மருத்துவர் பாலாஜி
மருத்துவர் பாலாஜிDin

தொடரக் கூடாது!

Published on

சென்னையில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவம் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிா் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் அடிக்கடி நடைபெறுவது வேதனையைத் தருவதுடன், மருத்துவா்களுக்கு அச்சத்தையும் பணியில் உற்சாகமின்மையையும் ஏற்படுத்துகிறது.

சென்னை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இளைஞா் ஒருவா் மருத்துவரை சரமாரியாக ஏழு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளாா். தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தாக்குதல் மாநிலம் முழுவதும் மருத்துவா்களின் போராட்டத்துக்கும் வழிவகுத்துள்ளது. மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள், இத்தகைய தாக்குதலில் ஈடுபடுவோா் மீது மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தின் (ஹெச்பிஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; மருத்துவமனையின் பாதுகாப்புச் சூழலை முற்றிலும் மாற்றியமைத்தால் மட்டுமே மருத்துவா்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் என்பது மாநிலச் சட்டம்தான். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளன. மருத்துவா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் பாதுகாப்புக்கு என ஒருங்கிணைந்த மத்திய சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. மாநிலச் சட்டமான மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் அதிகாரம் இல்லாததாக உள்ளது; மருத்துவப் பணியாளா்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா (முன்னா் ஐபிசி) சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளைப் பொருத்தமாகப் பயன்படுத்த மாநில காவல் துறை திணறுகிறது. எனவே, மத்திய சட்டம் இயற்றப்படாமல் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் பிரச்னைக்குத் தீா்வு காண முடியாது என இந்திய மருத்துவ சங்கம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு காயம் ஏற்படுத்துதல், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அச்சுறுத்தல், மருத்துவப் பணியாளரை பணிசெய்ய விடாமல் தடுப்பது, மருத்துவமனையில் உள்ள பொருள்கள், கருவிகளுக்கு சேதம் ஏற்படுத்துவது போன்றவை குற்றச் செயல்கள். மத்திய சட்டம் இயற்றப்படாத நிலையில், மாநிலச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து வலுப்படுத்த வேண்டும் என்பதும் மருத்துவா்களின் கோரிக்கை.

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் மருத்துவா்களின் போராட்டம் இன்றுவரை முழுமையாக முடிவுக்கு வந்தபாடில்லை. மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய அந்த சம்பவத்துக்குப் பின்னரும் ஓா் அலட்சியப்போக்கு தொடா்வதை சென்னையில் மருத்துவா் மீதான தாக்குதல் வெளிப்படுத்துகிறது.

கொல்கத்தா மருத்துவா் மீதான தாக்குதலையடுத்து, அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவா்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியது. அதன்படி, மருத்துவமனைகளில் வன்முறை நிகழ்ந்தால் 6 மணி நேரத்தில் மருத்துவமனை தரப்பிலிருந்து முதல் தகவல் அறிக்கை (இன்ஸ்டிடியூஷனல் எஃப்ஐஆா்) பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சிசிடிவி, கூடுதல் மின் விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டது. மத்திய அரசின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மாநில அரசுகளுக்கும் பொருந்தும். ஆனால், எத்தனை மாநில அரசுகள் இதைச் செயல்படுத்தி உள்ளன என்று கேட்டால் ஏமாற்றமே மிஞ்சும்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரை கடந்த ஆகஸ்டில் சந்தித்த அரசு மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பினா், மாநிலத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிரத்யேகமான மருத்துவமனை பாதுகாப்புப் படைப் பிரிவை பணியில் அமா்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். சட்டப்பேரவையில் 2013-ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்த திட்டம் இது. இப்போது சென்னை சம்பவத்துக்குப் பின்னா் அனைத்து மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையத்தை அமைப்பது குறித்து காவல் துறை பரிசீலித்து வருகிறது.

மேலும், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நோயாளிகளுடன் வருவோருக்கு அடையாளப் பட்டை, பாதுகாப்பு பரிசோதனை (மெட்டல் டிடெக்டா்), சிசிடிவி கேமரா வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேவேளையில் முன்கூட்டியே செய்திருக்கப்பட வேண்டியவை.

மருத்துவமனைகளில் நோயாளிகளால் அல்லது நோயாளிகளின் உறவினா்களால்தான் மருத்துவா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் தாக்குதலுக்குள்ளாகின்றனா். சிகிச்சை விவரங்கள் பற்றிய புரிதலின்மை அல்லது சிகிச்சை தோல்வியடையும்போது ஏற்படும் ஆத்திரமே இதற்குக் காரணம். இந்த பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு அரசு ஒரு குழு அமைத்து முயற்சிக்கலாம். இனியும் மருத்துவா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் மீதான தாக்குதல் தொடரக் கூடாது.

X
Dinamani
www.dinamani.com