அறிதிறன்பேசிகளின் வருகை, இணையப் பயன்பாடு போன்றவற்றால் எண்மப் பரிமாற்றம் அசுர வளர்ச்சி பெற்றது. பெரிய வணிக நிறுவனங்கள் தொடங்கி சிறு வணிகர்கள் வரை யுபிஐ அடிப்படையிலான எண்மப் பரிமாற்றத்துக்கு மாறினர். நாடு முழுவதும் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் 54% பேர் எண்மப் பரிமாற்றத்தை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்தி வருகின்றனர். சில்லறை வணிகத்தில் வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இந்தப் பரிமாற்றம் பல்வேறு வகைகளிலும் எளிமையாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகிறது.
எண்மப் பரிமாற்றம் நுகர்வோருக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகவே அமையும். அதே நேரத்தில், முறையாக வரி வசூலையும் உறுதிப்படுத்துகிறது என்பதுதான் அதன் தனித்துவம். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தரப்பட்டுள்ள விதிமுறைகளின்படிதான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனும்போது, அதை சில வணிகர்கள் எதிர்ப்பதும், அதற்காக யுபிஐ பரிமாற்றம் கிடையாது என்று கூறுவதும் சரியான அணுகுமுறை அல்ல.
வங்கிப் பரிமாற்றத்தின் அடிப்படையில் நடவடிக்கை கூடாது என்பதும், வரி ஏய்ப்பில் ஈடுபடுவோம் என்பதும் ஏற்புடைய வாதமல்ல. சிறு வணிகர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நிதியமைச்சகம் ஏற்கெனவே அறிவுறுத்திஇருக்கிறது.
உலகிலேயே மிக அதிகமாக எண்மப் பரிமாற்றம் மேற்கொள்ளும் நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய வளர்ச்சி. கடந்த மாதத்தில் மட்டும் ரூ.24 லட்சம் கோடி மதிப்பிலான 1,840 கோடி எண்மப் பரிமாற்றங்கள் இந்தியாவில் நடைபெற்றிருக்கின்றன.
இந்த எண்மப் புரட்சி திடீரென்று ஏற்பட்டு விடவில்லை. 2014-இல் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து,\மானியங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்துவது என்று முடிவெடுத்தது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற "ஜன்தன்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அடித்தட்டு மக்களுக்காக குறைந்தபட்ச வைப்பு இல்லாத சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. அதிலிருந்துதான் தொடங்கியது இந்தியாவின் எண்மப் பரிமாற்றப் புரட்சி.
2019 வரையில் ரூ.2,000 வரையிலான எண்மப் பரிமாற்றத்துக்கு 0.25% என்றும் அதற்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு 0.65% எனவும் வங்கிகள் கட்டணம் வசூலித்தன. மிகச் சொற்பக் கட்டணம்தான் என்றாலும், சிறு வியாபாரிகள் அன்றாடம் விற்று வரவு செய்யும்போது, கணிசமான இழப்பு ஏற்பட்டு வந்தது. அவர்கள் யுபிஐ பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 2019-இல் அந்தக் கட்டணம் முற்றிலுமாக அகற்றப்பட்டபோது, எண்மப் பணப் பரிமாற்றம், அடுத்த ஐந்தாண்டுகளில் 14 மடங்குஅதிகரித்திருக்கிறது.
யுபிஐ பரிமாற்றங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சில வங்கிகளால் அவ்வப்போது எழுப்பப்படாமல் இல்லை. அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநரேகூட அப்படியொரு கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த மாதம் யுபிஐ பரிமாற்றத்துக்கு எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது என்று நிதியமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது மிகப் பெரிய ஆறுதல். ஒவ்வொரு யுபிஐ பரிமாற்றத்திலும் அதற்கான தொலைத் தொடர்புக் கட்டமைப்பைப் பராமரிப்பதில் வங்கிகளுக்கு செலவாகிறது என்றும் சில்லறை விற்பனைப் பரிமாற்றங்கள் எனும்போது அதற்கு ஏற்படும் சுமை அதிகம் என்பதும் வங்கிகளின் வாதம். ரூ.2,000-க்கும் குறைவான யுபிஐ பரிமாற்றத்துக்கு அரசு 0.15% இழப்பீடு வழங்குகிறது என்பதை வங்கிகள் மறந்து விடுகின்றன.
கட்டணம் வசூலிக்கப்பட்டபோது யுபிஐ பரிமாற்றத்தை வழங்கிய வங்கிகளின் எண்ணிக்கை 143 என்றால், இப்போது அதுவே 675-ஆக அதிகரித்திருக்கிறது. யுபிஐ பரிமாற்றம் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றால், ஏன் வங்கிகள் போட்டிப்போட்டுக் கொண்டு எண்மப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கின்றனஎன்கிற கேள்வி எழுகிறது.
மிகப் பெரிய அளவில் இதனால் வங்கிகளின் பணம் புரள்கிறது என்பது மட்டுமல்லாமல், இதன்மூலம் காப்பீடு, கடன் வசதி என்று லாபம் ஈட்டப் பல வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.யுபிஐ பரிமாற்றத்துக்காக வங்கிகள் தொலைத்தொடர்பு, தொழில்நுட்பக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியதாகிறது என்பது சரியல்ல. இந்தப் பரிமாற்றம் இல்லாவிட்டாலும் அந்தக் கட்டமைப்புகள் வங்கிகளுக்குத் தேவை என்பதுதான் நிஜம்.
எண்மப் பணப் பரிமாற்றத்தின் வெற்றி கணிசமானது என்பதில் ஐயப்பாடில்லை. அதன் காரணமாக சைபர் குற்றங்கள்அதிகரித்திருப்பதை மறுப்பதற்கில்லை. வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருப்பதுதான் அதைத் தடுக்கும் கவசமாக இருக்க முடியும்.
ரொக்கப் பரிமாற்றம் வரி ஏய்ப்புக்கும், ஊழலுக்கும் வழிகோலும். அது பொருளாதாரத்துக்கும், நல்லாட்சிக்கும், ஊழலற்ற நிர்வாகத்துக்கும் எதிரானதும்கூட. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் அளவுரூ.37 லட்சம் கோடி. ஆண்டுதோறும் பணம் அச்சடிப்பதற்காக நாம் ரூ.6,373 கோடி செலவழிக்கிறோம்.
கட்டணம் இல்லாத யுபிஐ பரிமாற்றங்கள் அதிகரிப்பதும், ரொக்கப் பரிமாற்றம் படிப்படியாகக் குறைவதும்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.