அமைத்தால் மட்டுமே போதாது!

தஞ்சாவூரில் உள்ள ராஜராஜ சோழனின் சிலை
தஞ்சாவூரில் உள்ள ராஜராஜ சோழனின் சிலைகோப்புப்படம்.
Published on
Updated on
2 min read

கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், அவரது தந்தை ராஜராஜ சோழனுக்கும் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்கு முன்னால், தஞ்சாவூரில் மாமன்னர்களான தந்தை, மகன் ஆகிய இருவரின் நினைவைப் போற்றும் வகையில் சுமார் ரூ. 55 கோடி செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதுடன், அங்கு ராஜராஜ சோழனுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது வியப்பொன்றுமில்லை. அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருவதை தலைவர்களின் அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

சோழப் பேரரசின் ஆட்சி 9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்து நிலைத்திருந்தது. உலகிலேயே மிகப் பெரிய கடற்படையை வைத்திருந்தவர்கள் சோழர்கள். அதுமட்டுமல்லாமல், இலங்கையில் தொடங்கி கிழக்காசியாவில் இந்தோனேஷியா, லாவோஸ், கம்போடியா என்று பரந்து விரிந்திருந்தது சோழப் பேரரசின் ஆதிக்கம். எகிப்து, கிரீஸ் உள்ளிட்ட மத்திய ஆசிய, ஐரோப்பிய நாடுகளுடன் அவர்களுக்கு வர்த்தகத் தொடர்பும் இருந்தது.

மெüரியர்கள், குப்தர்களுக்குப் பிறகு சாம்ராஜ்யம் அமைத்த பெருமை சோழர்களுக்குத்தான் உண்டு. கலிங்கத்தில் தொடங்கி ஒட்டுமொத்த தக்காண பீடபூமியும் சோழ மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கு அடையாளமாக ஆங்காங்கே காணப்படும் கோயில்களின் சிற்பங்களும், கட்டட வடிவமைப்புகளும் திகழ்கின்றன.

பிரிட்டிஷ் காலனிஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவின் வரலாறு ஆங்கிலேயர்களால் முறையாகப் பதிவு செய்யப்பட்டது. இந்தியர்களான மாமன்னர்களின் வரலாறுகள் குறைத்து மதிப்பிடப்பட்டு இஸ்லாமியப் படையெடுப்புக்குப் பிறகான வரலாறுகளும், பிரிட்டிஷார் தங்களது காலனியை நிறுவிய வரலாறும் முதன்மைப்படுத்தப்பட்டன. தென்னிந்தியாவின் வரலாறு, குறிப்பாக மூவேந்தர்கள் வரலாறு, இருட்டடிப்பு செய்யப்பட்டது. சோழ சாம்ராஜ்யத்தின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டு, முகலாயர் ஆட்சி முக்கியத்துவம் பெற்றது.

தமிழகத் தேர்தலில் ஜாதியும், மதமும் கோலோச்சுவது ஒன்றும் புதிதல்ல; கட்சிகளின் வேட்பாளர் தேர்வுகூட அதைச் சார்ந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். சோழ மன்னர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், அண்மைக்காலமாக கள்ளர், மறவர், வன்னியர், பட்டியலினத்தவர் எனப் பலரும் சோழர்களை தத்தமது ஜாதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, உரிமை கொண்டாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

20-ஆம் நூற்றாண்டு வரை சோழப் பேரரசின் பெருமை பொதுவெளியில் அவ்வளவாக பேசப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். குறிப்பிட்ட சில அமைப்புகளால் மட்டும் சோழ அரசர்கள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு கடந்த 2022-இல் மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவை அரசு விழாவாக அறிவித்து பிரம்மாண்டமாகக் கொண்டாடியது.

சோழ மண்டலம் என்பது இன்றைய திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி எனக் கொள்ளலாம். இந்த மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் சமுதாயத்தினர்தான் சோழ அரசர்களை சொந்தம் கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மொத்த சட்டப்பேரவைத் தொகுதிகள் 234-இல் ஆறில் ஒரு பங்கு இந்த மாவட்டங்களில் உள்ளன. அவற்றில் வெற்றியைக் குறிவைத்து சோழ அரசர்களை முன்னிலைப்படுத்தி காய்கள் நகர்த்தப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இந்த முறை திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 63 சிலைகளும், 11 மணிமண்டபங்கள் மற்றும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 28 சிலைகள் மற்றும் 12 அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக் காலமான 10 ஆண்டுகளில் 25 பேருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் சுதந்திரத்துக்கும், வளர்ச்சிக்கும், சமுதாய மேம்பாட்டுக்கும் உழைத்த தியாகிகள் மற்றும் தலைவர்களுக்கு சிலைகளையும், மணிமண்டபங்களையும், நினைவிடங்களையும் மத்திய, மாநில அரசுகள் அமைப்பதில் தவறில்லை. ஆனால், சிலைகளும், மணிமண்டபங்களும் தியாகிகள் மற்றும் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் மட்டுமே மாலை மரியாதைகள் பெறுகின்றன. அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. மற்ற நாள்களில் அவை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. சில தலைவர்களின் சிலைகள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதையும் காண முடியும்.

சில மணிமண்டபங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடப்பது மட்டுமன்றி புதர்கள் மண்டிக் காட்சி அளிக்கின்றன. சிலைகளையும், மணிமண்டபங்களையும் அமைக்கும் அரசுகள் தலைவர்களின் மதிப்பையும், மரியாதையையும் போற்றும் வகையில் அவற்றை முறையாகப் பராமரித்து பாதுகாத்தால்தான் அவை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும். சுற்றுலா முக்கியத்துவம் பெறும் வகையில் வரலாற்று சிறப்புடைய இடங்களாக அவை மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com