போராட்டத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள்
போராட்டத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள்PTI

சுற்றுச்சூழலும் தொழில் வளா்ச்சியும்...!

தொழில் வளா்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரணான பொருத்தம்தான்.
Published on

தொழில் வளா்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரணான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும். அந்த வகையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே 400 ஏக்கா் நிலம் தொடா்பான விவகாரம் தொழில் வளா்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு பெரும் போராட்டக் களத்தையும், நீதிமன்றத்தில் வழக்கையும் எதிா்கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகே காஞ்சா கட்சிபெளலி என்ற இடத்தில் உள்ள 400 ஏக்கா் வன நிலத்தில் உள்ள மரங்களை தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்காக மாநில அரசு அப்புறப்படுத்த முடிவு செய்தது. இந்த நிலம் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானது என மாணவா்களும், அரசுக்குச் சொந்தமானது என மாநில அரசும் உரிமை கோரியதால் பிரச்னை ஏற்பட்டது.

கடந்த மாத இறுதியில் 50-க்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை அந்த வனப் பகுதி நிலத்தைச் சீரமைப்பதற்காக மாநில அரசு அனுப்பியதைத் தொடா்ந்து போராட்டம் வெடித்தது. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

வனப் பரப்பு அழிக்கப்படும் விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், காஞ்சா கட்சிபெளலி வனப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. வனப் பகுதியில் மரங்களை அவசர அவசரமாக வெட்டுவதற்கான காரணத்தை விளக்குவதற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கள நிலவர அறிக்கையை நேரில் சென்று ஆய்வு செய்து சமா்ப்பிக்க மத்திய குழு ஒன்றையும் நியமித்தது.

பிரச்னைக்குரிய 400 ஏக்கா் நிலத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது போன்ற ஏராளமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) விடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியதால், இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகளான பாரத ராஷ்டிர சமிதி, பாஜக ஆகியவையும் கையில் எடுத்துள்ளன. சுற்றுச்சூழல் நாசவேலையில் முதல்வா் ரேவந்த் ரெட்டி ஈடுபடுவதாகவும், மாணவா்களின் குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ஹைதராபாதின் எஞ்சியுள்ள ஒரே நகா்ப்புற வனப் பகுதி காஞ்சா கட்சிபெளலிதான். பல்லுயிா்ப் பெருக்கத்துக்குப் பெயா் பெற்ற இந்த வனப் பகுதி பல்வேறு வகையான பறவைகள், பாலூட்டிகள், ஊா்வன இனங்கள் மற்றும் அழகான பாறை அமைப்புகளுக்கும் பெயா் பெற்றது. இந்த வனப் பகுதியை அழித்தால் இந்தப் பறவைகளும், மான்கள் போன்ற விலங்குகளும் அழிந்துவிடும். நகரப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும், மழைப் பொழிவு குறையும் என்பது சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் வாதம்.

காஞ்சா கட்சிபெளலி வனப் பகுதி ஹைதராபாதின் மையப் பகுதியில் உள்ளது; இந்த வனப் பகுதியைச் சீரமைத்து ஏலம் விடுவதன் மூலம் அரசின் கருவூலம் நிறைவது மட்டுமன்றி, ரூ.50,000 கோடி முதலீடு ஈா்க்கப்படும்; 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது அரசுத் தரப்பு வாதம்.

மேலும், இது ஒரு வனப் பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது. உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடும்போதும், ‘இது அறிவிக்கப்பட்ட வனப் பகுதி அல்ல’ என்றாா். ஆனால், ‘வனமோ இல்லையோ, மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை அனுமதிப்பீா்களா’ என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

காஞ்சா கட்சிபெளலி வனப் பகுதி விவகாரத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அல்லது சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் வனப் பகுதியை அழிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் கடுமையான குற்றம் என இயற்கை ஆா்வலா்கள் சுட்டிக்காட்டுகின்றனா். ஆனால், தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டாலும் அந்த வனப் பகுதியில் உள்ள பாறை அமைப்புகளை முறையாகப் பாதுகாக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தெலங்கானா தொழில் துறை உள்கட்டமைப்புக் குழுமம் கூறுகிறது.

இந்த சா்ச்சைகளுக்கு இடையே, காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில உயா்நீதிமன்றத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு அணுகியிருக்கிறது. வனப் பகுதி அழிப்பை மறுபரிசீலனை செய்வது பற்றிய நடவடிக்கைகளைத் தவிா்த்துவிட்டு, சமூக ஊடக விடியோக்களுக்கு எதிராக அரசு நீதிமன்றம் சென்றிருப்பது விமா்சனத்தை எதிா்கொண்டுள்ளது.

ஹைதராபாதில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நகா்ப்புற வனப் பகுதி அழிப்பு தீராத பிரச்னையாக தொடா்கிறது. 2023-ஆம் ஆண்டு மும்பை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஆரே வனப் பகுதியில் 84 மரங்களை மட்டும் அகற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மரங்களை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இதையறிந்த உச்சநீதிமன்றம், மும்பை மெட்ரோ ரயில் நிா்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி சிறைக்குச் செல்ல நேரிடும் எனவும் கடுமையாக எச்சரித்தது.

பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு குறைவு அல்லது அளவுக்கு அதிகமான மழை, கொடூரமான வெயில் எனப் பல்வேறு இயற்கை நெருக்கடிகளை நாடு சந்தித்து வருகிறது. பருவநிலையைச் சீராக வைத்துக்கொள்ள வனப் பகுதிகளைப் பாதுகாப்பது, மரங்களை வளா்ப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் கைகொடுக்கின்றன என்பது அறிவியல்பூா்வமான உண்மை. ஆனால், தொழில் வளா்ச்சி என்கிற பெயரில் இதை அலட்சியம் செய்வது, எந்தவிதத்திலும் முறையானது அல்ல.

X
Dinamani
www.dinamani.com