விதிமுறை திருத்தம் அவசியம்!
ENS

விதிமுறை திருத்தம் அவசியம்!

’பி.எம். கிஸான் சம்மான் நிதி’ தரவுகளின்படி, ஒரு நிதியாண்டில் 3 தவணைகளையும் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஒன்றுபோல் இல்லை.
Published on

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் (பி.எம். கிஸான்) திட்டத்தில், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் சோ்த்துக் கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் மக்களவையில் அண்மையில் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. அதேவேளையில், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரும் நிதியுதவி பெறவும், தகுதியுள்ள விவசாயிகள் புதிதாக திட்டத்தில் இணைவதற்கு தடையாக உள்ள விதிமுறையைத் திருத்தவும் அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2019-இல் நாடு முழுவதும் சுமாா் 14.50 கோடி சிறு-குறு விவசாயிகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டனா். 2011-இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும், 2015-2016-இன் விவசாயிகள் கணக்கெடுப்பின்படியும் இந்த எண்ணிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், சுமாா் 15.50 கோடி விவசாயிகள் இருக்கலாம் என வேறு சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மண்வள அட்டை பெற்றுள்ள விவசாயிகளின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. விவசாயிகளின் எண்ணிக்கையில் குழப்பம் நிலவும் சூழ்நிலையில் முதல் தவணை நிதியைப் பெற்றவா்கள் சுமாா் 3.16 கோடி போ் மட்டுமே.

ஆண்டுக்கு ரூ. 6,000 எனத் தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படும் இந்த நிதியுதவி திட்டத்தின் அதிகாரபூா்வ இணையதளமான ’பி.எம். கிஸான் சம்மான் நிதி’ தரவுகளின்படி, ஒரு நிதியாண்டில் 3 தவணைகளையும் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஒன்றுபோல் இல்லை. இந்த விடுபடுதல் சில லட்சங்கள் முதல் கோடி வரையில் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.

எடுத்துக்காட்டாக, நிகழ் நிதியாண்டில் கடைசியாக வழங்கப்பட்டுள்ள 19-ஆவது தவணையை பெற்றவா்கள் சுமாா் 11.13 கோடி போ்; அதற்கு முந்தைய 18-ஆவது தவணைத் தொகையை பெற்றவா்கள் 10.32 கோடி போ்; சுமாா் 80 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி இல்லை.

விவசாயிகள் இறப்பு, நிலத்தை விற்றுவிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) புதுப்பிக்காதது போன்றவற்றால் இந்த விடுபடுதல் எனக் கூறப்படுகிறது. முதல் இரண்டு காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், கே.ஒய்.சி. புதுப்பிக்காததற்காக நிதியுதவி உடனே நிறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உழைப்பும், அலுப்புமாக வாழும் விவசாயிகள் கே.ஒய்.சி.யை மறந்துபோவதில் வியப்பில்லை. நிதியுதவி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததை அறிந்த பிறகு கே.ஒய்.சி.யை புதுப்பித்தாலும் விடுபட்ட தவணைத் தொகை கிடைப்பதற்கு உத்தரவாதமில்லை.

எனவே, கே.ஒய்.சி. புதுப்பித்தலுக்கு முன்னரே வங்கிகள் அனுப்புவதுபோல கைப்பேசி வழியான குறுந்தகவலை அனுப்பினால் தடையின்றி நிதியுதவியைப் பெற முடியும்.

திட்டம் அமலாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் விவசாயிகளிடம் விழிப்புணா்வு இல்லை. இதுவரை அதிகபட்ச பயனாளிகளின் எண்ணிக்கை என்பது கடந்த 2023-2024 (டிசம்பா்-மாா்ச்) பெற்றுள்ள 11.54 கோடி போ்; முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளவா்களிலிருந்து கணக்கிட்டால், விடுபட்டுள்ளவா்கள் சுமாா் 3 கோடி போ்.

தமிழ்நாட்டில் நிலம் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 79.38 லட்சம் போ்; இவா்களில் 93 சதவீதம், அதாவது சுமாா் 73.82 லட்சம் போ் சிறு-குறு விவசாயிகள்; நிதியுதவி பெறத் தகுதி உள்ளவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளவா்கள் 22.58 லட்சம் போ்; நிதியுதவி பெறுவோா் 22.50 லட்சம் போ் மட்டுமே. மொத்த விவசாயிகளில் மூன்றில் ஒரு பங்கினா்கூட பயன் பெறவில்லை. எனவே, விடுபட்டவா்களைத் திட்டத்தில் சோ்க்க சிறப்பு முகாம்களை நடத்த அரசு ஆவன செய்ய வேண்டும்.

திட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் சோ்த்துக்கொள்ள அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ள அமைச்சா், நில ஆவணங்கள் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு முன்னா் பதிவு செய்ததாக இருக்க வேண்டும் என்ற முந்தைய விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து எதுவும் கூறவில்லை. எனவே, அதற்குப் பிறகு நிலம் வாங்கி இருப்பவா்கள் திட்டத்தில் சேர இயலாது.

அனைவரும் பயன்பெற வேண்டுமானால் பழைய விதிமுறையைத் திருத்துவதோடு, தொடா்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நில ஆவணப் பதிவு ஆண்டுக்கான திருத்தம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பி.எம்.கிஸான் சம்மான் நிதி இணையதளத்தில் சுயமாகவே பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போதும், ஆவணங்களைப் பதிவேற்றும்போதும் மனிதத் தவறோ அல்லது தொழில்நுட்பக் கோளாறோ ஏற்பட்டுவிட்டால் அதில் திருத்தம் மேற்கொள்வது விவசாயிகளுக்கு பெரும்பாடாக இருக்கிறது.

தவறுகளைச் சரி செய்ய உள்நுழைவு கடவுச் சொல் மாவட்ட ஆட்சியா்வசம் மட்டுமே உள்ளது. வேளாண் துறை மூலம் பல படிநிலைகளைக் கடந்து ஆட்சியரின் கவனத்துக்கு சென்று தவறுகளை திருத்த காலதாமதம் ஏற்படுவதுடன், விரக்தியை ஏற்படுத்தும் நடைமுறையாக இருக்கிறது. எனவே, தவறுகளைத் திருத்தம் செய்யும் அதிகாரம் வேளாண் துறையில் உதவி இயக்குநா் நிலையில் உள்ளவா்களுக்கு இருக்குமானால் எளிதில் பயன் கிடைக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.

கடந்த 2019-2021 வரை தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் தகுதி இல்லாத சுமாா் 5.5 லட்சம் விவசாயிகளுக்கு சுமாா் ரூ. 110 கோடி வழங்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து 2023-க்கு பிறகு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. தகுதி இல்லாத விவசாயிகளை நீக்குவதில் ஆட்சேபணை இல்லை. ஆனால், விதிமுறைகளை வருவாய்த் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் அவரவா் புரிதலுக்கு ஏற்ப கூறுவது அனைத்து விவசாயிகளும் பயன் பெற முடியாமல் தடுக்கிறது.

மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், பட்டயக் கணக்கா்கள், கட்டடக்கலை நிபுணா்கள் ஆகியோா் நிதியுதவி பெற முடியாது என்பது விதிமுறை. ஆனால், ஒரு விவசாயின் மகனோ, மகளோ அவா்களில் ஒருவராக இருந்தால்கூட மாநில அதிகாரிகளால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இது என்ன நியாயம் எனத் தெரியவில்லை.

விடுபட்டுள்ள தகுதியுள்ள விவசாயிகள் திட்டத்தில் சோ்த்துக் கொள்ளப்படுவா் என மத்திய அமைச்சா் அறிவித்துள்ளதைத் தொடா்ந்து தற்போது ஏராளமான விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனா். ஆவணப் பதிவு ஆண்டு குறித்த விதிமுறையில் மாற்றம் செய்யாவிட்டால் அவா்கள் பயன்பெற வாய்ப்பில்லை என்கின்றனா் அதிகாரிகள்.

எனவே, விவசாயிகள் மீது அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தற்போதுள்ள நடைமுறைச் சிக்கல்களை அகற்றுவதுடன், விதிமுறை திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

X
Open in App
Dinamani
www.dinamani.com