புதிய தலைமை: பெரிய சவால்!

இழந்த செல்வாக்கை புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபியின் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி எப்படி மீட்டெடுக்கப் போகிறது?
எம். ஏ. பேபி
எம். ஏ. பேபி
Published on
Updated on
2 min read

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு புதிய பொதுச் செயலர் தேர்வு, தீர்மானங்கள் நிறைவேற்றம், பேரணி, பொதுக்கூட்டம் என வழக்கமான நடைமுறைகளுடன் முடிவடைந்திருக்கிறது. கட்சியின் புதிய பொதுச் செயலராக கேரளத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி என்றழைக்கப்படும் மரியம் அலெக்ஸாண்டர் பேபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பிரகாஷ் காரத்துக்குப் பிறகு, கேரளத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது தலைவர் பேபி. கேரளத்தில் செல்வாக்குப் பெற்ற மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்களான ஈ.கே.நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோருக்கு கிடைக்காத வாய்ப்பு பேபிக்கு கிடைத்துள்ளது.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தனது பள்ளிப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் மாணவர்கள் இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், கேரள கல்வி அமைச்சர், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் என படிப்படியாக முன்னேறி, தற்போது கட்சியின் பொதுச் செயலராக உயர்ந்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியில் முடிவெடுக்கும் உயர்நிலை அமைப்பான அரசியல் தலைமைக் குழுவுக்கு (பொலிட் பீரோ) தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் உ.வாசுகி அரசியல் தலைமைக் குழுவுக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் என்பதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான மறைந்த உமாநாத், பாப்பா உமாநாத்தின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு காரணமாக, கட்சியின் மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷிணி அலி ஆகிய மூவரும் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து விலகுவதாக இந்த மாநாட்டில் அறிவித்தனர். எனினும், அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தக் குழு கூட்டத்தில் பங்கேற்பர்.

5 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டில் ஒவ்வொரு நாளும் சில தீர்மானங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு, அவை நிறைவேற்றப்பட்டன.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழைகள் - செல்வந்தர்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது, பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நமது நாடு சுதந்திரமடைந்த பிறகு, ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சிதான் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்தது. 1964-இல் ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட பிறகும்கூட கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கியே இருந்தது.

மேற்கு வங்கத்தில் தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாமல், மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி. இந்த மாநிலத்தில் பாஜகதான் தற்போது முக்கிய எதிர்க்கட்சியாகத் திகழ்கிறது. இதேபோல, திரிபுராவிலும் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக வீழ்த்தியது. தற்போது திரிபுராவில் பாஜகதான் ஆட்சியில் உள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 20 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மேலும், தற்போது நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையிலும் சேர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்கத்துக்கு சுருங்கிவிட்டது. மக்களவை, மாநிலங்களவையில் அந்தக் கட்சிக்கு தலா 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

இன்றைய நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சியில் இருந்ததால் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் சலிப்பையும் மீறி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். இது எம்.ஏ. பேபி எதிர்கொள்ளும் உடனடி சவால்.

பொருளியல்வாதத்தின் அடிப்படையிலான சித்தாந்தத்தைக் கொண்ட மார்க்சிஸ்ட் இயக்கம், ஜாதிய கட்சிகளுடனும் மாநிலக் கட்சிகளுடனும் சில இடங்களில் மதவாதக் கட்சிகளுடனும் அவ்வப்போது ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பவாதக் கூட்டணிதான், இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்குச் சரிவுக்குக் காரணம். தனது இழந்த செல்வாக்கை புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபியின் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி எப்படி மீட்டெடுக்கப் போகிறது என்பதில்தான் அதன் வருங்காலம் இருக்கப் போகிறது.

ஏனைய இரண்டு தேசியக் கட்சிகளான காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி சந்தைப் பொருளாதாரத்தையும், உலகமயத்தையும் ஏற்றுக் கொள்ளும் வலதுசாரிக் கொள்கையைப் பின்பற்றும் நிலையில், இடதுசாரி மாற்றாகத் திகழும் வாய்ப்பு சோஷலிச சிந்தனையை முன்னெடுக்கும் இடதுசாரிகளுக்கு, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது.

ஏழைகள், உழைக்கும் தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதற்காக போராட்டக் களத்தில் முதலில் நிற்பது மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இத்தகைய கட்சி பலவீனப்பட்டுவிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com