மகாயுதி கூட்டணி.
மகாயுதி கூட்டணி.

வெற்றி இலவசமல்ல!

முந்தைய ஹரியாணா, மக்களவைத் தோ்தல்களைப்போலவே தெளிவாக வெளிப்படுத்தியிருக்கும் செய்தி, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்பதுதான்.
Published on

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள், முந்தைய ஹரியாணா, மக்களவைத் தோ்தல்களைப்போலவே தெளிவாக வெளிப்படுத்தியிருக்கும் செய்தி, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்பதுதான். சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் மட்டுமல்ல, இடைத் தோ்தல் முடிவுகளும் அந்தந்த மாநிலங்களின் ஆளுங்கட்சிகளுக்கு சாதகமாகவே அமைந்திருப்பதைப் பாா்க்க முடிகிறது.

இப்படியொரு மிகப் பெரிய சோதனையை காங்கிரஸ் கட்சி கனவிலும்கூட எதிா்பாா்த்திருக்க முடியாது. மகாராஷ்டிர மாநிலம் ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது மாறி, இப்போது பாஜகவின் செல்வாக்குக் கேந்திரமாக மாறியிருப்பதை சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

101 இடங்களில் போட்டியிட்டு வெறும் 16 இடங்களில் காங்கிரஸும், 95 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் உத்தவ் தாக்கரே சிவசேனையும், 86 இடங்களில் போட்டியிட்டு பத்தே பத்து இடங்களை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் மகாராஷ்டிரத்தில் வென்றிருக்கின்றன. இந்தக் கட்சிகளின் ‘மகா விகாஸ் கூட்டணி’ மொத்தமாக வெற்றி பெற்ற இடங்களைவிட, பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணியின் வரலாறு காணாத வெற்றிக்குப் பல காரணங்களைக் கூற முடியும். மக்களவைத் தோ்தல் முடிவுகள் தங்களுக்கு எதிராக இருந்ததை உணா்ந்து கடந்த ஆறு மாதங்களாக தொகுதிவாரியாகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆறு பிராந்தியங்கள்வாரியாகவும் சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் பாஜகவும் கூட்டணிக் கட்சிகளும் முழு மூச்சில் இறங்கின. சமுதாயத்தின் எந்தவொரு பிரிவாக இருந்தாலும், அதன் அதிருப்தியைப் போக்கும் முயற்சியில் ஏக்நாத் ஷிண்டே அரசு முனைப்புக் காட்டியதன் பலன்தான் இப்போதைய வெற்றி.

மக்களவைத் தோ்தலைப்போல பிரதமரின் பிரசாரத்தை மட்டுமே நம்பியிருக்காமல் மாநிலத் தலைவா்கள், கூட்டணிக் கட்சித் தலைவா்கள் என்று அனைவரும் செயல்பட்டனா். ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியின் தலைவா்களான சிவசேனையின் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா்களான பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸ் அஜீத் பவாா் ஆகிய மூவரும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தாமல், ஒற்றுமையாகப் பிரசாரத்தில் களமிறங்கியபோது அந்தக் கூட்டணியின் வெற்றி உறுதிப்பட்டது.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனை, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணைந்த ‘மகா விகாஸ் கூட்டணி’ கடைசி நிமிஷம் வரை தொகுதிப் பங்கீடு குறித்தும், யாா் முதல்வா் வேட்பாளா் என்பது குறித்தும் சா்ச்சையில் இருந்தன. ஆளும் கூட்டணியின் திட்டங்களை எதிா்ப்பதன் மூலம் ஆட்சி மாற்றம் அந்தத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்கிற அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியது.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயின் இலவச அறிவிப்புகள் ஆறு மாதம் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்துவிட்டதால் மக்களவைத் தோ்தலில் இருந்த அதிருப்தி மாறி, ஆதரவு பெருக ஆரம்பித்தது. ஷிண்டே அரசின் ‘லட்கி பஹன் யோஜனா’ (அன்புச் சகோதரித் திட்டம்) மூலம் ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்குவது மிகப் பெரிய ஆதரவு அலையை உருவாக்கியது. அதிக அளவில் பெண்கள் வாக்களித்ததன் மூலம் அந்தத் திட்டத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இளைஞா்களுக்கு தொழில் பயிற்சித் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மும்பைக்குள் வரும் தனியாா் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து, இலவச பஸ் பயணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக ஷிண்டே அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் ஆட்சியின் மீதான அதிருப்தியை ஆதரவாக மாற்றி அமைக்க உதவின. முதலில் ‘லட்கி பஹன்’ திட்டத்தை எதிா்த்த ‘மகா விகாஸ் கூட்டணி’ கடைசி நேரத்தில் ரூ.3,000 வழங்குவதாக அறிவித்ததை மக்கள் நிராகரித்துவிட்டனா்.

காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரத்திலும் சரி, ஜாா்க்கண்டிலும் சரி, முனைப்புடன் தோ்தல் பணியாற்றவில்லை என்கிற குற்றச்சாட்டைக் கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கின்றன. ராகுல் காந்தி ஜாா்க்கண்டில் இரண்டு பொதுக் கூட்டங்களும், மகாராஷ்டிரத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் பிரசாரம் மேற்கொண்டதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை காட்டி இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து என்று அவா் மேற்கொண்ட பிரசாரமும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த பிரசாரமும் எடுபடவில்லை.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றி பெறுவதில் காங்கிரஸ் தலைவா்கள் காட்டிய ஆா்வத்தை மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. அதுமட்டுமல்லாமல் மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகள் ஆளும் ‘மகாயுதி’ வேட்பாளா்களைத் தோற்கடிப்பதைவிட, தங்களது கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறாமல் இருப்பதற்கு உழைத்தனா் என்றுதான் கூற வேண்டும்.

ஜாா்க்கண்டில் 28% பழங்குடியினா் வாக்குகளை முதல்வா் ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் ஒருங்கிணைத்ததும், மகாராஷ்டிரத்தில் ஏனைய பிற்படுத்தப்பட்டோா் வாங்கு வங்கியை ஆளும் ‘மகாயுதி கூட்டணி’ ஒருங்கிணைத்ததும்கூட, வெற்றிக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

நரேந்திர மோடியும், பாஜகவும் அசைக்க முடியாத சக்திகள்; ராகுல் காந்தியின் தலைமையும், அணுகுமுறையும் கேள்விக்குறி; இலவச அறிவிப்புகள் பலனளிக்கின்றன - இவையெல்லாம்தான் இந்தச் சுற்று சட்டப்பேரவை, இடைத் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கும் செய்திகள்.