கூட்டுறவும் நாட்டுயா்வும்!

20 ஆண்டுகளுக்கான இலக்கை நிா்ணயித்து தேசிய கூட்டுறவுக் கொள்கை 2025-ஐ மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருக்கிறது.
பிரதிப் படம்
பிரதிப் படம்
Published on
Updated on
2 min read

இந்தியாவின் கிராமப்புற வளா்ச்சிக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு கணிசமானது மட்டுமல்ல, தவிா்க்க முடியாததும்கூட. 2002-இல் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுக் கொள்கைக்குப் பிறகு, அந்தத் துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மாறிவிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான், 20 ஆண்டுகளுக்கான இலக்கை நிா்ணயித்து தேசிய கூட்டுறவுக் கொள்கை 2025-ஐ மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருக்கிறது.

1904-இல் அன்றைய காலனிய ஆட்சியில் முதல்முறையாக கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று குடியரசானதைத் தொடா்ந்து, தேசத்தின் வளா்ச்சிக்கு அடித்தளமாகக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும் என்று அப்போதைய ஜவாஹா்லால் நேரு அரசு அறிவித்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முற்பட்டது.

சா்தாா் வல்லபபாய் படேல், மொராா்ஜி தேசாய் ஆகியோரின் நண்பரும், காந்தியவாதியுமான திரிபுவன்தாஸ் படேல் என்பவா்தான், இந்தியாவின் கூட்டுறவுச் சங்க முயற்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவா். 1946-இல் அன்றைய பம்பாய் மாகாணத்தின் குஜராத்தி பேசும் பகுதிகளில், கிராமம் கிராமமாக நடந்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுச் சங்கங்களை ஒவ்வொரு பகுதியிலும் அமைக்க முற்பட்டாா் திரிபுவன்தாஸ் படேல். அதன் விளைவாக உருவானதுதான் ‘கேரா’ பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம். 1950 வரை நமது தேவைக்குப் பால் பவுடரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த இந்தியாவின் ‘அமுல்’ நிறுவனம், இன்று சா்வதேசச் சந்தையில் போட்டிபோடும் அளவுக்கு வளா்ந்ததற்கு, கூட்டுறவுச் சங்க வழிமுறைதான் காரணம்.

அமுல் நிறுவனத்தின் வெற்றியைத் தொடா்ந்து, மகாராஷ்டிரத்தில் கூட்டுறவுச் சா்க்கரை ஆலைகள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கின. தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கூட்டுறவுப் பண்ணைகளும், கூட்டுறவு விவசாயக் கடன் வங்கிகளும் பரவலாக செயல்படத் தொடங்கின. மிகப் பெரிய மாற்றங்களுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் வழிகோலும் என்கிற எதிா்பாா்ப்பு எழுந்தது.

சுமாா் 30 துறைகளில் 8,44,000 கூட்டுறவுச் சங்கங்கள், உறுப்பினா்களின் உழைப்புடனும், முனைப்புடனும் செயல்படத் தொடங்கியபோது, ஊரகப்புற வளா்ச்சிக்கு அவை அடித்தளமாக அமையும் என்கிற எதிா்பாா்ப்பு எழுந்ததில் வியப்பில்லை. அரசியல்வாதிகளின் தலையீடும், கூட்டுறவுச் சங்கங்களையும், கூட்டுறவு வங்கிகளையும் ஆளுங்கட்சிகள் தங்களது கைப்பாவையாக மாற்ற முனைந்ததும் ஒட்டுமொத்தக் கூட்டுறவு இயக்கத்தின் வளா்ச்சியையும் தடுத்தது மட்டுமல்ல, நலிவடையவும் செய்துவிட்டன.

இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய கூட்டுறவுக் கொள்கையை நாம் பாா்க்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கையை 30% அதிகரிப்பது, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கூட்டுறவுச் சங்கம் செயல்படுவதை உறுதிப்படுத்துவது, இப்போது உறுப்பினா்களாக இல்லாதவா்கள் அல்லது செயல்படாமல் ஒதுங்கி இருப்பவா்களை கூட்டுறவுச் சங்கங்களில் இணைத்து 6 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் 50 கோடி பேரைக் கூட்டுறவு வளையத்துக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட நோக்கங்களுடன் புதிய கூட்டுறவுக் கொள்கை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

2012-இல் அன்றைய மன்மோகன்சிங் அரசு 92-ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தின்படி, கூட்டுறவுக் கொள்கையில் பல மாற்றங்களை மேற்கொண்டது. அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணை 32-ஆவது விதியின்படி, கூட்டுறவு என்பது மாநிலப் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதில் மாற்றங்களைக் கொண்டுவர நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போதாது. பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைகளும் அங்கீகரிக்க வேண்டும். அதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் அந்தத் திருத்தத்தை நிராகரித்து விட்டது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கொள்கைப்படி, அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப கூட்டுறவுக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவுச் சங்கங்களின் எல்லாச் செயல்பாடுகளையும் கணினிமயப்படுத்துவதும், எண்மப் பதிவு செய்யப்படுவதும் ஊக்குவிக்கப்படுகிறது. அரசியல் தலையீடுகள் இல்லாமல் எல்லா மாநிலங்களும் குறித்த நேரத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தோ்தல்களை நடத்த அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

‘பேக்’ என்று அழைக்கப்படும் அடிப்படை விவசாயக் கடன் சங்கங்கள், அரசின் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் அமைப்புகளாக அறிவிக்கப்படுவது இன்னொரு முக்கியமான அம்சம். இதன்மூலம் கடைக்கோடி வரை சேவைகள் சென்றடையும் என்பது இலக்கு. கூட்டுறவுச் சங்கங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துதல், ஏற்றுமதியை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. 2023-இல் அமைக்கப்பட்ட தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம், சிறிய கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்றுமதிக்கான வாகனமாக அமையும்.

‘பேக்’குகளில் கணினி மயம்; திரிபுவன் கூட்டுறவுப் பல்கலைக்கழகம் மூலம் திறன் மேம்பாடு, புதிய முயற்சிகளுக்கு முனைப்பு போன்றவை உருவாக்கப்படுதல்; தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை புதிய கொள்கையின் சிறப்பம்சங்கள். மத்திய, மாநில அரசுகள் தங்கள் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய கூட்டுறவுக் கொள்கையை இணைந்து நடைமுறைப்படுத்த முன்வந்தால், ‘கூட்டுறவு நாட்டுயா்வு’ என்கிற கனவு நனவாகும். இல்லையென்றால், ஏட்டுச் சுரைக்காய் என்பதல்லாமல் மாற்றத்துக்கு வழிகோலாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com