
நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் இருக்கும்போது, தெருநாய்கள் தொல்லை பிரச்னை உச்சநீதிமன்றம் வரை சென்றது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், நாடு தழுவிய அளவில், குறிப்பாக பெருநகரங்களில், அது மிகப் பெரிய பிரச்னையாக உருவாகி இருக்கிறது என்பதுதான் நிஜம்.
தில்லியில் தெருநாய்கள் கடிப்பதால் ரேபிஸ் நோய் பரவும் சம்பவங்கள் அதிகரித்ததாலும், ஆறு வயதுச் சிறுமி நாய் கடித்து உயிரிழந்ததாலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சில அதிரடி உத்தரவுகளை நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த திங்கள்கிழமை (ஆக. 11) பிறப்பித்துள்ளது. அந்தத் தீர்ப்பு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
"தெருநாய்கள் அகற்றப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும்; அவற்றை விடுவிக்கக் கூடாது; சுமார் 5,000 நாய்களைப் பராமரிப்பதற்கான காப்பகங்களை ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் உருவாக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்; நாய்களைப் பிடிக்க தனிநபரோ அல்லது அமைப்போ தடையாக இருந்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என்பன உள்ளிட்ட பல உத்தரவுகள் அந்தத் தீர்ப்பில் அடங்கும்.
இதை எதிர்த்து "எல்லா உயிர்களும் வாழ்வதற்குரிய இரக்கம் தேவை' என்று தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயிடம் பெண் வழக்குரைஞர் ஒருவர் புதன்கிழமை (ஆக. 13) முறையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பரிசீலனைக்கு இந்த வழக்கைத் தலைமை நீதிபதி பரிந்துரை செய்திருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியில் தொடங்கி பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். "ஒட்டுமொத்தமாக தெருநாய்களை அப்புறப்படுத்துவது கொடூரமானது. கருத்தடை, தடுப்பூசி, சமூகரீதியிலான பராமரிப்பு போன்றவற்றை மேற்கொண்டால் நாய்களையும் வதைக்காமல் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்' என்பது ராகுல் காந்தியின் வாதம்.
தெருநாய்கள் தொல்லை என்பது தில்லிக்கு மட்டுமே உள்ள பிரச்னை அல்ல; நாடு முழுவதும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது. எல்லா நகரங்களிலும் ஒவ்வொரு தெருவிலும் அச்சுறுத்தும் வகையில் நாய்கள் கூட்டம்கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், முதியவர்களும், சிறுவர், சிறுமியரும், பெண்களும் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இருசக்கர வாகனங்களில் செல்வோரின் அச்சம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தமிழக பொது சுகாதாரத் துறையின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் 2024-இல் 4.8 லட்சம் பேரும், 2025-ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 1.24 லட்சம் பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2024-இல் 47 பேரும், 2025 மார்ச் வரை 4 பேரும் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். இந்தியாவில் தினமும் சுமார் 10,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தில்லியில் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அத்தனை நாய்களையும் அடைப்பதற்கு காப்பகங்கள் அமைக்க ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இடம் தேவை. நகரங்களில் குப்பைகளைக் கொட்டுவதற்கே இடம் இல்லாத நிலையில் நாய்கள் காப்பகங்களை அமைக்க இடம் கிடைக்குமா என்பது நியாயமான கேள்வி.
அப்படியே இடம் கிடைத்தாலும் காப்பகங்களை அமைப்பதற்கான செலவு, நாய்களைப் பராமரிக்க ஆயிரக்கணக்கான ஊழியர்களை நியமிப்பது, அவர்களுக்குப் பயிற்சி, நாய்களுக்குத் தினசரி உணவு என கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்படும். எனவே, காப்பகங்கள் அமைப்பது என்பது உடனடியாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்க முடியாது.
தெருநாய்கள் தொல்லை பிரச்னையில் முதலில் துல்லியமான தரவுகள் திரட்டப்பட வேண்டும். நாய்களுக்கு கருத்தடை செய்வதன் மூலம் அதன் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். பிரச்னை அதிகரிக்கும்போது கருத்தடை செய்வதை உள்ளாட்சி அமைப்புகள் அதிகப்படுத்துவதும், பின்னர் படிப்படியாக குறைப்பதும் தொடர்கதையாக உள்ளது. அதிக நிதி ஒதுக்கி, கருத்தடை மையங்களை அதிகரித்து, கூடுதல் ஊழியர்களை நியமித்து பணிகளை விரைவுபடுத்தினால் ஓரளவுக்குத் தீர்வு காண முடியும்.
ஆனால், தெருநாய்கள் பிரச்னைக்கு அது மட்டுமே தீர்வாகாது, குப்பைக் கூளங்கள் எந்த இடத்திலும் சேராமல் அகற்றப்படுவதை உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். அதன்மூலம் நாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும், குப்பைகள் இருக்கும் இடத்தில்தான் தெருநாய்களின் நடமாட்டமும் அதன் காரணமாக இனப்பெருக்கமும் அதிகரிக்கும்.
வீணாகும் உணவுப் பொருள்களையும், இறைச்சிக் கடைகளின் கழிவுகளையும் தெருக்களில் கொட்டுவது நாய்களின் பெருக்கத்துக்கு இன்னொரு காரணம். பிற உயிர்களுக்கு இரங்குவது என்கிற பெயரில் தெருநாய்களுக்கு உணவளித்து அவற்றை ஊக்குவிப்பதும் அவற்றின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது. இவை குறித்த விழிப்புணர்வு ஏற்படாதவரை இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது.
மக்கள் மன்றம் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய முடிவு; உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதை நடைமுறைப்படுத்த முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.