

தமிழகத்தில் சுமார் 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்றதுமுதல் தற்போது வரை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மொத்தம் 1.69 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக 3 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புகளுக்காக காத்திருந்த நிலையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இலவச மின் இணைப்புக்காக மின் வாரியத்தில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள், விளைநிலங்களில் பாசன வசதிக்காக சூரிய ஒளி மின்சார அமைப்பை நிறுவி மோட்டார் பம்ப்செட்டுகளை இயக்கி வருகின்றனர். இதைத் தங்கள் சொந்த செலவிலும், அரசின் மானிய உதவியுடனும் நிறுவியுள்ளனர். மேலும் பல விவசாயிகள் டீசலில் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகள் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். பதிவு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின் பகிர்மானக் கழக இயக்குநரின் பெயரில் மின் வாரிய கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில், விவசாய நிலங்களில் நீர்ப்பாசனத்துக்காக சூரிய ஒளி மின்சார அமைப்பை சொந்தச் செலவிலோ, அரசு மானியத்திலோ நிறுவியுள்ள விவசாயிகள், விவசாயம் சார்ந்த பணிகளுக்காக தாழ்வழுத்த இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தாலோ, புதிதாக விண்ணப்பித்தாலோ அவற்றை நிராகரித்து விடலாம் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சூரிய ஒளி மின் அமைப்புடன் மின்சார இணைப்பும் வேண்டும் எனக் கோரும் விவசாயிகளுக்கு, குறு, சிறு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தாழ்வழுத்த மின் இணைப்பை 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.4.80, 500 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.6.95 என்ற கட்டண விகிதத்தில் வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தக் கட்டண மின் இணைப்பைப் பெறும் விவசாயி, எதிர்காலத்தில் இலவச மின் இணைப்பு சேவையைப் பெற மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்தக் குறிப்பாணை மூன்று வெவ்வேறு அம்சங்களில் முற்றிலும் தவறானது.
மின்சாரச் சட்டம் 2003, பிரிவு 43-இன் படி விவசாயத்துக்காக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை நிராகரிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்துக்கு அதிகாரம் இல்லை. விவசாயத்துக்காக மின்சாரம் வழங்குவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்யலாம். ஆனால், முற்றிலும் மறுக்க முடியாது.
மின் பகிர்மானக் கழகத்திடம் இருந்து இலவச மின்சார இணைப்பு பெறுவதற்காக பல ஆண்டுகளாக விவசாயி காத்திருக்கும் நிலையில், தனது விளைநிலத்தில் சாகுபடி செய்யாமல் இருக்க முடியாது. அதுவரை சூரிய ஒளி மின்சார பம்ப்செட் அல்லது டீசல் என்ஜின் மோட்டார் பம்ப்செட்டுகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெற்று வேளாண் பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அதனால், இந்த சுற்றறிக்கை விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது.
குறு, சிறு தொழில்களுக்கான கட்டண முறையில் மின் இணைப்பு பெற்ற விவசாயி, இலவச மின்சாரத்துக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு கிடைக்கும்போது, கட்டண மின் இணைப்பை ரத்து செய்துகொள்ளும் வாய்ப்பு விவசாயிக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முடிவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி மின் பகிர்மானக் கழகத்தால் தன்னிச்சையாக எடுக்க முடியாது.
விவசாய இலவச மின் இணைப்பு தொடர்பான சுற்றறிக்கை விவசாயிகளிடையே சமத்துவமின்மையை உருவாக்கும் விதமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவருமான பி.சண்முகம் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் தமிழக அரசின் கொள்கைக்கு மாறாக இந்த உத்தரவு அமையும். இது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருக்கிறார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் 1989-90ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டதுதான் விவசாய இலவச மின் இணைப்புத் திட்டம். இந்தத் திட்டத்துக்காக நிகழாண்டு தமிழக வேளாண் பட்ஜெட்டில் மின் பகிர்மான கழகத்துக்கு செலுத்துவதற்காக ரூ.7,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதன்மூலம் ஆண்டுக்கு ஒரு மின் இணைப்புக்கு ரூ.30,000 வீதம் அரசுக்கு செலவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இலவச மின்சாரத் திட்டத்தை பெரு விவசாயிகளில் சிலர், முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழாமலும் இல்லை. அதிக திறன் கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும் புகார்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து அந்த இணைப்புகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்துக்கு இதுவிஷயத்தில் தமிழக அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.