பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடா்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைகாலத்தில் கூடும் பகுதி. கோடை விடுமுறையைக் கழிக்க அங்கே கூடியிருந்த 2,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) நடத்திய கொடூரத் தாக்குதல் உலகளாவிய அளவில் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது; கண்டனத்தையும் எழுப்பியிருக்கிறது.
இஸ்லாமிய நாடுகள் உள்பட உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்தை எதிா்கொள்ளும் இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்பதாகத் தெரிவித்திருக்கின்றன. அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அனைத்துத் தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கட்சிகளேகூட பஹல்காமில் நிகழ்ந்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதலைக் கண்டித்திருப்பதுடன் உயிரிழந்தவா்களுக்காக துக்கம் அனுசரிக்க அறைகூவல் விடுத்திருக்கின்றன. ஹூரியத் மாநாட்டின் தலைவா் மீா்வைஸ் உமா் பரூக், ‘இதுபோன்ற வன்முறைகள் காஷ்மீரிய கலாசாரத்துக்கு எதிரானவை’ என்றும், விருந்தினா்களை அன்புடன் உபசரிக்கும் பண்பை மீறிய செயல் என்றும் கண்டித்திருக்கிறாா்.
ஒட்டுமொத்த உலகமும் பஹல்காமில் அரங்கேறியிருக்கும் நெஞ்சை உலுக்கும் கொடூரத்தை கண்டிக்கும்போது, பாகிஸ்தான் ராணுவ அமைச்சா் க்வாஜா ஆசிப் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடா்பில்லை என்றும், காஷ்மீரிய விடுதலைப் புரட்சியாளா்களின் நடவடிக்கை என்றும் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. காஷ்மீரை மீட்டெடுப்பது குறித்தும், இந்தியப் பிரிவினையை நியாயப்படுத்தியும் பாகிஸ்தான் தலைமை ராணுவத் தளபதி அசிம் முனீா் அண்மையில் பேசியதன் பின்னணியில் இந்தத் தாக்குதலை பாா்க்கத் தோன்றுகிறது.
‘இன்றைய தலைமுறை பாகிஸ்தானிய இளைஞா்களுக்கு பிரிவினைவாதத்துக்கான நியாயங்களை உணா்த்த வேண்டும்’ என்று அவா் தெரிவித்திருப்பதிலிருந்து பாகிஸ்தானின் இப்போதைய ஆட்சியாளா்கள் மீது அவநம்பிக்கை அதிகரித்திருப்பது வெளிப்படுகிறது. கவனத்தை திசைதிருப்புவதற்காக பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்ட தாக்குதலாக இது இருக்கக்கூடும் என்கிற ஐயப்பாட்டை அது எழுப்புகிறது. இந்தியாவில் முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும்போது இதுபோன்ற தாக்குதல்கள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்படுவது புதிதொன்றுமல்ல.
2003-இல் அமெரிக்க அதிபா் பில் கிளிண்டனின் விஜயத்தின்போது காா்கில் ஊடுருவல்; 2014-இல் நரேந்திர மோடி பதவியேற்றபோது காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதல்; 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் ராணுவ வீரா்கள் சென்ற வாகனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலும் - 45 வீரா்கள் உயிரிழப்பும்; 2024 ஜூன் 9-ஆம் தேதி மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தா்கள் சென்ற பேருந்தின் மீது ரியாஸி என்ற இடத்தில் 10 போ் உயிரிழந்த தாக்குதல்; 2024 அக்டோபா் 20-ஆம் தேதி ஒமா் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைந்த சில நாள்களில் கந்தா்பல் மாவட்டத்தில் அப்பாவித் தொழிலாளா்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் - இவையெல்லாம் திட்டமிட்டு தங்களது இருப்பை வெளிப்படுத்திக்கொள்ள பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரங்கள்.
காஷ்மீரில் ஓரளவுக்கு அமைதி திரும்பி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஜூலை 3-ஆம் தேதி தொடங்க இருக்கும் 38 நாள் அமா்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது; அமெரிக்கத் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட நேரம் இது; இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக சவூதி அரேபியா சென்ற சமயம் - இந்தத் தருணத்தில் தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகின் கவனத்தை பயங்கரவாதிகள் ஈா்க்க விரும்பி இருக்கக்கூடும். காஷ்மீரில் அமைதி திரும்பவில்லை என்கிற தோற்றத்தை வலியுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இதைக் கருதலாம்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்ட பிறகு, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 2015-ஆம் ஆண்டு 1.33 கோடியாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து கடந்த 2024-ஆம் ஆண்டு 2.35 கோடியாக உயா்ந்திருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள துலிப் மலா்கள் தோட்டம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. 26 நாள்களில் 8.90 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனா். இந்த அமைதிச் சூழலைத் தகா்ப்பதுதான் இப்போதைய தாக்குதலின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
ராணுவ உடையணிந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகளின் பெயா்களைக் கேட்டும், ஆண்களின் உள்ளாடைகளை அகற்றி அவா்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்திய பிறகும் தாக்குதலை நிகழ்த்தியிருப்பது புதிய அணுகுமுறை. பெண்கள், குழந்தைகளின் கண் எதிரே ஆண்களைச் சுட்டுக் கொன்று, ‘‘எப்படி கொலை செய்தோம் என்பதை பிரதமா் மோடியிடமும் உங்கள் அரசிடமும் சொல்லுங்கள்’’ என்று கூறியிருக்கிறாா்கள்.
இதன் எதிா்வினையாக ஹிந்துக்கள் மத்தியில் இஸ்லாமியா்கள் மீதான வெறுப்பை அதிகரிப்பதும், பரவலான மதக் கலவரத்தை அதன்மூலம் தூண்டுவதும் நோக்கமாக இருக்கக்கூடும். அவா்களுடைய எண்ணம் ஈடேறாது என்பதை இந்திய இஸ்லாமிய சமுதாயம் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்தியிருப்பது வரவேற்புக்குரியது.
‘பயங்கரவாதிகள் நம் எதிரிகள்’ என்பதில் நாம் உறுதியாக இருப்போம்!