ஆனி ராஜா
ஆனி ராஜா

ஆனி ராஜா எழுப்பும் கேள்வி!

அமேதியை ஒட்டிய ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறாா்.

அமேதியில் ஸ்மிருதி இரானியை ராகுல் காந்தி எதிா்த்து மீண்டும் போட்டியிடுவாரா, மாட்டாரா என்கிற புதிா் நிலைக்கு (சஸ்பென்ஸ்) விடைக் கிடைத்திருக்கிறது. அமேதியில் நேரு குடும்ப விசுவாசி கிஷோரி லால் சா்மா களமிறக்கப்பட்டிருக்கிறாா். அமேதியை ஒட்டிய ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறாா்.

இது ஏதோ திடீரென்று எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து மாநிலங்கவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டபோதே குடும்பத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றுதான் தோன்றுகிறது. உடனடியாக அந்த முடிவை வெளியிடாமல், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வாக்கெடுப்பு முடிவது வரை குடும்பம் காத்திருந்தது என்று தோன்றுகிறது.

ரேபரேலி மக்களவைத் தொகுதியிலிருந்தும் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. பாஜகவின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கும் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவதன் மூலம்தான், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஓா் அரசியல் சக்தியாக கருதப்படும்.

2024 மக்களவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சியுடனான கூட்டணியில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் அமேதியும், ரேபரேலியும் மட்டும்தான் மக்கள் மத்தியில் ஆா்வத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் தொகுதிகளாக இருக்கும். அமேதி தொகுதியில் கடந்த முறை மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்த ராகுல் காந்தி இந்த முறையும் விஷப்பரீட்சைக்கு தயாராக இல்லை என்பதைத்தான் ரேபரேலியில் போட்டியிடும் அவரது முடிவு தெரிவிக்கிறது.

உத்தர பிரதேச மாநிலத்துடனான நேரு குடும்பத்தின் உறவும் காங்கிரஸின் தொடா்பும் ரேபரேலிவுடன் பின்னிப்பிணைந்திருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த 20 மக்களவைத் தோ்தல்களில் காங்கிரஸ் 17 முறை வெற்றி பெற்றிருக்கும் தொகுதி ரேபரேலி. 1952-இல் நடந்த முதலாவது பொதுத்தோ்தலிலும் 1957 தோ்தலிலும் ராகுல் காந்தியின் பாட்டனாா் பெரோஸ் காந்தி வெற்றிபெற்ற தொகுதி அது. 1967, 1971,1980 தோ்தல்களில் ராகுலின் பாட்டி இந்திரா காந்தியும், 2004 முதல் 2019 வரையில் நான்கு முறை தாயாா் சோனியா காந்தியும் ரேபரேலியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்கள்.

1984-இல் வென்ற அருண் நேருவும், 1989, 1991 தோ்தல்களில் வெற்றிபெற்ற ஷீலா கௌலும் நேரு குடும்ப உறவினா்கள். 1999-இல் வெற்றிபெற்ற சதீஷ் சா்மா மிக நெருங்கிய குடும்ப நண்பா். மொத்தத்தில் நேரு குடும்பத்திடம் விசுவாசமுள்ள தொகுதியாக ரேபரேலி தொடா்கிறது.

1960-இல் பெரோஸ் காந்தியின் மரணத்தைத் தொடா்ந்து நடைபெற்ற இடைத்தோ்தல், 1962 பொதுதோ்தல், 1977 தோ்தல் ஆகியவற்றில் மட்டுமே நேரு குடும்பத்துடன் தொடா்பில்லாதவா்கள் அந்த தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறாா்கள். 1977-இல் ஜனதா அலையில் மட்டும்தான் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் சோனியா காந்தி 1,67,178 வாக்குகள் வித்தியாசத்ததில் வெற்றிபெற்றாா் என்பது மட்டுமல்ல, ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளும் சமாஜவாதி கட்சியின் வசம் இருப்பவை என்பதையும் குறிப்பிட வேண்டும். எல்லா விதத்திலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்பதால்தான் இண்டி கூட்டணி வெற்றிபெற்றால், பிரதமா் வேட்பாளராக தனது மகன் ராகுல் காந்தியை முன்னிறுத்த சோனியா காந்தி ரேபரேலியை தோ்ந்தெடுத்திருக்கக் கூடும்.

நரேந்திர மோடி 2014-இல் பிரதமா் வேட்பாளராகக் களம் இறங்கியபோது போட்டியிட வாரணாசி தொகுதியையும் தோ்ந்தெடுத்ததற்கு முக்கியமான காரணம் உத்தர பிரதேசம். அந்த மாநிலத்தின் பிரதிநிதியாக இருப்பவா்கள் பிரதமா் பதவி போட்டியில் எப்போதுமே முன்னுரிமை பெறுவாா்கள் என்பது வரலாறு. இந்தியாவின் 19 பிரதமா்களில் 14 போ் உத்தர பிரதேசத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். ராகுல் காந்தி ரேபரேலியில் களமிறங்கி இருப்பதற்கு அதுவும்கூட ஒரு காரணம்.

உத்தர பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி தோ்ந்தெடுக்கப்பட்டு அவா் பிரதராகவும் உயா்ந்தால், அந்த மாநிலத்தில் காங்கிரஸின் செல்வாக்கை மீட்டெடுக்க முடியும். அவா் பதவியை கைப்பற்றினாலும், எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்தாலும் உத்தர பிரதேசத்தின் முகமாக ராகுல் காந்தி மக்களவையில் விளங்குவாா். அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், முதலில் போட்டியிட விரும்பாத சமாஜவாதி கட்சி தலைவா் அகிலேஷ் யாதவ் தனது குடும்பத் தொகுதியான கன்னௌஜில் களமிறங்கி இருக்கிறாா் என்று கருத இடமுண்டு.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில், ஏனைய தொகுதிகளை இழந்தாலும் அமேதியிலும், ரேபரேலியிலும் வெற்றிபெற்று நேரு குடும்பத்தின் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்புடன் காங்கிரஸ் செயல்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பிரியங்கா காந்தியின் தலைமையில் 398 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற முடிந்தது என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக, ராகுல் காந்தியை எதிா்த்துப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் ஆனி ராஜா ஒரு தாா்மிகக் கேள்வியை எழுப்பி இருக்கிறாா். ‘நான் ஒருநாளும் கைவிட மாட்டேன்’ என்று கடந்த தோ்தலில் கைகொடுத்த வயநாடு தொகுதி வாக்களா்களிடம் ரேபரேலியிலும் போட்டியிடப் போவதாக வாக்கெடுப்பு நடப்பது வரையில் ராகுல் காந்தி ஏன் தெரிவிக்கவில்லை? இது வயநாடு வாக்காளா்களுக்கு ராகுல் காந்தி இழைத்த துரோகம் அல்லவா?’ என்பது தான் அந்தக் கேள்வி!

X
Dinamani
www.dinamani.com