காஷ்மீரில் மனநிலை மாற்றம்!

காஷ்மீருக்கு உரிய காலத்தில் மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டு, அங்கு மற்ற மாநிலங்களைப்போல அமைதியான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
காஷ்மீரில் மனநிலை மாற்றம்!
ENS
Published on
Updated on
2 min read

பிரிவினைவாதத்தைக் கொள்கையாகக் கொண்ட ஜம்மு சில அமைப்புகள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றன. அந்த அமைப்பில் இடம்பெற்றிருந்த ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகியவை பிரிவினைவாதத்தைக் கைவிட்டு ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தன.

அதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர் தஹ்ரீகி இஸ்தக்லால், ஜம்மு - காஷ்மீர் தஹ்ரீக் ஏ இஸ்திகாமத் ஆகிய அமைப்புகளும் பிரிவினைவாதத்தைக் கைவிடுவதாக அறிவித்திருக்கின்றன. மேலும் ஹுரியத் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அவை தெளிவுபடுத்தி உள்ளன.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமுதல், அவர்களது நீண்ட கால வாக்குறுதியான அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கான அடிப்படைப் பணிகளை முதல் 5 ஆண்டுகளில் மேற்கொண்டது. நரேந்திர மோடி பிரதமரான பின்னர், காஷ்மீர் தொடர்பான அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370-ஆவது பிரிவு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க, பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் செனாப் என்ற இடத்தில் 1,178 அடி உயரத்தில் 0.53 கி.மீ. தொலைவுக்கு உலகின் அதிக உயரமான இடத்தில் பாலம் கட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பில் ஸ்ரீநகர், செனாப் பாலம் வழியாக உதம்பூரில் இருந்து பாரமுல்லாவுக்கு தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம் பிரதமர் மோடியால் வரும் ஏப். 19-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.33 கோடியாக இருந்தது. இது தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து கடந்த 2024-ஆம் ஆண்டு 2.35 கோடியாகியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சராசரியாக ஆண்டு தோறும் 15 சதவீதம் அதிகரித்து வருகிறது.

பயங்கரவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த காஷ்மீர் பகுதிக்குக்கூட 2022-இல் 26.7 லட்சமும், 2023-இல் 27.1 லட்சமும், 2024-இல் 29.5 லட்சமும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளின் காரணமாக, 1980-கள் முதல் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் தலைதூக்கியிருந்த பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் சட்டப்பே ரவை தேர்தல் நடைபெற்றபோது பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ஆனால், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு கடந்த 2024 செப்டம்பர் -அக்டோபரில் தேர்தல் நடைபெற்றபோது, அதுபோன்று வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

காஷ்மீரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், பயங்கரவாதிகள் தங்கள் உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளனர் என்பதையே அண்மைக்கால தாக்குதல் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிமாநிலத் தொழிலாளர்களை அச்சுறுத்தும்வகையில், கந்தர்பால் மாவட்டத்தில் சுரங்க கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கடந்த 2024 அக். 20-இல் பயங்கரவாதிகள் தாக்கியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பயங்கரவாதிகள் காட்டுப் பகுதிகளில் மறைந்திருந்து கொரில்லா போர் முறையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கதுவா மாவட்டத்தில் தொலைதூர காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் இறுதியில் நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் 4 காவலர்கள் வீரமரணமடைந்தனர்.

ஹுரியத் மாநாட்டில் இருந்து சில அமைப்புகள் விலகியதாக அறிவித்தபோது, 'பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளால் ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாதம் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது' என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், காஷ்மீர் மக்கள் வன்முறையையும், பயங்கரவாதச் செயல்களையும் வெறுக்கிறார்கள் என்பது என்னவோ உண்மை. இப்போதைய சூழல் மேலும் மேம்பட்டு முழுமையான அமைதி திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவதுடன், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தபடி, உரிய காலத்தில் மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டு அங்கு மற்ற மாநிலங்களைப்போல அமைதியான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com