என்ன செய்யப் போகிறோம்...?

சிங்க எண்ணிக்கை கணக்கெடுப்பு அறிக்கை குறித்த தலையங்கம்....
சிங்கம் (கோப்புப் படம்)
சிங்கம் (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

குஜராத் மாநிலத்தில் உள்ள பர்டா வனவிலங்கு சரணாலயத்தில் அண்மையில் (ஆக.10) நடைபெற்ற உலக சிங்க விழிப்புணர்வு தினத்தில் 16-ஆவது சிங்க எண்ணிக்கை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 674-இல் இருந்து 891-ஆக, அதாவது 32.2% அதிகரித்துள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. அதன்படி, நாட்டில் தற்போது 196 ஆண், 330 பெண், 365 குட்டிகள் என மொத்தம் 891 சிங்கங்கள் உள்ளன.

கடந்த 2020-இல் 159 ஆண், 262 பெண், 253 குட்டிகள் என மொத்தம் 674 சிங்கங்கள் இருந்தன. கடந்த 1990-இல் 285 சிங்கங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 70% அதிகரித்துள்ளது.

சிங்கக் கூட்டத்தின் பாலின சமத்துவத்துக்கு நெருக்கமாக ஓர் ஆண் சிங்கத்துக்கு 2 பெண் சிங்கங்கள் என்ற விகிதத்தில் மட்டுமல்லாது 365 குட்டிகளும் இருப்பது எதிர்காலத்தில் அவற்றின் பாதுகாப்பான இனப்பெருக்கச் சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

உலகில் தற்போது உயிருடன் இருக்கும் இரண்டு வகை சிங்க இனங்களில் ஒன்றான ஆசிய சிங்கம், குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவான கிர் காடுகளில் மட்டுமே உள்ளன. மற்றொரு இனமான ஆப்பிரிக்க சிங்கம், இந்தியாவில் தற்போது இல்லை. கடந்த 2020 ஆகஸ்ட்15-இல் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி காட்டு ராஜாவான ஆசிய சிங்கங்களைப் பாதுகாக்க ரூ.2,927.71 கோடியில் 10 ஆண்டுகளுக்கான நீண்டகால திட்டத்தை அறிவித்தார். அதன் பயன் இப்போது தெரியத் தொடங்கியிருக்கிறது.

சிங்கங்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, கிர் காடுகளில் உள்ள சிங்கங்களில் 384 மட்டுமே அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கின்றன. எஞ்சிய 507 சிங்கங்கள் காடுகள் அல்லாத இடங்களில் அதாவது குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள், மேய்ச்சல் வெளிகள் போன்றவற்றில் வசிப்பது ஆபத்தான ஒன்று. எனவேதான், மனிதன்-விலங்கு மோதல் அடிக்கடி நிகழ்கிறது.

காடுகளின் வளம் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமானால் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம். அதற்கு மிகப் பெரிய மாமிச உண்ணிகளில் ஒன்றான சிங்கங்களைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயம். அதேவேளையில், அதிகரிக்கும் சிங்கங்களின் எண்ணிக்கையால் ஏற்படும் அபாயத்தை எண்ணும்போது அச்சம் மேலோங்கவே செய்கிறது.

விவசாய நிலங்களில் வசிக்கும் சிங்கங்கள் அங்குள்ள திறந்தவெளி கிணறுகளில் விழுதல், சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபடுதல், வயல்வெளி மின்சார கம்பிகளில் சிக்குதல், மனித வாழ்விட சகவாசத்தால் தொற்றுநோய் தாக்குதல் போன்றவற்றுக்கு இலக்காகி இறக்கும் நிகழ்வுகளை அடிக்கடி பிரதான ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் காண முடிகிறது.

குஜராத்தில் சிங்கங்கள் நடமாடும் கிராமங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 சதவீதமும், அவை வேட்டையாடும் ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளின் எண்ணிக்கை 15 சதவீதமும் அதிகரிப்பதாக ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அழிந்துவரும் சிங்க இனங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளில் சிங்கங்களால் வேட்டையாடப்படும் வளர்ப்புப் பிராணிகளுக்கு சந்தை மதிப்பில் மாநில அரசு இழப்பீடு வழங்குகிறது. அதுமட்டுமின்றி இழப்பீட்டுத் தொகையை அவ்வப்போது உயர்த்தியும் வருகிறது என்றாலும், வசிப்பிடங்களுக்கு அருகிலேயே ஆபத்தான விலங்கு ஒன்று வசிப்பதை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்?

கிர் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள ஆசிய சிங்கங்களின் "இரண்டாவது வீடு' என்று அழைக்கப்படும் 192.31 ச.கி.மீ. பரப்பளவு உள்ள பர்டா வன விலங்கு சரணாலயத்தில் மட்டும் 17 சிங்கங்கள் வசிப்பதாக அறிக்கை கூறுகிறது. அப்படியானால் அவற்றுக்குத் தேவையான பாதுகாப்பான வசிப்பிடம் மற்றும் உணவு கிடைக்குமா என நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கடந்த 2013-இல் உச்சநீதிமன்றமானது கிர் காடுகளில் உள்ள சிங்கங்கள் சிலவற்றை அருகில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனு தேசிய பூங்காவுக்கு 6 மாதங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், ஆண்டுகள் 12 ஆகியும் இன்னும் நடைபெறவில்லை. ஒரு காலத்தில் துருக்கி முதல் இந்தியா வரை பரவலாக காணப்பட்ட ஆசிய சிங்கங்களை, இப்போது உலகில் உள்ள யாராவது பார்க்க விரும்பினால் அவர்கள் குஜராத்துக்குத்தான் வரவேண்டும் என பெருமை பாராட்டிக் கொள்ளும் அந்த மாநில அரசு, சிங்கங்களை அவ்வளவு எளிதில் இடமாற்றம் செய்து கொடுத்து பெருமையைப் பங்கிட்டுக் கொள்ளாது.

வளர்ச்சி என்ற பெயரில் வனங்கள் அழிக்கப்படுவதாலும், வளங்கள் சூறையாடப்படுவதாலும் மனிதன்-விலங்குகளுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வன உயிரினங்கள் அழிவது ஒருபுறம்; அரசின் பாதுகாப்புத் திட்டத்தால் அதிகரித்துவரும் சிங்கங்களின் எண்ணிக்கையால் மனித வாழ்விடத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் மறுபுறம்; பல்லுயிர் பெருக்கத்தையும் சூழலியலையும் பாதுகாக்க வேண்டியது இன்னொரு புறம். புதிதாக சில சிங்கங்களின் சரணாலயங்களை பிற மாநிலங்களில் அமைப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com