
இரண்டாவது கட்டமாக 400 நாள்கள் நீடித்த விவசாயிகளின் போராட்டம் தோல்வி முகத்தில் நிற்கிறது. இனி இருதரப்பு பேச்சுவார்த்தை எந்த திசையை நோக்கிச் செல்லும் என்பதோடு விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்கிற கேள்வியும் எழுகிறது.
முதல் கட்டமாக 380 நாள்கள் போராட்டம் நடத்திய விவசாயிகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வெற்றிகரமாக திரும்பப் பெற வைத்தனர். அப்போது அரசு கொடுத்த வாக்குறுதியின்படி, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரி இரண்டாவது கட்ட போராட்டத்தை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கினர்.
விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமைச்சர்கள் குழுவுடன் ஆறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படாத நிலையில் 7-ஆவது கட்டமாக சண்டீகரில் கடந்த மார்ச் 19-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக இரு தரப்பினரும் கூறினர். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மே 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு போராட்டக் களத்துக்கு திரும்பிய சங்கத் தலைவர்கள் ஜக்ஜீத் சிங் தல்லேவால், சர்வன் சிங் பந்தேர் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பஞ்சாப்-ஹரியாணா எல்லையான கனெüரி-ஷம்பு எல்லையில் முகாமிட்டு இருந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். சாலைகளில் இருந்த கான்கிரீட் தடுப்புகள் மற்றும் முள்வேலிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டு முடங்கிக் கிடந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமானது, இப்போது பஞ்சாப் மாநில அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அந்த மாநில போலீஸôரைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தை கடந்த மார்ச் 28-ஆம் தேதி நடத்தினர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. லூதியானா மேற்கில் ஆளும் ஆம் ஆத்மிக்கு வெற்றி அவ்வளவு எளிதல்ல என்ற நிலையில், இந்தப் பிரச்னை மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
தங்களின் முதல் கட்டப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஆம்-ஆத்மி, இப்போது முதுகில் குத்திவிட்டதாகக் கருதும் விவசாயிகளின் கோபம் பஞ்சாப் அரசு மீது திரும்பியுள்ளது.
அதனால், மாநில பாஜகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். இப்போதுள்ள சட்டப் பேரவையில் பாஜகவுக்கு இரு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 18.5 சதவீத வாக்குகளைப் பெற்றும் ஓர் இடத்தில்கூட பாஜக வெற்றி பெறவில்லை. விவசாயிகளின் அதிருப்தியை இடைத்தேர்தலிலும், 2027-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் தங்களுக்குச் சாதகமாக்க பாஜக திட்டமிடுகிறது.
வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக மத்திய அரசு மறைமுகமாக பலதடவை தெரிவித்து விட்டது. எனினும், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதால், சட்டபூர்வ அங்கீகாரம் தவிர்த்து வேறு நல்லதொரு மாற்றுத் திட்டம் அறிவிக்கப்படலாம்; பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவியை அதிகரித்தல் உள்ளிட்ட இதர 11 கோரிக்கைகளில் சிலவற்றுக்குச் சாதகமான முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது விவசாயிகளின் போராட்டம் கலைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசுக்கு அழுத்தம் குறைந்துள்ளது. விவசாயிகளின் கவனம் வேறு திசைக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் மத்திய அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தை எந்த திசையை நோக்கிச் செல்லும் என்ற கேள்வி மட்டுமல்லாமல், கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
விவசாயிகள் தில்லி எல்லையை முற்றுகையிட்ட முதல் கட்டப் போராட்டம் பொதுமக்களின் பரவலான ஆதரவுடன் நடைபெற்றது. போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகளுக்கு தொழிலதிபர்கள் நிதியுதவி அளித்தனர். தேவையான பொருள்களை உள்ளூர் வியாபாரிகள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்து ஆதரவைத் தெரிவித்தனர். மருத்துவர்கள் போராட்டக் களத்துக்கு சென்று இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இரண்டாவது கட்ட போராட்டத்துக்கு அத்தகைய ஆதரவு எதுவும் இல்லை. மாறாக, எல்லைப்புற சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதால் வாகனப் போக்குவரத்து முடங்கி உள்ளூர் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. தொழில் துறையினர் அதிருப்தி அடைந்தனர். இதைக் கணித்ததால்தானோ என்னவோ, மத்திய அரசும் பேச்சுவார்த்தையை நீட்டித்துக் கொண்டே சென்றது.
"ஆறின கஞ்சி பழங்கஞ்சி' என்பார்கள். விவசாயிகள் போராட்டம் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் வலுவிழந்திருக்கிறது என்பது என்னவோ உண்மை. ஆனாலும், அது நீறுபூத்த நெருப்பாக தொடரும் என்பதை மறந்துவிடக் கூடாது. விவசாயிகள் மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்கும் முன்பாக பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.