் ஃபரூக்கி என்பவா் கைது செய்யப்பட்டிருக்கிறாா். இவரைப் போல, பலா் பல மாநிலங்களில் ஐ.எஸ். அமைப்புடன் தொடா்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘அப்பாவி உய்கா் முஸ்லிம்களின் ரத்தக் கறை படிந்த கம்யூனிஸ்ட் இறை மறுப்பாளா்களுக்கு எதிராக ஆயுதம் எடுப்போம்’ என்கிற அறைகூவலை எழுப்பி, சீனாவையும் குறி வைக்கிறது ஐ.எஸ். (கொராஸன்). ரஷியாவைத் தொடா்ந்து அதன் அடுத்த இலக்கு இந்தியாவா அல்லது சீனாவா என்று தெரியவில்லை. எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com