
குற்றச் சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கும் "புல்டோஸர் நீதி'க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கை சட்ட விரோதமானது, மனிதத் தன்மையற்றது என வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இதற்குக் காரணமான உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு, பின்னர் அரசியல்வாதியாக உருவெடுத்த ஆதிக் அகமது கடந்த 2023}ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவருக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டவை எனத் தவறாகக் கணித்து, பலரது வீடுகளை பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் புல்டோஸர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.
வீடுகள் இடிக்கப்பட்டது சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்திருக்கிறது மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபே எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு. மேலும், அரசியல் சட்டத்தில் 21}ஆவது பிரிவு அனைவருக்கும் வசிப்பிட உரிமையை வழங்கியிருக்கிறது என்றும், சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றாமல் வீடுகள் இடிக்கப்பட்டது, தங்களது மனசாட்சியை உலுக்கியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, ஏற்கெனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. அந்த இடைக்கால உத்தரவையும் மீறி, உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் பகுதியில் இருந்த குடிசை வீடுகள் புல்டோஸர் மூலம் அண்மையில் இடிக்கப்பட்டபோது, அங்கிருந்த ஒரு சிறுமி புத்தகங்களைக் கைகளில் இறுகப் பற்றிக் கொண்டு அதிவேகமாக ஓடிச் செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 2022}ஆம் ஆண்டுமுதல் இதுவரை சுமார் 1.50 லட்சம் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளால் சுமார் 7.38 லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து வசிப்பிடமின்றி வீதிக்கு வந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், அஸ்ஸôம், தில்லி, மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவிலான வீடுகள் புல்டோஸர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பெருநிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களின் கட்டடங்களை இடிப்பதற்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும், அதைச் செயல்படுத்தாமல் காலம் கடத்தும் உத்திகளைக் கடைப்பிடிப்பதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், தங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் கட்டடங்கள் என்றால், அவற்றை இடிப்பதைத் தவிர்க்கும் விதத்தில் அதை முறைப்படுத்தும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க ஆட்சியாளர்கள் தயங்குவதில்லை.
அனுமதியின்றி வீடுகள் கட்டப்பட்டிருந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு முறைப்படி நேரடியாக குறிப்பாணை (நோட்டீஸ்) வழங்கப்பட வேண்டும் என்றும், பலமுறை நேரில் சென்றும் வழங்க முடியாத நிலையில், வீட்டின் கதவில் குறிப்பாணையை ஒட்டவேண்டும் என்றும், வீட்டு உரிமையாளரின் பதிலைப் பெற்ற பிறகே முறையாகப் பரிசீலித்து இடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பெரும்பாலான நிகழ்வுகளில் வீடுகள் இடிக்கப்படும்போது உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்கள் எதுவும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் தனது சட்டவிரோத, மனிதாபிமானமற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்புக்குரியது. அதேநேரத்தில், இந்த இழப்பீட்டுத் தொகையை பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்துக்குப் பதிலாக, வீடு இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட அதன் உயர் அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தால் இன்னும் சரியானதாக இருந்திருக்கும். வீடுகளை புல்டோஸர் மூலம் இடித்துத் தள்ளும் கொடூர மனம் படைத்த அதிகாரிகள் ஏதாவது ஒரு வகையில் தண்டிக்கப்படுவதுதான் நியாயம்.
சாமானிய மக்களுக்கு ஒரு நீதி, வசதி படைத்தவர்களுக்கு வேறு விதமான நீதி என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.