
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் "முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.
70 வயதுக்கும் மேற்பட்ட 20.42 லட்சம் பேர், மாற்றுத்திறனாளிகள் 1.27 லட்சம் பேர் என மொத்தம் 21.70 லட்சம் பேர் பயன் பெறவுள்ள இத்திட்டம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிக்கும்.
தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில், 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 15 லட்சத்து 81,364 குடும்ப அட்டைகளில் உள்ள மூத்த குடிமக்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாகக் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு அவர்களின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
"தாயுமானவர்' திட்டத்தின் நோக்கம் நூறு சதவீதம் முழுமையாக நிறைவேறும் வகையில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், அலுவலர்களின் பணி அமைய வேண்டும்; முதியோர், மாற்றுத்திறனாளிகளின் மனம் குளிரும் வகையில் கனிவாக நடந்து பணியாற்ற வேண்டும்; கூட்டுறவுத் துறை ஊழியர்கள் பெறும் நல்ல பெயர்தான், ஆட்சிக்குக் கிடைக்கும் பாராட்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கும் வேண்டுகோளிலிருந்து இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அப்போது இத்திட்டத்தை நடைமுறை சாத்தியமற்றது என மாற்றுக்கட்சியினர் விமர்சித்த நிலையில், இப்போது அத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதைக் குறிப்பிட்டு தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதாவும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் "தாயுமானவர்' திட்டத்தைப் போன்றே கர்நாடகத்தில் "அன்ன சுவிதா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 75 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் சுமார் 3.3 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். கேரளத்தில் நியாயவிலைக் கடைக்கு வந்து செல்ல முடியாத நிலையில் உள்ள முதியோர், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு அந்தந்தப் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. பயனாளிகள் எண்ணிக்கையில் ஒப்பிடும்போது தமிழகத்தின் "தாயுமானவர்' திட்டம் தனித்துவமானதாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின்கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. விற்பனையாளர், எடையாளர்கள் என 25,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நியாயவிலைக் கடைகளை முழுமையாக நம்பி தங்களது வாழ்க்கையை நடத்தும் ஏழைக் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அந்த வகையில் தாயுமானவர் திட்டம் மூத்த குடிமக்களுக்கும்,
மாற்றுத்திறனாளிகளுக்கும் வரப்பிரசாதம் என்றே கூறலாம். நியாயவிலைக் கடைகளில் ஏற்கெனவே பொருள்கள் இருப்பின்மை, எடைக் குறைவு புகார், பணியாளர் பற்றாக்குறை எனப் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனால், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மோதல் என்பது நாள் தோறும் வாடிக்கையாகிவிட்டது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தாயுமானவர் திட்டத்தால் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படவுள்ள நிலையில், ஊழியர்களின் பிரச்னைகளைக் களைவதில் அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
நியாயவிலைக் கடைகளுக்கு மாதந்தோறும் சரியான எடையில் பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்பது பணியாளர்களின் முக்கியக் குற்றச்சாட்டு. எடைக் குறைவை சரிக்கட்டுவதற்காக பணியாளர்கள் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதன் விளைவு பொதுமக்களுடனான மோதலாக முடிகிறது. எந்த ஆட்சியாக இருந்தாலும் இந்தப் பிரச்னைக்கு பொது விநியோகத் துறை நிரந்தரத் தீர்வைக் காணாமல் இருப்பது வியப்பளிக்கிறது.
கூட்டுறவுத் துறை, உணவுத் துறை எனப் பல துறைகளின்கீழ் நியாயவிலைக் கடைகள் செயல்படுவதால் பணியாளர்களின் பணிச்சூழல், ஊதியம் உள்ளிட்டவற்றில் பாகுபாடு காணப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு நியாயவிலைக் கடைகளை ஒரே துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வெளிமாவட்ட, வெளியூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக மாதாந்திர ஒதுக்கீட்டில் 10% கூடுதலாக பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயவிலைக் கடை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் தொடர்கின்றன.
"தாயுமானவர்' திட்டத்தைச் செயல்படுத்த ரூ.35.92 கோடியை அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அரசுத் துறைகளில் புதிதாக திட்டங்களை அறிவிக்கும்போது, அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது. துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பி, பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே புதிதாக
அறிவிக்கப்படும் திட்டத்தை முழு மனதுடன் செயல்படுத்த பணியாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு கூட்டுறவுத் துறையும் விதிவிலக்கல்ல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.